ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை பட்டியலில் இங்கிலாந்து இளவரசர் 4 வயது மகன்

Monday October 30, 2017

ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை பட்டியலில் இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பிரின்ஸ் வில்லியம் - கேத்மிடில்டன் தம்பதியரின் 4 வயது மகனான ஜார்ஜ் பெயர் இடம்பெற்றிருப்பதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பிரின்ஸ் வில்லியம்- கேத்மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற 4 வயது மகன் இருக்கிறார். இங்கிலாந்தில் ராணி எலிசபெத்திற்கு பிறகு இளவரசர் சார்லஸ் மன்னர் ஆவார்.

அவருக்கு பிறகு வில்லியம் மன்னர் ஆவார். ஜார்ஜ் அவரது மூத்த மகன் என்பதால் வில்லியமுக்கு பின்னர் ஜார்ஜ் மன்னர் ஆவதற்கு தகுதி உடையவர் ஆவார்.

எனவே அவர் பட்டத்து இளவரசர் என்று அழைக்கப்படுகிறார். தற்போது அவர் ராஜவம்ச அரண்மனை பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மாதம் தான் அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை பட்டியலில் ஜார்ஜ் பெயர் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களின் தகவல்களை எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் பரிமாற்றம் செய்தால் அதை உளவுத்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என கருதி பழைய கால தந்தி முறைகளை இப்போது கையாள்கிறார்கள்.

இவ்வாறு தந்தி முறையில் அரபு மொழியில் அனுப்பப்பட்ட தகவலை உளவுத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அதில் போர் தொடங்கினால் துப்பாக்கி குண்டுகளின் இசையை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதுடன் ஜார்ஜ் பெயரையும் குறிப்பிட்டு தகவல்களை பரிமாறி உள்ளனர்.

எனவே அவர்களுடைய கொலை பட்டியலில் ஜார்ஜ் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த தகவல் இங்கிலாந்து உளவுத்துறைக்கு கிடைத்திருப்பதாக அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.

ஜார்ஜ் படித்து வரும் பள்ளி அருகே சமீபத்தில் வீடியோ எடுத்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.