ஏமாளிகளாக்கப்படும் எம்மவர்! - கந்தரதன்

சனி டிசம்பர் 12, 2015

இன்று தமிழர்களின் உயிரிழப்பில் உயிர்வாழும் ஊடகம் ஒன்று அந்தத் தமிழர்களையே ஏமாளிகளாக்கும் நிலையில், இறங்கியுள்ளமை அனைவரையும் விசனமடையவைத்துள்ளது.

இந்தாண்டுக்கான மாவீரர்களை நினைவுகூரும் புனித நிகழ்வுகளை நிறைவுசெய்துள்ள நிலையில் நிற்கின்றோம். ஆனால், புலம்பெயர் தேசங்களில் மானமறவர்களை நினைவுகூரும் நிகழ்வு பல பகுதிகளிலும் நிறைவுகண்ட நிலையில், குறித்த ஊடகம் பிரமாண்டமாக நடைபெற்ற மாவீரர் நாளைக் கொச்சைப்படுத்தத் தவறவில்லை.

கடந்த காலங்களில் அரங்க நிகழ்வுகளாக இடம்பெற்ற மாவீரர் நாளை தவறு என்று விமர்சித்ததுடன், கடும் குளிருக்கு மத்தியிலும் தாயக மாவீரர் தினம்போன்றே திறந்தவெளி நிகழ்வாகச் செய்யவேண்டும் எனவும்  குறித்த ஊடகம் முன்னர் விமர்சித்துவந்ததுடன், வழமைக்கு மாறான போட்டி மாவீரர் தினங்களை ஊக்குவித்து அதனை செய்திகளாக முதன்மைப்படுத்தி புகைப்படங்களுடன் வெளியிட்டு, வழமையான மாவீரர் தினங்களை சீர்குலைப்பதற்கு கங்கணம் கட்டி நின்றமை விரைவில் மறந்து விடக்கூடிய நிகழ்வுகள் அல்ல.

இதேவேளை, பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் கடந்த 27.12.2015 வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்ட மாவீரர் தினத்தைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் குறித்த ஊடகம் இறங்கியிருந்தமை அம்பலமாகியுள்ளது.

பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் தினத்தின் ஆரம்ப காணொளியை போட்டுவிட்டு, தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தான்தோன்றித்தனமாக நடத்தப்பட்ட மாவீரர் தினப் புகைப்படங்களைப்போட்டு, தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் என உரியதரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நாளில், ஈழமுரசு பத்திரிகை மக்களின் பாவனைக்கு வைக்கப்பட்டது. இதனைக் கண்டுபொறுக்காத சிலர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவினரிடம் சென்று, ஈழமுரசு பத்திரிகையை எப்படி அனுமதித்தீர்கள், என்று மிரட்டியதுடன், அங்கு மக்களிடையே ஈழமுரசு பற்றி அவதூறான பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர் எனத் தகவல்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு குறிப்பிட்டவர்களால், ஈழமுரசு பத்திரிகைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உடனடியாக நிறுத்தப்பட்டது. அது கடந்த 2014 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தை மையமாகவைத்தே நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு மாவீரர்தின காலத்தில் ஈழமுரசு பத்திரிகை வெளியாகவில்லை. இது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் மீண்டும் ஈழமுரசு தகாத காலத்தைக் கடந்து, குற்றவாளிகள் இனங்காணப்பட்டபின்னர் தனது பயணத்தை புதுப்பொலிவோடு ஆரம்பித்து பயணிக்கின்றது. இம்முறை மாவீரர் தினத்தின்போதும் அதிக பக்கங்களைத் தாங்கிச் சிறப்பு வெளியீடாக வந்து இவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

இதுகண்டுபொறுக்கமுடியாமலேயே இவர்கள், தமது அடாவடிகளை மீண்டும் ஆரம்பித்து, ஆட்டம்போடுகின்றனர். இவ்வாறுதான் எம்மவர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள புல்லுருவிகள் எமது தேசியச் செயற்பாடுகளைக் குழப்புவதிலும், எமது தேசிய ஊடகங்களைக் குழப்புவதிலும் குறியாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் இவர்களின் கருத்துக்களுக்கு நியாயம் கற்பிக்க முனையும் செயற்பாட்டாளர்களுக்கு மறுதலித்த பதில்களையே வழங்கிவருகின்றனர்.

செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரிவினைகளை உருவாக்குபவர்களும் இவர்களே. இதுகுறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டியது இன்றியமையாததாகும். ஒவ்வொரு நிகழ்வுகளிலும், அழையாவிருந்தினராக முன்னே நிற்கும் இவர்கள் குறித்த நிகழ்வுகளில் குறிப்டுத்து (முட்டையில்...) அங்கு உள்ள எதிர்மறையான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதில் இவர்களே முன்னிலையில் உள்ளனர். இவர்களின் குறித்த செயற்பாடு லாச்சப்பல் உணவகங்கள் வரை தொடர்வதாக அறியக்கிடைக்கின்றது.

இதைவிட மற்றொரு விடயம் பிரான்சு மாவீரர் நாள் 2015 இல் தவறாமல் கலந்துகொள்ளும் ஒருவர், ஈழமுரசின் சிறப்பு இதழ் ஒன்றை கையில் ஏந்தியபடி, அதில் வந்துள்ள தலைப்பு ஒன்றை சுட்டிக்காட்டி வாதிட்டுக்கொண்டு நின்றார். அது உரிய தரப்பினரின் காதுகளுக்கு எட்டவே, அவர்களும் அவருடன் பேசி, அது அப்படி அல்ல நீங்கள் எடுப்பதில்தான் இருக்கின்றது என்று கூற, அதற்கு அவர், இல்லை பிழை என்றால் பிழைதான் என இதற்கென்றே வந்தவர்போல் வாதிட்டு நின்றார்.

நிலைமையை உணர்ந்து அங்கே வந்த செயற்பாட்டாளர். நீங்கள் முதலில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு வாருங்கள், பின்னர் பார்ப்போம் என்று. அதன்பின்னரே அவர் அங்கிருந்து சென்றார். இதற்கு நல்ல ஒரு திருக்குறள் தான் நினைவிற்கு வருகின்றது. ‘இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.’ இனிய சொற்களைக் கூறாமல் இனியவையில்லாத கடுஞ்சொற்களை ஒருவன் கூறுதல், தன்னிடம் உள்ள கனியை உண்ணாது, இனிமையில்லாத காயை உண்பது போன்றதாகும் என்பதே இதன் விளக்கமாகும்.

இதனை இவ்வாறும் பார்க்கலாம். நல்ல விடயங்கள் இருக்கும்போது நாம் அதற்குள் இருக்கும் தீய விடயங்களைப் பார்ப்போமானால், அதில் உள்ள நல்ல விடயங்கள் மறைக்கப்பட்டுவிடும். அதனையே எதிர்பார்த்து மேற்குறிப்பிட்டவர்களும் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். இதனை மக்களும் உணர்ந்து இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு செயற்படவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். நாம் சிந்திக்கும் நேரமல்ல இது! சிந்தித்து செயற்படும் நேரம்!!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி: ஈழமுரசு