ஏ.கே. ரக துப்பாக்கி தயாரிப்பு ஒப்பந்தம் நிராகரிப்பு!

Thursday September 06, 2018

தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில், ஏ.கே. ரக துப்பாக்கிகளை தயாரிக்க ரஷ்ய நிறுவனம் முன் வந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

 ரஷ்யாவை சேர்ந்த ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் கலாஷ்நிகோவ் நிறுவனத்தின் ஏ.கே.47 ரக துப்பாக்கி உலகளவில் பிரபலமானது. இந்திய ராணுவ வீரர்களும் இத்தகைய துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். இச்சூழ்நிலையில், இந்த நிறுவனம் இந்தியாவை சேர்ந்த அதானி நிறுவனத்துடன் இணைந்து ஏ.கே.103 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைத்து தயாரிக்க முன் வந்துள்ளது. இது ஏ.கே.47 ரக துப்பாக்கியை விட மிக நவீன வசதிகளை கொண்டது. 

கடந்த ஏப்ரல் மாதம் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஷ்யா சென்றிருந்த போது இது குறித்து பேசப்பட்டது. ஆனால், மத்திய அரசின் கொள்கைகளின்படி, மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ தளவாட தொழிற்சாலையுடன் இணைந்து தான் இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும். 

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு செயல்படுத்த முடியாது. எனவே, ரஷ்யாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ராணுவ வீரர்களுக்கு ஏழு லட்சம் துப்பாக்கிகள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இச்சூழ்நிலையில் தான் ரஷ்யா இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்திற்கு அச்சாரம் போட்டது. ஆனால், அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.