''எனக்கு புற்றுநோய் இருப்பதை மகனிடம் கூறிய அனுபவம்''-சோனாலி பிந்த்ரே

Friday July 20, 2018

நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனது மகனிடம் கூறிய அனுபவத்தையும், தனது மகன் எவ்வாறு தனக்கு ஆதரவு தருகிறார் என்பதையும்  உணர்வுப்பூர்வப் பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே பல்வேறு இந்திப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் நடித்துள்ளார். 43 வயதாகும் அவர் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். மேலும் இதற்காக அமெரிக்காவின்  நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தெரிவித்தார்.

இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை தனது மகனிடம் தெரிவித்ததையும், தனது மகனின் அளித்த ஆதரவையும் உணர்வுப்பூர்வ பதிவாக சோனாலி பிந்த்ரே பதிவிட்டுள்ளார்.

அதில், "12 வருடங்கள், 11 மாதங்கள், 8 நாட்களுக்கு முன் என் அற்புதமான மகன் பிறந்ததிலிருந்து எனது மனதை ஆண்டு வருகிறான். அன்றிலிருந்து அவனது மகிழ்ச்சியும், ஆரோக்கியமுமே எனக்கும், என் கணவருக்கும் பிரதானமானதாக இருந்தது. எனவே புற்றுநோய் இருப்பது தெரியவந்ததும் அவனிடம் எப்படி, எப்போது சொல்வது என்பதே எங்களுக்குப் பெரிய குழப்பமாக இருந்தது.

அவனை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவனிடம் முழு விவரங்களையும் சொல்வது முக்கியம் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. அவனிடம் எப்போதுமே நாங்கள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருந்துள்ளோம், இந்த முறையும் அதை மாற்ற விரும்பவில்லை. இந்தச் செய்தியை முதிர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். உடனே என் நேர்மறை எண்ணங்களுக்கும், மனோபலத்துக்கும் ஆதாரமானான். இப்போதெல்லாம் சில சூழல்களில் அவன் ஒரு தகப்பனாக இருந்து, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறான்.

இது போன்ற சமயங்களில் குழந்தைகளையும் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமானது என நான் நம்புகிறேன். அவர்களுக்கு சூழலைக் கையாளும் திறமை நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கிறது. அவர்களைக் காத்திருக்க வைத்து, எதையும் சொல்லாமல் மறைத்து, அவர்களே எப்படியும் அதைத் தானாக அறிந்துகொள்வதை விட, அவர்களுடன் நேரம் செலவழித்து, அவர்களையும் ஈடுபடுத்துவது முக்கியம்.

வாழ்க்கையின் நிதர்சனத்திலிருந்தும், வலியிலிருந்தும் அவர்களைக் காக்கும் முயற்சியில் அதற்கு நேர்மாறான விளைவுகளை நாம் ஏற்படுத்தக்கூடும்.

ரன்வீர் கோடை விடுமுறையில் இருக்கும் இந்த நேரத்தில் அவனுடன் நேரத்தைச் செலவிடுகிறேன்.  அவனது விளையாட்டும், சேட்டைகளும் நேர்மறையாக இருக்க உதவுகின்றன. இன்று, ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி வலிமையைப் பெற்றுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு கீழே சோனாலியின் ரசிகர்கள் பலரும் அவர் புற்றுநோயிலிருந்து விடுபட வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.