எத்தியோப்பியா நாட்டில் நிலச்சரிவு

புதன் மே 11, 2016

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

எத்தியோப்பியா நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

வொலைடா-டாவ்ரோ சாலை இணைப்பு மற்றும் வொலைடா நகரத்தையும் சிடாமா பகுதியையும் இணைக்கும் பாலம் ஆகியவை கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

நிலச்சரிவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 28 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கடந்த 50 வருடங்களாக கடுமையான வறட்சிக்கு பெயர் போனது. ஆனால் எத்தியோப்பியாவின் சில இடங்களில் அடிக்கடி கனமழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.