என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும்!

வெள்ளி ஓகஸ்ட் 03, 2018

இயக்குனர்கள் நிறத்துக்காக பிறமொழி நடிகைகளை கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களா என்று சந்தேகப்படுவதாக கூறிய பாரதிராஜா, என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் என்றார். 

பாரதிராஜா இயக்கி நடித்துள்ள படம் ஓம். இதில் கதாநாயகியாக நட்சத்திரா என்னும் புதுமுகத்தை நடிக்க வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் அதிகமாக புதுமுகங்களை வைத்து படம் இயக்கவே விரும்புவேன்.

பிரபலமான நடிகர்கள் படத்தில் இருந்தால் ரசிகர்களுக்கு இவர் இதை செய்வார் என்னும் எண்ணம் இருக்கும். ஆனால் புதுமுகங்கள் என்றால் கதையில் மட்டும் கவனம் இருக்கும். இந்த படத்தில் கூட பிரபல நடிகைகள் நடிக்க ஆர்வமாக இருந்தார்கள்.

ஆனால் கதைக்காக நட்சத்திராவை பிடிவாதமாக இருந்து தேர்வு செய்தேன். தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் கதாநாயகிகள் குறைந்து விட்டார்கள். காரணம் தமிழ் பெண்கள் இன்னமும் சினிமாவில் நடிக்க வர தயங்குகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை.

ஒருவேளை இயக்குனர்கள் நிறத்துக்காக பிறமொழி நடிகைகளை கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களா என்றும் சந்தேகமாக இருக்கிறது. என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.