எனது தங்கைகள் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர் !

Tuesday June 05, 2018

நீட் தேர்வால் உயிரிழந்த எனது தங்கைகள் அனிதாவும் பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

மருத்துவ படிப்பை விரும்பிய மாணவர்களின் இலக்கிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்த இந்த நீட் தேர்வை தடை செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி வருடந்தோறும் தவறாமல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா என்ற மாணவி தோல்வியடைந்துள்ளதால், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பலர் ஆழ்ந்த இரங்கலையும், நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்தபின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும். எனது தங்கைகள் அனிதாவும் பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர். பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே...” என்றார்.