ஐ.எஸ். தீவிரவாதி சென்னையில் கைது!

Tuesday February 13, 2018

ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு ஆதரவாக நிதி திரட்டி வந்த ஐ.எஸ். தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டார். மேலும், 5 பேரை பிடிக்க காவல் துறையின்ர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கின் ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அவர்களுக்கும், மற்ற நாட்டு படைகளுக்கும் இடையே அங்கு அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை திரட்டுவதற்கான முயற்சிகளில் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் இருந்தும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை திரட்டும் வேலை நடந்தது. இதுபற்றி என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக கண்காணித்து வந்தது.

அப்போது கேரளாவில் இருந்து சில இளைஞர்கள் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் இருந்தும் சில இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்கு மூளை சலவை செய்து தயார் நிலையில் இருப்பது தெரிய வந்தது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்று இருந்த இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்தப்படி இருந்தனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி வந்தபோது தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தமிழ்நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தனியாக ஒரு தீவிரவாத குழு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிப்பதும் தெரிய வந்தது.

அந்த 9 இளைஞர்கள் மீதும் 9 பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன் பயனாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்துல்லா முத்தலீப் பிடிபட்டார். அவரை தொடர்ந்து 18-ந்தேதி சாகுல்அமீது என்பவர் சென்னை ஓட்டேரியில் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் 3 பேரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த 6 பேரும் தலைமறைவாக இருந்தபடி ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி வருவது தெரிய வந்தது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அவர்கள் நாசவேலை செய்து கைவரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளில் 4-வது இடத்தில் இருப்பதாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கேடு உத்தமன் பகுதியைச் சேர்ந்த அன்சார் மீரான் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவனை கைது செய்ய டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு படை சென்னை வந்தது.

சென்னையில் நேற்று அவனை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அன்சார் மீரான் சென்னையில் ரகசியமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்தபடியே ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளான்.

மேலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சிரியா செல்பவர்களுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்துள்ளான். குறிப்பாக காஜா பக்ருதீன் சிரியா செல்ல டிக்கெட் எடுத்து கொடுத்தது இவன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கைதான அன்சார் மீரானிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு எத்தனை பேரை அனுப்பி வைத்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் மேலும் 5 பேர் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்று விசாரித்தனர். பிறகு அன்சார் மீரான் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில்  அடைக்கப்பட்டான்.

அவனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று தேசிய புலனாய்வு பிரிவினர்  நீதி மன்றில் மனு செய்துள்ளனர். அவனிடம் விசாரணை நடத்தும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அவர்கள் கைவரிசை காட்டக்கூடும் என்ற அச்சுறுத்தல் பற்றி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அவர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு என்று சொல்லி எத்தனை லட்சம் பணம் வசூலித்தனர் என்று விசாரணை நடைபெற உள்ளது. இவற்றுக்கு விடை கிடைத்தால் தமிழ்நாட்டில் ஓசையின்றி பரவி இருக்கும் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவு கும்பலை பிடிக்க முடியும் என்று தேசிய புலனாய்வு பிரிவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.