எனக்கு சவால்கள் பிடிக்கும் !

சனி டிசம்பர் 01, 2018

வயதான தோற்றத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக தான் தயாராகி வருவதாக சமந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு பின்னர்தான் சமந்தாவின் சினிமா கேரியர் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. தனி கதாநாயகியாக அவர் நடித்த யு டர்ன் படம் வெற்றி அடைந்ததால் தொடர்ந்து அதுபோன்ற படங்களில் நடித்து வருகிறார். 

தென் கொரியாவில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் மிஸ் கிரானி. வயதான பெண் எதிர்பாராதவிதமாக இளவயது தோற்றத்தை அடைவதை மையமாகக் கொண்டு உருவாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதில் 50 வயதுப் பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தக் கதாபாத்திரம் குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இதுவரை நான் செய்யாத சுவாரசியமான கதாபாத்திரத்திற்காகத் தயாராகி வருகிறேன். இப்போது யோசித்துப் பார்த்தால் நான் பயப்படுபவளாகவும் எப்போதும் பதற்றம் கொண்டவளாகவுமே இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் சவாலை எதிர்கொள்ளத் தவறியதில்லை. சவால்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரும்பாலான நேரங்களில் நாம் நினைப்பதை விடவும் தைரியமானவர்களாகவே நாம் இருக்கிறோம்” என்று படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் தனது கதாபாத்திரம் குறித்துக் கூறியிருப்பதுடன் படங்களைத் தேர்வு செய்யும்போது இருக்கும் மனநிலை குறித்தும் பதிவு செய்துள்ளார்.