எல்லாவற்றையும் தவறு என்று சொல்லக் கூடாது-கமல்ஹாசன்

வியாழன் டிசம்பர் 20, 2018

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். பொன் மாணிக்கவேல் அதை மறுத்துள்ளார். யார் சொல்வது நியாயம் என்பதை புரிவதற்கு எனக்கு நேரம் தேவைப்படுகிறது.

நேர்மை, நியாயம் எந்த பக்கம் உள்ளது என்று ஆராய்ந்து விட்டுதான் சொல்ல வேண்டும். ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்று நாமும் குற்றம் சாட்ட முடியாது. தடைகளை கடந்து பணியாற்றுவேன் என்று பொன் மாணிக்கவேல் கூறி இருக்கிறார். வேறு வழியல்ல.

அவர் அப்படித்தான் பணியாற்ற வேண்டும். ஏனென்றால் அரசியல் அழுத்தம் என்பது நேர்மையான எல்லோருக்கும் உண்டு. அவருக்கும் அழுத்தம் இருக்கும் என்றால் நாம் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

விஷால் மீது புகார் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு தரப்பினர் பூட்டு போட்டுள்ளனர். அவர் மீது கூறப்படும் புகார்கள் உண்மையா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை. அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டை ஆராய வேண்டும். ஆராய்வதற்கு விஷாலுக்கு மனம் இருக்க வேண்டும்.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் உண்டு.சீதக்காதி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். படங்கள் மீது வழக்கு தொடருவதற்கு ஆரம்ப விழாவாக இருந்தது எனது படங்களாகத்தான் இருக்கும்.

ஒரு படத்தை பார்த்து விட்டுதான் ஏதாவது தவறு இருக்குமானால் கருத்து சொல்ல வேண்டும். அதை விட்டு எல்லாவற்றையும் தவறு என்று சொல்லக் கூடாது. கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.