ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - கலாநிதி சேரமான்

ஞாயிறு சனவரி 14, 2018

16.05.2015: அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முதல் நாளும் கூட. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் முறைமையில் மைத்திரி‡ரணில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொண்டு, இணை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை அறிமுகம் செய்திருந்த நிலையில், பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டிப் பிரதம மந்திரிப் பதவியைக் கைப்பற்றுவாரா?

அல்லது தனது சிம்மாசனத்தை ரணில் விக்கிரமசிங்க தக்க வைத்துக் கொள்வாரா? என்ற பரபரப்பில் சிங்கள வாக்காளர்கள் மூழ்கியிருக்க, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டமை பற்றிய செய்தியயான்றை ‘த சண்டே லீடர்’ வார இதழ் வெளியிட்டிருந்தது.

வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருந்ததால், அந்தச் செய்தியையிட்டு ஈழத்தீவின் தமிழ்‡சிங்கள ஊடகங்கள் எவையும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஊடகங்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் மகிந்தரா? ரணிலா? என்ற பரபரப்பில் ஆழ்ந்திருந்ததால், அவர்களும் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

தேர்தலுக்குப் பின்னர் அந்தச் செய்தியைச் சில தமிழ்‡சிங்கள ஊடகங்கள் தொட்டுச் சென்றிருந்தாலும், அவை கூட அந்தச் செய்திக்குப் பெரிதளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அச் செய்தியின் சாராம்சம் இதுதான்:17.05.2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் சிறீலங்கா புலனாய்வுத்துறையினரிடம் சரணடைந்தார்கள். இவர்களில் ஒருவர் தவேந்திரன் என்று அழைக்கப்படுபவர். மற்றவர் சத்யா மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர்.

இவர்களில் தவேந்திரன் என்பவரின் சொந்தப் பெயர் சுமதிபால சுரேஸ்குமார். ஆம் சுமதிபால என்ற இயற்பெயருடைய இவருடைய தந்தை ஒரு சிங்களவர். தாய் ஒரு தமிழ்ப் பெண். இவர்கள் இரண்டு பேருமே 1985ஆம் ஆண்டு சிறீலங்காப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றில் பலியானார்கள்.

இதனையடுத்து தமிழும், சிங்களமும் சரளமாகப் பேசும் ஆளுமை மிக்க பதினாறு வயது இளைஞனான சுரேஸ்குமார், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொள்கின்றார். சிறீலங்கா படைகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர், பின்னர் இந்தியப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இதில் ஓர் நடவடிக்கையில் காலில் காயமடைந்த இவர், அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டார்.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபத்து நான்கு ஆண்டுகள் அங்கம் வகித்தவர் தவேந்திரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் கேணல் தர தளபதிகளுக்கு நிகரான சேவைக்காலத்தைக் கொண்டவர்.

த சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படி தவேந்திரன், சத்தியா மாஸ்டர் ஆகியோருடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தென்தமிழீழக் கட்டளைத் தளபதியாக விளங்கிய ராம் (கேணல் தர தளபதி), அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியாக விளங்கிய நகுலன் (முன்னர் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக விளங்கியவர்) ஆகியோரும் சிறீலங்கா படைகளிடம் சரணடைந்திருந்தார்கள்.

இவர்களில் தவேந்திரனின் மேற்பார்வையின் கீழ் போலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பொன்றை சிறீலங்கா புலனாய்வுத்துறை உருவாக்கியது. தமிழீழ தாயகத்திலும், தென்னிலங்கையிலும் தலைமறைவாக இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகளையும், வெளிநாடுகளில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களையும், தமிழ்த் தேசிய அமைப்புக்களையும் அடையாளம் கண்டு சிதைத்தழிக்கும் எதிர்ப்புரட்சி நடவடிக்கையாகவே இப் போலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை சிறீலங்கா புலனாய்வுத்துறை உருவாக்கியிருந்தது.

இப் போலியான கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புரட்சி நடவடிக்கைக்கு ஒப்ரேசன் டபிள் எட்ஜ் என்ற குறியீட்டுப் பெயரையும் சிறீலங்கா புலனாய்வுத்துறை சூட்டியிருந்தது. இந் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் மலேசியாவில் இருந்து கொழும்பை சென்றடைந்திருந்தார்.

சரி, தவேந்திரனை நடுநாயகமாகக் கொண்டு, சத்தியா மாஸ்டர், ராம், நகுலன், கே.பி ஆகியோரை முன்னிலைப்படுத்தி சிறீலங்கா புலனாய்வுத்துறை முன்னெடுத்த இந் நடவடிக்கை பற்றிய தகவல்களை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை பற்றிய செய்தியுடன் ஏன் த சண்டே லீடர் இணைத்தது என நீங்கள் கேட்கலாம்.

விடயம் இதுதான்: யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையுடன் பிரகீத் எக்னலிகொட தொடர்பைப் பேணி வந்துள்ளார். ஆனால் பிரதீப் என்ற பெயரிலேயே அத் தொடர்பை பிரகீத் எக்னலிகொட பேணியதால், அவர் யார் என்பதை தவேந்திரன் அறிந்திருக்கவில்லை.

ஆக பிரகீத் எக்னலிகொடவையும், அவரைப் போன்று தென்னிலங்கையில் இருக்கக்கூடிய ஏனையவர்களையும் இனம் கண்டு அழிப்பதற்காக மட்டக்களப்பு - பொலனறுவை - திருகோணமலை மாவட்டங்கள் சந்திக்கும் மையப்புள்ளியான கிரிதல காட்டுப்புறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வனப் பாசறை போன்ற வடிவமைப்பைக் கொண்ட முகாம் ஒன்றை சிறீலங்கா புலனாய்வுத்துறை நிறுவியது. பிரகீத் எக்னலிகொட உட்பட பலரை தவேந்திரன் அவர்களின் ஊடாக இந்த வனப் பாசறைக்கு வரவழைத்து அவர்களை சிறீலங்கா புலனாய்வுத்துறை மடக்கிப் பிடித்தது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் தமிழீழ தாயகத்திலும், தென்னிலங்கையிலும், புலம்பெயர் தேசங்களிலும் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களை மடக்கிப் பிடித்து, அழித்தொழிக்கும் நோக்கத்துடன், மிகவும் நுட்பமான முறையில் சிறீலங்கா புலனாய்வுத்துறை முன்னெடுத்த ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையை சார்ஜன்ட் மேஜர் ரண்பண்டா என்ற சிறீலங்கா படையப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருங்கிணைத்தார்.

இந் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருந்த ஏனைய சிறீலங்கா படையப் புலனாய்வுத்துறை அதிகாரிகளாக லெப்.கேணல் குமார ரட்ணாயக்க, லெப்.கேணல் சிறீவர்த்தன, ஸ்ராவ் சார்ஜன்ற் ராஜபக்ச, கோப்ரல் ஜெயலத் ஆகியோரின் பெயரை இரண்டு வாரங்கள் கழித்து லங்கா நியூஸ் வெப் எனப்படும் ஆங்கில மொழியிலான சிங்கள இணையம் வெளியிட்டிருந்தது.

இதன் பின்னர் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை குறித்துத் தென்னிலங்கை ஊடகங்கள் எவற்றிலும் எந்தச் செய்திகளும் வெளிவரவில்லை. இதற்குக் காரணம், ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை பற்றிய மேலதிக தகவல்கள் வெளிவந்தால், சிறீலங்கா புலனாய்வுத்துறை உருவாக்கிய போலியான தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனையவர்கள் பற்றிய விபரங்கள் வெளியில் வந்து அவர்களின் குட்டு வெளிப்பட்டு விடும் என்று மைத்திரி‡ரணில் அரசாங்கம் கருதியதே காரணம் என்று தென்னிலங்கை ஊடக வட்டாரங்களில் அரசல் புரசலாக தகவல்கள் பரவியிருந்தன. அத்தோடு ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கை பற்றிய தகவல்கள் அனைத்தும் மூடுமந்திரமாகிப் போயின.

ஆனாலும், ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையின் நதிமூலங்கள், ரிசிமூலங்கள் பற்றி 16.08.2015 அன்று த சண்டே லீடர் வெளியிட்ட தகவல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய பெயர்களில் கடந்த எட்டரை ஆண்டுகளாகப் புலம்பெயர் தேசங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள், போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகள், தளபதி பரிதி அவர்களின் படுகொலை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, ஈழமுரசு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சிகள் போன்றவற்றின் சூட்சுமங்களைப் புட்டு வைக்கும் வகையில் அமைந்திருந்தது எனலாம்.

இது பற்றிக் கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் கனதியான ஆய்வுகளை ஈழமுரசு பத்திரிகை மேற்கொண்டிருந்தது. இவ் ஆய்வுகளின் பெறுபேறாக பல முக்கிய தகவல்கள் (முக்கிய ஆதாரங்களுடன்) ஈழமுரசு பத்திரிகைக்குக் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் இப் பத்தியின் ஊடாக அடுத்த பதிப்பில் இருந்து ஆதாரங்களுடன் வெளிக்கொணரப்படும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பாதுகாப்பாக இருக்கின்றார் என்று 18.05.2009 அன்று அறிவித்த கே.பி, ஆறு நாட்கள் கழித்து 24.05.2009 அன்று தலைவர் பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலித்து அறிக்கை வெளியிட்டதன் பின்னணி என்ன? கே.பி அவர்களின் அறிக்கை வெளிவந்து இரண்டு நாட்களில் கே.பியை தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் பிரகடனம் செய்ததன் காரணம் என்ன?

இவர்கள் இருவரையும் தொடர்ந்து தவேந்திரனின் வழிநடத்தலில், கிரிதலவில் சிறீலங்கா புலனாய்வுத்துறை உருவாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போலி வனப் பாசறையில் இருந்தவாறு கே.பியைத் தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற போலிக் கட்டமைப்பைத் தயாமோகனின் உதவியுடன் ராம் உருவாக்கியதன் சூட்சுமம் என்ன?

அவற்றை அறிக்கை வாயிலாக ராம் அவர்களும், இந்தியப் புலனாய்வுத்துறையின் முகவரான அமுதன் (சுரேஸ் அல்லது மாறன்) என்பவரும் 21.07.2009 அன்று பிரகடனம் செய்வதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? அந்தக் கட்டத்தில் நெடியவனின் தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் உண்மையான அனைத்துலகத் தொடர்பகத்திற்கு என்ன நடந்தது? இவ்வாறான கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாகப் பதிலளிக்கும் தொடராகவே அடுத்த வாரம் முதல் இப் பத்தி விரியப் போகின்றது.

(மடையுடைப்பு ஆரம்பமாகின்றது)  

நன்றி: ஈழமுரசு