ஏமன் துறைமுகத்தில் விமான தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி!

ஏமனில், எண்ணெய் கடத்தல்காரர்களை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் 22 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏமனின் ஹோடிடா துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கடத்தல்காரர்களை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 22 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக அந்த பகுதியில் இருந்த மக்களும், மீனவர்களும் கூறியுள்ளனர். இந்த தாக்குதலில் துறைமுகம் அருகேயுள்ள அல் கோகா நகரில் இரண்டு படகுகளும் சேதமடைந்தன.
மாரிப் என்ற மாகாணத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஏமன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்று மட்டும் 20க்கும் மேல் விமானம் மூலம் தாக்குதல் நடந்துள்ளதாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த வாரம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.