ஐ.பி.சி நிறுவனத்திற்குள் வெடிக்கிறது கிளர்ச்சி? பதவி விலகுவாரா இரவி அருணாச்சலம்?

May 17, 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் ஐ.பி.சி பத்திரிகையில் அதன் பணிப்பாளரான நிராஜ் டேவிட் எழுதிய கட்டுரையால் ஐ.பி.சி நிறுவனத்திற்குள் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் சிலர் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலை எழுந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தலை ஏற்றுப் பணிபுரிந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களாலும், ஊடகவியலாளர்களாலும் 2009 வைகாசி 18 வரை நிர்வகிக்கப்பட்டு வந்த ஐ.பி.சி நிறுவனம், அதன் பின்னரான மாதங்களில் வீட்டு வாடகை-விற்பனை வணிகரான சத்தியவடிவேலு என்பவரால் விலைக்கு வாங்கப்பட்டு, தனியார் நிறுவனமாகப் பரிணமித்தது.

இந்நிறுவனத்தை 2014ஆம் ஆண்டில் சத்தியவடிவேலு அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கிய பரா பிரபா என்றழைக்கப்படும் பரமசாமி பிரபாகரன் எனப்படும் லிபரா நிறுவனத்தின் ஊழியர், பின்னர் அதனை லிபரா நிறுவனத்தின் பணிப்பிற்கு இணங்க நிராஜ் டேவிட் என்ற இன்னொரு நபரின் பெயருக்கு மாற்றிக் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஐ.பி.சி நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியைப் பரா பிரபா இழந்த பொழுதும், அவருக்குத் தொடர்ந்தும் லிபரா நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டதோடு, தற்பொழுது தென்மேற்கு இலண்டனில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் விலையுயர்ந்த வீடு ஒன்றை வாங்கும் அளவிற்கும், தனிப்பட்ட தகட்டிலக்கத்தில் விலையுயர்ந்த Porsche ரக சொகுசு மகிழுந்தை வைத்திருக்கும் அளவிற்கும் லிபரா நிறுவனத்தால் அவருக்கு ஊதியம் அளிக்கப்பட்டிருப்பதாக ஐ.பி.சி பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது இவ்விதமிருக்க ஐ.பி.சி பத்திரிகையின் ஆசிரியர் பதவியில் இருந்து விலகுவது குறித்து எழுத்தாளர் இரவி அருணாச்சலம் ஆராய்ந்து வருவதாக அவருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிராஜ் டேவிட்டின் கட்டுரை வெளிவந்ததைத் தொடர்ந்து சங்கதி-24 இணையத்தின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருடன் இரவி அருணாச்சலம் உரையாடுகையில், நிராஜ் டேவிட் முட்டாள்தனமாக நடந்து கொள்வதாகவும், ஐ.பி.சி பத்திரிகையின் ஆசிரியராகத் தான் பதவி வகிக்கின்ற பொழுதும், நிராஜ் டேவிட் எழுதித் தரும் கட்டுரைகளைத் தடை செய்யும் அதிகாரம் தனக்குக் கிடையாது என்றும் கண்ணீர் விட்டு அழாத குறையாகத் தெரிவித்துள்ளார்.

இதேநேரத்தில் கடந்த ஆண்டு சிங்களப் படைகளுக்கு வெள்ளையடிக்கும் காணொளி ஆவணத்தை ஐ.பி.சி தொலைக்காட்சி ஒளிபரப்பிய பொழுது ஐ.பி.சி நிர்வாகத்திற்கு எதிராக இலண்டனிலும், சுவிசிலும் வசிக்கும் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு இரவி அருணாச்சலம் அனுப்பிய குறுஞ்செய்திகள் சங்கதி-24 இணையத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதில் 31.07.2016 அன்று இலண்டனில் உள்ள ஊடகவியலாளருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் ஐ.பி.சி செய்தது தவறு என்பதை ஒப்புக் கொள்ளும் இரவி அருணாச்சலம், தனக்கு சிறிது நாள் அவகாசம் தருமாறும், அதற்குள் நடந்த தவறைத் திருத்திக் கொள்வதற்குத் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் மறுநாள் 01.08.2016 அன்று அதே ஊடகவியலாளருக்குப் பிறிதொரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்த இரவி அருணாச்சலம், செய்த தவறை ஐ.பி.சி திருத்துவதற்குத் தான் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும், தான் ஐ.பி.சியை விட்டு விலகுவதாகுவும் தெரிவித்திருந்தார்.

அப்படியிருந்தும் 10.08.2016 அன்று ஐ.பி.சி நிறுவனத்தின் செய்கைகளை நியாயப்படுத்தும் வகையில் முகநூலில் இரவி அருணாச்சலம் எழுதிய பதிவுகள் பற்றி அதே ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய பொழுது, லிபரா பாஸ்கரனின் பணத்தையும், லைக்கா சுபாஸ்கரனின் பணத்தையும் நம்பியிருப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று குறிப்பிட்டு பிறிதொரு குறுஞ்செய்தியை இரவி அருணாச்சலம் அனுப்பியிருந்தார்.

இதேநேரத்தில் சுவிசில் வசிக்கும் பிறிதொரு ஊடகவியலாளருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் ஐ.பி.சிக்குள் நடத்திய போராட்டங்கள் தோற்றுவிட்டதாகவும், தான் ஐ.பி.சியை விட்டு விலகி விட்டதாவும், இதனால் இப்பொழுது வேலைக்கு என்ன செய்வது என்று தெரியாது தான் திண்டாடுவதாகவும் இரவி அருணாச்சலம் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதன் பின்னர் ஐ.பி.சி பத்திரிகையின் அதிகாரபூர்வ ஆசிரியராக இரவி அருணாச்சலம் பதவியேற்றமை பல கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்நிலையில் நிராஜ் டேவிட்டிற்கும், இரவி அருணாச்சலம் அவர்களுக்கும் இடையில் நிலவும் முறுகல் பகிரங்க மோதலாக வெடிக்கக்கூடும் நிலை காணப்படுவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிகாட்டலில் 2004ஆம் ஆண்டு ஐ.பி.சி இயங்கிய பொழுது மலையாள மாந்திரீகர்களின் விளம்பரங்களை வெளியிட்டமைக்காக அந்நிறுவனத்திற்குள் இருந்தவாறு போர்க்கொடி தூக்கி, அதனைக் கண்டித்து ஒரு பேப்பர் எனும் பத்திரிகையில் கட்டுரை எழுதிய இரவி அருணாச்சலம் பணத்திற்கு சோரம் போகாது நிச்சயம் பதவி விலகுவார் என்று அவரது முன்னாள் மாணவர் ஒருவர் சங்கதி-24 இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அதிலும் மானமும், கொள்கையும் மட்டுமே முக்கியம் எனத் தங்களுக்குப் பாடம் கற்பித்த இரவி அருணாச்சலம், பணத்திற்காகத் தொடர்ந்தும் ஐ.பி.சி நிறுவனத்தில் பணிபுரிந்தால் அவர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் அர்த்தமற்றவையாகி விடும் என்றும் அவரது முன்னாள் மாணவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனினும் 56 வயதில் தன்னால் வெளியில் சென்று நல்ல ஊதியத்தில் வேறு வேலை எடுக்க முடியாது என்பதைக் காரணம் காட்டி, தமிழ்த் தேசியக் கொள்கையை அடகு வைத்து, மாவீரர்களின் தியாகங்களைச் கொச்சைப்படுத்தும் ஐ.பி.சி நிறுவனத்தின் செய்கைகளுக்குக் கண்ணை மூடிக் கொண்டு தொடர்ந்தும் இரவி அருணாச்சலம் துணை போவார் என்று அவரது குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துக் கேட்பதற்கு இரவி அருணாச்சலம் அவர்களுடன் எமது பிரித்தானியச் செய்தியாளர் தொடர்பு கொண்ட பொழுதும், அவ் அழைப்பை இரவி அருணாச்சலம் ஏற்கவில்லை.

இது இவ்விதம் இருக்க இன்று பிரான்சில் ஈழமுரசு நிறுவனத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் ஐ.பி.சி நிறுவனத்தின் ஒலிபரப்பாளரான எஸ்.கே.ராஜன் உரையாடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளைக் களங்கப்படுத்தும் வகையில் நிராஜ் டேவிட் கட்டுரை எழுதியதைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேநேரத்தில் தான் எழுதிய கட்டுரையில் எந்தத் தவறும் இல்லை என்றும், தனது பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஐ.பி.சி நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருப்பதால் தன்னை எவருமே அசைக்க முடியாது என்று நிராஜ் டேவிட் தெரிவித்திருப்பதாக, ஐ.பி.சி நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் சங்கதி-24 இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிராஜ் டேவிட் அவர்களுடன் சங்கதி-24 இணையத்தின் பிரித்தானிய செய்தியாளர் தொடர்பு கொண்டு உறுதி செய்ய முற்பட்ட பொழுதும், அவரது அழைப்பை நிராஜ் டேவிட் ஏற்கவில்லை.

இது இவ்விதமிருக்க நிராஜ் டேவிட்டிற்கும், ஐ.பி.சியின் ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலைப் பயன்படுத்தி மீண்டும் ஐ.பி.சியின் பணிப்பாளர் பதவியைக் குறிவைத்து அதற்கான நடவடிக்கைகளில் பரா பிரபா இறங்கியிருப்பதாகவும், 2003ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசிய ஊடகமாக ஐ.பி.சி இயங்கிய பொழுது ஐ.பி.சியை முடக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்து குழப்பம் விளைவித்தமை போன்று திரைமறைவுக் கிளர்ச்சி ஒன்றுக்குத் தற்பொழுது பரா பிரபா தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதி செய்வதற்காகப் பரா பிரபா அவர்களுடன் எமது பிரித்தானிய செய்தியாளர் தொடர்பு கொண்ட பொழுதும், அவரும் எமது செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை.

 

செய்திகள்
வியாழன் May 24, 2018

பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் 

புதன் May 23, 2018

யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது. 

செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

செவ்வாய் May 22, 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப

செவ்வாய் May 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச