எனது பிள்ளையின் காணி!

திங்கள் நவம்பர் 26, 2018

போகவும் வரவும்
நான் பார்த்துக்கொண்டு போகிற
எனது பிள்ளையின் காணியை
இவர்கள் உழுது வைத்திருக்கிறார்கள்.
எனது பிள்ளையும்
அவனது நண்பர்களுமாய் சேர்ந்து
நட்டு வைத்த விதைகளை
முளைவிடும் முன்னமே
இவர்கள் கிளறியெறிந்து விட்டார்கள்.

பூக்களெதுவும் பூக்காதபடி
எனது பிள்ளையின் காணி எரியூட்டப்பட்டிருக்கிறது.
வெளிச்சங்களெதையும் எரியவிட முடியாதபடி
அங்கு பச்சை இருட்டுக்கள் காவலிருக்கின்றன.

எந்த உறுதிகளையும் 
கைகளில் வைத்திருக்காதவர்கள்
எனது பிள்ளையின் காணியை பார்க்கவிடாமல்
என்னை தடுக்கிறார்கள்.

அங்கே 
எனது பிள்ளையும் அவனது நண்பர்களும்
பசியுடன் படுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்காய்
குடிப்பதற்கு நீர் கொண்டு போகவும்
சாப்பிடுவதற்கு பலகாரம் கொண்டு போகவும்
இம்முறையும் முடியாமல் போயிற்று
இந்த முதுமை விழுந்த தாயாலே.

எனது பிள்ளைகளுக்கான நேரத்தில்
ஆலயங்களெதிலும்
தீபம் காட்டி மணியடித்து
அர்ச்சனை செய்விக்கமுடியாதபடி
நான் வாழும் நிலத்தையும்
இவர்கள் 
ஏறி மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 தீபிகா