ஏமனில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு!

Thursday August 09, 2018

உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் ஏமனில், குழந்தைகள் சென்ற பேருந்து மீது விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் பலியாகி உள்ளனர். 

எமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்கு அரசுக்கு உதவியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை வடக்கு  ஏமனில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

சவுதி கூட்டுப்படை பேருந்து மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 39 பேர் இறந்ததாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும் கிளர்ச்சிக்குழு ஆதரவு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் கூட்டுப்படை தரப்பில் வான் தாக்குதல் நடத்தியதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

உள்நாட்டு போர் நடைபெறும்பொது பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச மனிதாபிமான சட்டம் சொல்வதாகவும், அதனை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் ரெட் கிராஸ் அமைப்பு கூறியுள்ளது.