எலி ஏன் அம்மணமாக ஓடுகின்றது? - பிலாவடி மூலைப் பெருமான்

Monday October 08, 2018

வணக்கம் பிள்ளையள்!

என்ன, எல்லோரும் சுகம் தானே..?

என்னடா புதுசா ஒரு கிழவன் கிளம்பி விட்டான் என்று நீங்கள் நினைக்கிறது எனக்கு விளங்குது. அது என்ன விசயமென்றால் பாருங்கோ இஞ்சை கனடாவில் இருக்கிற எங்கட தமிழ் ஆக்கள் சில பேருக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய இருக்குது. பாகுபலி படத்தில் வாறது மாதரி அரசன் போல் உடுத்துக் கொண்டு ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடுவது, பல்லக்கில் ஏறி கலியாண வீடு செய்யிறது, றேடியோக்காரங்களை கூப்பிட்டு சாமத்திய வீட்டுக்கு நேரடி ஒலிபரப்புச் செய்யிறது என்று பல சின்னச் சின்ன ஆசைகள். எனக்கும் பிலாவடிமூலையில் போய் குந்தியிருந்து கள்ளுக் குடிக்க ஒரு ஆசை. அண்டைக்கு ஒருத்தர் சொன்னவர் தான் ஒரு காணியயான்று வாங்கியிருக்கிறன் என்றும், அதில் இருக்கிற மரத்தின் கீழ் கொட்டில் போட்டுத் தான் கள்ளுத் தவறணை நடத்தப் போகிறேன் என்றும். பிறகென்ன, என்ரை பிலாவடிமூலை ஆசை நிறைவேறின மாதிரித்தான்.

சரி, விசயத்துக்கு வாறன்.

போன கிழமை என்ரை நண்பன் ஒருத்தன் யாழ்ப்பாணத்தில் இருந்து கதைக்கேக்குள் சொன்னவன், ‘இஞ்சை எலி ஒன்று யாழ்ப்பாணத்துக்கும், நல்லூருக்கும் இடையில் அம்மணமாக ஓடித் திரியுது’ என்று. ‘எலி என்ன சட்டை போட்டுக் கொண்டா திரியும்?’ என்று நீங்கள் முணுமுணுக்கிறது எனக்கு விளங்குது. அது என்னென்டால் கண்டியளே, எங்கடை வீட்டில் நாங்கள் பெடியள் முந்தி சரியான குழப்படி. ‘உதென்ன இந்தக் கிழவன் தன்னைப் பெடியன் என்று சொல்லுது’ என்று நீங்கள் கொடுப்புக்குள்ளை சிரிக்கிறது எனக்கு விளங்குது. அந்தக் காலத்தில் நான் பெடியன் தானே? அப்ப என்ன கிழவனாகவே இருந்தனான்? அந்த நாட்களில் நான் செய்யாத அநியாயமே இல்லை. தெருவில் ஆராவது கிழவன்மார் போனால் அவையளைக் கூப்பிட்டு, ‘அப்பு எப்ப சாகப் போறாய்?’ என்று கேட்பேன்.

நல்ல வேளை, இது வரைக்கு என்னைப் பார்த்து ஒருத்தரும் இப்படி கேட்டதில்லை. சரி, எலி அம்மணமாக ஓடும் விசயத்துக்கு வருவம். அது பாருங்கோ நாங்கள் வீட்டில் குழப்படி செய்து போட்டு ஏதாவது நல்ல சினிமாப் படம் பார்க்க வேண்டும் என்றால், உடனே அடுப்படிக்குள் போய் குந்தியிருந்து ஆச்சிக்கு விழுந்து விழுந்து உதவி செய்வோம். ஆச்சியும் எங்களை ஒரு மாதிரி பார்த்துப் போட்டு எங்களிட்டை வேலை வாங்கும்.

வேலை முடிஞ்சதும், ஆச்சியைக் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சிக் காசு வாங்கிக் கொண்டு படம் பார்க்க போய்விடுவம். அப்பேக்குள்ளை ஆச்சி சொல்லும்: ‘இப்பத்தான் விளங்குது எலி ஏன் அம்மணமாக ஓடினது என்று...’

நாங்கள் அப்ப செய்த மாதிரித்தான் இப்ப எங்கடை சுமந்திரன் மாத்தையாவும் செய்கிறார். அண்டைக்கு ஆள் யாழ்ப்பாண நீதிமன்றம் போய் தியாகி திலீபனின் நினைவு நாளைக் கொண்டாடுறதுக்கு பொலிஸ் போடக் கோரியிருந்த தடைக்கு எதிராக வழக்காடி வென்று வந்தவராம்.

இதைவிட வேற குசும்பேதும் இருக்க முடியுமே?

தனக்குப் புலம்பெயர்ந்த புலிகளால் ஆபத்து என்று சொல்லி எஸ்.ரி.எப் பாதுகாப்பில் சுத்தித் திரியிறார் எங்கடை சுமந்திரன் மாத்தையா. எஸ்.ரி.எப் என்றால் சும்மா ஆட்கள் இல்லை பாருங்கோ. உந்தப் பாழ்படுவார் தான் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் ஆயிரக்கணக்கில் எங்கடை சனத்தைக் கொன்று குவிச்சவங்கள். எஸ்.ரி.எப் என்றால் எனக்கு உடனே ஞாபகத்துக்கு வாறது 1990ஆம் ஆண்டு நடந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலை தான். பிரளுவார்: எத்தனை சனத்தைக் கொண்டவங்கள்.

உந்த எஸ்.ரி.எப் பாதுகாப்போடைதான் மாத்தையா திரிகிறார். எஸ்.ரி.எப் என்றது சிங்களப் பொலிசின்ரை கொமாண்டோ பிரிவு என்றது கன பேருக்குத் தெரியாது. அன்றைக்கு நீதிமன்றத்துக்கு சுமந்திரன் மாத்தையா போகேக்குள்ளையும் எஸ்.ரி.எப்காரன்க ளோடை தான் போனவர். ஆக பொலிஸ் போட்ட வழக்கை எதிர்த்து வாதாட பொலிஸ் பாதுகாப்போடு.

இப்ப உங்களுக்கு விளங்கியிருக்கும். ‘நீங்கள் வழக்கைப் போடுகிற மாதிரி நாடகம் போடுங்கோ, நான் அதை எதிர்த்து வாதாடுகிற மாதிரி நடிச்சு வெல்கிறேன்’ என்று பொலிசுக்கு சொல்லிப் போட்டு சுமந்திரன் மாத்தையா யாழ்ப்பாண நீதிமன்றத்துக்குப் போய் வழக்காடினவர் என்ற சங்கதி.

புலியயதிர்ப்புவாதம் பேசி அரசியல் செய்யும் சுமந்திரன் மாத்தையா ஏன் இப்படி நாடகம் போட்டவர் என்று நீங்கள் நினைக்கலாம். வேறையயான்றும் இல்லை பாருங்கோ: கெதியில் தேர்தல்கள் வரப் போகுது. ஒரு பக்கத்தில் இன்றைக்கோ, நாளைக்கோ என்று வடக்கு மாகாண சபை ஊசலாடிக் கொண்டிருக்குது. எந்த நேரமும் மாகாண சபை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி வந்து விடும். ஏற்கனவே கிழக்கு மாகாண சபையும் கலைக்கப்பட்டு அங்கை இப்ப ஆளுநரின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கின்றது.

எப்பிடியும் அடுத்த வருசத் தொடக்கத்தில் இரண்டு மாகாண சபைகளுக்கும் தேர்தல் வந்து விடும். அதை விட அடுத்த தை மாதத்துக்குப் பிறகு எந்த நேரமும் சனாதிபதி தேர்தலும் நடக்கலாம்.

முந்தி தேனிசை செல்லாப்பாவையும், எஸ்.ஜி.சாந்தனையும் பிடிச்சு நாலு எழுச்சிப் பாடல்களைப் பாட வைத்துச் சனத்தின் வாக்குகளை எடுத்தது போல் இந்த முறையும் வாக்குப் பிச்சை எடுக்கிறதுக்கு எங்கடை கூத்தமைப்புக்காரர் தயாராகிக் கொண்டிருக்கீனம். உதுதான் சுமந்திரன் மாத்தையா அரங்கேற்றிய வழக்கு நாடகத்தின்ரை சூட்சுமம் பாருங்கோ.  அதுக்குள்ளை இன்னுமொரு பிரச்சினையும் அரசல் புரசலாக அடிபடுகிறது. விக்னேசுவரன் ஐயாவை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கிப் போட்டு அவரின் இடத்திற்கு யாரை நியமிப்பது என்பதுதான் அந்தப் பிரச்சினை.

ஏற்கனவே மாவை சேனாதிராஜா சொல்லிப் போட்டார், இந்த முறை தான் தான் வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டி போடுவன் என்று. அதுக்குள் எங்கடை வாத்தியாரும் புகுந்து விளையாடப் பார்க்கிறாராம்.

நான் எங்கடை வாத்தியார் சிவஞானம் சிறீதரனைச் சொன்னேன் பாருங்கோ. மாஸ்ரர், யஹட் மாஸ்ரர் என்று இருந்த மனிசன் இப்ப எம்.பி ஆகி ஒரு கலக்குக் கலக்குகிறார். அவருக்கு இப்ப முதலமைச்சர் ஆகும் ஆசை வந்திட்டுதாம். அதுதான் சுமந்திரனுக்கு வயித்துக்குள் குத்துதாம்.

ஆசை ஆரைத் தான் விட்டது?

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் மாத்தையாவை நிறுத்தினால் நல்லது தானே என்று தென்மராட்சியில் இருக்கிற வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருத்தர் கிட்டடியில் சிறீதரன் வாத்தியாரிடம் சொல்லி அவரது வயிற்றில் புளியைக் கரைத்து விட்டிட்டாராம். அந்த வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஒரு அப்புக்காத்து பாருங்கோ. எந்த வழக்காடு மன்றத்துக்கு சுமந்திரன் மாத்தையா போனாலும், அவரின்ரை பைலைக் காவிக் கொண்டு இவரும் பின்னால் போய் விடுவாராம். ஆக மொத்தத்தில் கெதியிலை கூத்தமைப்புக்கள் ஒரு குடுமிப் பிடிச் சண்டை இருக்குது என்றது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரியுது! இந்த வயசில் எனக்குக் கண் தெளிவாகத் தெரியுதோ, இல்லையோ, அது மட்டும் தெளிவாகத் தெரியுது.

இப்ப உங்களுக்கு தெளிவாக விளங்கியிருக்கும்: யாழ்ப்பாணத்துக்கும், நல்லூருக்கும் இடையில் எலி ஒன்று அம்மணமாக ஓடித் திரிந்தது என்று என்ரை நண்பர் போன கிழமை எனக்குச் சொன்னதின்ரை அர்த்தம்.

சரி, போய்ட்டு வரட்டே பிள்ளையள்..? அடுத்தமுறை பிலாவடி மூலையைத் தேடி வரேக்குள்ள இன்னும் சில சங்கதியளோடை வாறன்.

நன்றி: ஈழமுரசு