எளிமையாக நடக்கவிருக்கும் இம்ரான்கான் பதவியேற்பு!

Thursday August 02, 2018

பாகிஸ்தானில் ஆகஸ்ட் 11-ம் திகதி இம்ரான் கான் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ம் தpfதி நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முதன்முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கைவசம் இல்லாததால், சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

மோடிக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் பேசிய தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி, முன்னர் இம்ரான் கானின் நண்பர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சித், மற்றும் இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கும், இந்தியா, சீனா உட்பட சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதாவும், வெளிநாட்டு தலைவர்களை விடுத்து, நண்பர்களை மட்டும் அழைத்து, தனது பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த இம்ரான் கான் விரும்புவதாவும் ஃபவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.