எனது தவறுக்கு வருந்துகிறேன்!

Tuesday April 10, 2018

பல கோடிக்கணக்கான முகநூல்  பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்த விவகாரத்தில் எங்களது பொறுப்புகளை நிறைவேற்றாத தவறுக்கு வருந்துகிறேன் என மார்க் ஜுக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னர் இன்றும் நாளையும் (ஏப்ரல் 10,11) பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.

இதற்கிடையில், நேற்று சில நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த மார்க் ஜுக்கர்பர்க் விசாரணை குழுவினரிடம் எழுத்துமூலமாக தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அவரது வாக்குமூலம் பத்திரிகைகளுக்காக வெளியிடப்பட்டது.

‘கல்லூரி பருவத்தில் நான் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தொடங்கினேன். நான்தான் அதை நடத்துகிறேன். சுமார் 200 கோடி மக்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுடன் தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். இங்கு எது நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பேற்றாக வேண்டும்.

பொய் செய்திகள், தேர்தல்களில் பிறநாடுகளின் தலையீடு, வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள் போன்ற தீமைகளும் எங்களது சமூகவலைத்தளத்தில் பரவுவதை தடுக்கும் வகையில் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை என்பது தற்போது தெளிவாக புரிகிறது.

எங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக அகன்ற தொலைநோக்குப் பார்வையை செலுத்தாமல் போனது மிகப்பெரிய தவறு. அது என்னுடைய தவறு. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்ததாக அந்த பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.