என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்!

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ஆம் திகதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில், கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கமல் கலந்து கொண்டு பேசினார். அதில், இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்றும், அதற்கான பயணம் அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் கமல் பேசினார். அப்போது எனக்கு பல சகோதரர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து இங்கு சரியாக இல்லை, அதை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என்றும் கமல் தெரிவித்தார்.