எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த்!

Monday March 05, 2018

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று (5) திறந்து வைத்தார்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம் சென்னை வேலப்பன் சாவடியில் “டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்” நடத்திவருகிறார். அந்த பல்கலைக்கழக வளாகத்தில் தாய்மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சில கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளின் 30-ம் ஆண்டு விழா இன்று தொடங்கியது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதற்காக போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்துக்கு வழிநெடுகிழும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக ஈவேரா நெடுஞ்சாலையில் வழிநெடுகிழும் பதாகைகள், தோரணங்களை கட்டி அவரது ரசிகர்கள் திரளாக கூடி நின்று வரவேற்றனர்.

திறந்த காரில் நின்றவாறு ரசிகர்களை நோக்கி கையை அசைத்த ரஜினிகாந்த் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்திற்கு வந்த அவரை ஏசி சண்முகம் வரவேற்றார். இதனை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். பின்னர், எம்.ஜி.ஆர் பெயரிலான விருதுகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அங்குள்ள மாணவ-மாணவரிடையே கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை வையாபுரி மற்றும் இலங்கை கல்வி மந்திரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளனர்.