எம்.ஜி.ஆர். அனிமே‌ஷன் படத்தில் ஜெயலலிதா!

வியாழன் ஏப்ரல் 05, 2018

எம்.ஜி.ஆர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ அனிமேஷன் திரைப்படத்தில் ஜெயலலிதா நாயகியாக வருகிறார். எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டாம் பாகமாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது.

அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படம் தற்போது அனிமே‌ஷனில் தயாராகிறது. எம்.ஜி.ஆரின் நண்பர், மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ், வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ தொடங்கி ‘பட்டிகாட்டு பொன்னையா’ வரை 28 படங்களில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஜெயலலிதா இந்த அனிமே‌ஷன் படத்தின் நாயகியாக வருகிறார்.

படம் பற்றி கூறிய ஐசரி கணேஷ்....

“எனக்கு 7 வயது இருந்த போது வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தை 21 முறை பார்த்திருக்கிறேன். அதன் இரண்டாம் பாகத்தின் கதையும் எனக்கு தெரியும். குழந்தைகள், இளைஞர்கள் உட்பட எல்லோராலும் இன்றும் ரசிக்க கூடிய வகையில் படம் இருக்கும். முன் தயாரிப்பு பணிகள் முடிந்து விட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, சூடான் ஆகிய இடங்களை சுற்றி கதை நடக்கும்”என்று கூறினார்.