ஏழு நாடுகளில் இருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சோதனை

யூலை 17, 2017

சிரியா, பாகிஸ்தான் மற்றும் நைஜிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை விசேட சோதனைக்கு உட்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்த கரிசனைகளை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி நாவின்ன கூறியுள்ளார்.

இதன்பிரகாரம் சிரியா, பாகிஸ்தான், எகிப்து, போன்ற இஸ்லாமிய நாடுகள் மற்றும் நைஜரியா, ஐவரிகோஸ்ட், கானா, கெமரூன் போன்ற கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் இருந்து வீசாவிற்கு விண்ணப்பிக்கும் சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ஐ.எஸ் ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிற்குள் ஊடுருவலாம் என்ற அச்சம் காரணமாக சிரியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும் சுற்றுலாப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் ஊடுருவல் காரணமாக கானா மற்றும் நைஜிரியா போன்ற நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும் சுற்றுலாப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தஞ்சம் கோருவோர் நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என்ற காரணத்தால் பாகிஸ்தானில் இருந்துவருகைதரும் சுற்றுலாப் பயணிகளும் சோதனை செய்யப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் உகண்டா போன்ற நாடுகளில் இருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளும் எதிர்காலத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்திகள்