என் மீதான குற்றச்சாட்டுக்களை நீக்க வேண்டும்!

Wednesday February 07, 2018

விசாரணை முடிவடையும் முன்பே என் மீது குற்றம் சுமத்தி பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், கடந்த மாதம் 21-ந் திகதி சசிகலாவுக்கு ஒரு சம்மன் அனுப்பியது.

அதில், தங்களுக்கு (சசிகலாவுக்கு) எதிராக பலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்து இருப்பதால் அதற்கு நேரிலோ, வக்கீல் மூலமோ ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து, அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்த பின்பு தனக்கு எதிராக புகார் மற்றும் சாட்சியம் அளித்த அனைவரின் விவரங்களையும், ஆவணங்களையும் அளித்து சம்பந்தப்பட்ட நபர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதன்பின்பு தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கும்படியும் ஆணையத்தில் சசிகலா தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணையம், சசிகலாவின் கோரிக்கையை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக இதுவரை சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு வசதியாக சாட்சியங்களை பெற்றுக்கொள்ளவும், இனிவரும் காலங்களில் சாட்சியம் அளிப்பவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணை செய்து கொள்ளவும் அனுமதி அளித்தது. மேலும், இந்த உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த 30-ந் திகதி ஆணையம் கெடு விதித்தது.

இந்த உத்தரவு நகல் மற்றும் சாட்சியங்களின் நகல் ஆகியவற்றை ஆணையம் உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு அனுப்பி வைத்தது. இவற்றை சசிகலா 1-ந் திகதி பெற்றுக்கொண்டுள்ளார். அதன்படி சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணையம் விதித்த கெடு இன்று (புதன்கிழமை) முடிவடைகிறது.

இந்தநிலையில் சசிகலா தனது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் மூலம் ஆணையத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

எனக்கு (சசிகலா) எதிராக ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரங்கள் அனைத்தையும் அளிக்க வேண்டும். அவ்வாறு ஆவணங்கள் அளிக்கப்பட்டதில் இருந்து, 10 நாட்களுக்குள் வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பவர்களிடம் எனது தரப்பு வக்கீல் அவ்வப்போது குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். அதுபோன்று சாட்சியம் அளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து சாட்சிகளிடமும் விசாரணையை முடித்த பின்பு ஒரு வாரம் கால அவகாசம் அளித்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற காணொளி வெளியானது தொடர்பான விவகாரத்தை சுட்டிக்காட்டி உள்ள ஆணையம், எனக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் ஆணையம் அமைக்கப்பட்டதும் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சியை உறவினரிடம் கொடுத்ததற்கு பதிலாக ஆணையத்தில் தாக்கல் செய்து இருக்கலாம் என்றும், விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி முடித்த பின்பு குறுக்கு விசாரணை செய்யவும், வாக்குமூலத்தை தாக்கல் செய்யவும் கோருவதாகவும் அந்த உத்தரவில் கூறி உள்ளது.

ஆணையம் அமைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டதும் முதல் ஆளாக நான், எனது வாக்குமூலத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், அனைத்து உண்மைகளையும் சொல்வதற்கு நான் முன்வரவில்லை என்றும் அந்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆணையம் விசாரணையை முடிப்பதற்கு முன்பே என் மீது இதுபோன்று குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல. இது, ஆணையம் விசாரணையை சரியாக மேற்கொள்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, ஆணையம் தனது உத்தரவில் என் மீது கூறி உள்ள அந்த குற்றச்சாட்டுக்களை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.