ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தால் போராட்டங்கள் வெடிக்கும்!

சனி சனவரி 05, 2019

இந்தியாவில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தால் போராட்டங்கள் வெடிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

 

புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


இந்தியாவில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் மறையவில்லை. பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. பொருளாதாரத்தை விட ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக உள்ளது. இதனால் நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும். புரட்சி மற்றும் போராட்டத்துக்கு இது வழி வகுக்கும்.


பிளஸ்-2க்கு பின்னர் 75 சதவீதம் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவதும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், நாட்டில் உள்ள வறுமையை ஒழித்தால் மட்டுமே உண்மையான வளர்ச்சியாக கருதப்படும். அந்த சூழ்நிலையை உருவாக்க ஒவ்வொரு மாணவரும் உறுதியேற்க வேண்டும்.

ஆணும், பெண்ணும் சமம் என்று கூறி வரும் நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

சபரிமலை பிரச்சனையில் சரி, தவறு என்று இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெண்கள் கோவிலுக்கு செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். வலிமையான சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் இயலாமையை ஒழிக்க வேண்டும். வறுமை ஒழிக்கப்பட்டால்தான் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். அனைவருக்கும் அனைத்தும் கிடைத்தால் தான் அது உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.