எல்லைக் கிராமங்களில் அடிப்படை வசதிகளின்றி தமிழ் மக்கள் பாதிப்பு

Friday June 01, 2018

தமிழ் இன விடுதலைக்கான முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தினால் ஆக்கிரமிப்பு படைகளின் கெடுபிடிகளினால் கிழக்கு மாகாணத்தின் தமிழர் வசிக்கும் எல்லைக் கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களை இன்று வரைக்கும் மீள்குடியேற்ற கொழும்பு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போர் முடிவடைந்த பின்னர், காடுகள் மண்டிக்காணப்படும் தமது சொந்த இடத்திற்கு மக்கள் மீள்குடியேற செல்கின்ற போது வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்கின்றார்கள். மறுபுறத்தில் இப்பகுதி தொல்பொருள் திணைக்களகத்திற்கு சொந்தமானது எனத் தடுக்கின்றார்கள். அதுமாத்திரமின்றி சில பகுதிகளில் முன்னர் பெளத்த விகாரைகள் இருந்ததாக கூறி பெளத்த பிக்குகள் போராட்டங்களை நடாத்துகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்த பூர்விக நிலங்கள் இன்று இலங்கையிலுள்ள மாற்றினத்தவர்களினால் சூறையாடப்படுகிறது. போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்பற்று செங்கலடி போன்ற படுவான்கரையில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எல்லைக்கிராமங்களில் தமிழ் மக்கள் இன்றும் மீள்குடியேற முடியாதுள்ளது.

யுத்தகாலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மத்திய முகாம், 39 கொலனி, வக்கியல்ல, கெவீளியாமடு, தெவிலாணை, மரப்பாலம், பெரியபுல்லுமலை, கோப்பாவெளி, போன்ற கிராமங்களில் மக்கள் தமது சொந்த முயற்சியினால் மீள்குடியேறினாலும், ஒரு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் கொழும்பு அரசாங்கம் தொடர்ந்து புறக்கணிக்கின்றது.

மட்டு - அம்பாறை மாவட்டத்தின் எல்லை பகுதியில் ஊர்காவல்படையினருக்கென வயல்காணிகளையும், மேட்டுநிலக்காணிகளையும் வழங்கி சிங்களவர்களை குடியேற்றுகின்றனர். இக்குடியேற்றம் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளையும் தாண்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகப் பகுதிக்குள் அத்துமீறி நுழைகின்றனர். இது  தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக தமிழர் பூர்விக கிராமங்களை மீளக் கட்டியயழுப்புவதற்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் கூடுதலான நிதிகளை கடனாகவும், மானியமாகவும் வழங்குகின்ற போதிலும், இவற்றின் அதிகமான நிதியானது பெரும்பான்மைச் சமூகம் வாழ்கின்ற மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படுவது டன், தென்பகுதியில் வசிக்கும் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக் கைகயை கொழும்பு அரசாங்கம் முன்னெ டுத்துவருகிறது.

தமிழர் வசிக்கும் எல்லைக் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு, ஒழுங்கான வீதி இல்லை, வைத்தியசாலை வசதிகள் இல்லை, போக்கவரத்துவசதிகள் இல்லை, காட்டு மிருகங்களின் தாக்கம், பாடசாலைகள் அபிவிருத்தியில்லை இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைகிறது. ஆனால், சிங்கள மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஆண்டு ஐந்துக்குட்பட்ட பாடசாலையாக இருந்தாலும் அனைத்து வசதிகளையும் கொழும்பு அரசாங்கம் செய்து கொடுக்கிறது.

எனவே, போர் ஏற்பட்டு முடிவடைந்தும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இனப்பாகுபாட்டுடனே நடந்துகொள்கின்றது. சிங்கள இனத்துக்கும், தனது இனத்துடன் சார்ந்து நிற்கும் முஸ்லீம்களுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் நிலைமையே காணப்படுகின்றது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் கிராமங்களின் உட்கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதில் கொழும்பு அரசாங்கம் கவனம் எடுக்கவில்லை. தமிழ் கிராமங்களில் காணப்படும் வீதிகள் மழைகாலங்களில் மாத்திரமின்றி இயல்பான காலங்களிலும் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என பலரும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் இக்கிராமங்களுக்கு வாக்குகேட்டுவரும் தமிழ் அரசியல்வாதிகள் கூட சேதமடைந்து காணப்படும் இவ்வீதியை புனரமைத்துத் தருவதாக வாக்குறுதிகளை வழங்குகின்ற போதிலும், தேர்தல் முடிவடைந்த பின்னர் இப்பகுதிக்கே வருவதில்லை.

கடந்த காலங்களில் இக்கிராமம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிருந்தமையினால், இப்பகுதியில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு கொழும்பு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனினும் தற்போது யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும், தமிழர் பகுதிகளில் உட்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் காணப்படும் காடுகளை பொருளாதார நோக்கத்திற்காக கொழும்பு அரசாங்கம் அழிப்பதனால் காட்டு மிருகங்கள் அனைத்தும் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையயடுக்கின்றன. கடந்த மூன்று மாத காலமாக யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து வாழைமரம், தென்னைமரம், நெல் மூட்டைகளை உட்கொள்வதுடன் உடமைகளையும் சேதப்படுத்துகின்றன. சம்பூர் பகுதியில் 12க்கும் மேற்பட்ட யானைகள் கொண்டுவந்து விடப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்னர் மூதூர் வைத்தியசாலைக்கு பின்பக்கமாக வந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு சம்பூர் பகுதியில் இடம்பெற்ற உக்கிர போர் நடவடிக்கையினால் அப்பகுதி மக்கள் முற்றாக இடம்பெயர்ந்து 9 வருடங்களுக்கு பின்னர் மீள்குடியேறினர். போர் நடவடிக்கையினால் அனைத்து பொருளாதாரங்களையும் இழந்த சம்பூர் மக்களை சிங்களப் பகுதியில் இருந்து சிங்களவர்களினால் கொண்டுவந்து விடப்படும் யானைகளும் பல இழப்புக்களை ஏற்படுத்துகின்றன.

யாVனைகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக காட்டு பகுதி ஊடாக செல்லும் வீதியில் உள்ள மின்கம்பங்களில் வீதி விளக்குகளை பொருத்துவதன் மூலம் ஓரளவு குடியிருப்புப் பகுதிக்கு வரும் யானைகளை கட்டுப்படுத்த முடியும் என சம்பூர் கிராம பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் அதனை அரச அதிகாரிகள் செவிமடுப்பதாக இல்லை.

‘கிழக்கில் இருந்து’ எழுவான்

நன்றி: ஈழமுரசு