ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 10

வெள்ளி ஜூன் 01, 2018

இலண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அடையாளம் காண்பதற்கு கே.பி, விநாயகம், ராம், நகுலன், தவேந்திரன் ஆகியோரின் கையாட்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டை, கனடாவில் இருந்து ஒரு மில்லியன் பவுண்களைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்ட மணி என்ற பெயருக்குரிய நபருடனும், ஈஸ்ற்ஹாம் பகுதியில் ஐந்து இலட்சம் பவுண்கள் பெறுமதியுடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் வீட்டின் உரிமையாளரான உருத்ராபதி சேகர் அவர்களுடனும் நின்று விடவில்லை.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தில் மளிகைக் கடைகள், வீடுகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் போன்றவற்றை வைத்திருந்ததாகக் கருதப்பட்ட தமிழின உணர்வாளர்கள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் இவர்கள் வலைவீசித் தேடினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் விநாயகத்தின் சார்பில் இலண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அடையாளம் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட திரு என்பவரின் பெயரில் பல மில்லியன் பவுண்கள் பெறுமதியான சொத்துக்கள் இருந்தது தான்.

யுத்தம் நிறைவு பெறுவதற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவருடன் உரையாடும் பொழுது, பிரித்தானியாவில் பொட்டு அம்மானின் பணிப்புரையின் பேரில் கொள்வனவு செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைத் தானே மேற்பார்வை செய்து பராமரித்து வருவதாகவும் கூட திரு அவர்கள் தெரிவித்திருந்தார். இறுதிப் போரில் பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது என்பது மிகப்பெரும் மர்மமாக இருந்தது திரு போன்றவர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்தது.

இறுதிப் போரில் தனது ஒரு காலை இழந்த பொட்டு அம்மான், இந்தியாவில் சிகிச்சை பெற்று வருவதாகப் புதுக்கதையளந்த இவர், பொட்டு அம்மானின் நேரடி வழிகாட்டலில் தன்னை விநாயகம் இயக்குவதாகவும், அம்மானின் பணிப்பிற்கு அமையவே தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தான் இறங்கியிருப்பதாகவும் கதை புனைந்து வந்தார்.

******************************************************************

‘இவர் ஒரு நீதிபதியா? கேட்கிறவன் கேணையன் என்றால் எலியும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் என்பது போல் அல்லவா இது இருக்கின்றது’ என்று எண்ணிக் கொண்ட அவருடன் கரகரத்த குரலில் சுகி அல்லது சுபன் என்று இன்பத்தால் அறிமுகம் செய்யப்பட்டவர் பேச்சுக் கொடுத்தார்.

‘நான் தான் தமிழீழ சட்டக்கல்லூரியில் முதல் முதலாக சட்டம் படித்து வெளியேறியவன். தமிழீழ நீதி நிர்வாகத்துறையில் நீதியாளராக நீண்ட காலம் பணிபுரிந்த அனுபவம் எனக்கு இருக்கு. சமாதான காலத்தில் மேற்கொண்டு சட்டம் படிப்பதற்காக என்னை அண்ணை மலேசியாவிற்கு அனுப்பி வைச்சவர். என்னை மாதிரி அனுப்பப்பட்ட இன்னும் கொஞ்சப் போராளியள் நீங்கள் இருக்கிற அவுஸ்திரேலியாவிலும் இருக்கீனம்.’ தான் எதுவுமே பேசாமல் இருந்த பொழுது தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தை சுகி அல்லது சுபன் என்பவர் மேற்கொண்டது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு மிகவும் வேடிக்கையாகவே இருந்தது.

‘நீங்கள் மலேசியாவில் சட்டத்துறையில் என்ன பீல்டில் (துறையில்) மாஸ்ரேர் (முதுமாணி) பட்டம் முடிச்சிருக்கிறீங்கள்?’ இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டதும் ஒரு கணம் அவரின் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த சுகி எனப்படும் சுபன் அவர்கள் திகைத்துப் போனார். இடக்கு முடக்கான கேள்வியைக் கேட்டு சுகி எனப்படும் சுபனை தர்மசங்கடத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தவர் ஆழ்த்தி விட்டார் என்ற தோரணையே இன்பம் அவர்களின் முகத்தில் காணப்பட்டது. அப்பொழுது சுகி எனப்படும் சுபன் பேசினார்: ‘இல்லை நான் இஞ்சை சட்டம் படிக்க வந்திருந்தாலும், இயக்க வேலைகளில் நேரத்தைச் செலவழித்ததால் முழுமையாகப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.’

******************************************************************

2009ஆம் ஆண்டு ஆனி மாதத்தின் முதலாவது வாரத்தின் ஒரு கிழமை நாளின் மாலைப் பொழுதில் பிரித்தானியாவில் இருந்து சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேந்திரா அவர்களின் கைபேசி எண்ணிற்கு (00 47 90 29 01 90) அந்த அழைப்பு எடுக்கப்படுகின்றது.

மாறன் என்று தான் கருதியிருந்த செயற்பாட்டாளர், தனது இரண்டு நண்பர்கள் ஊடாகத் தான் விடுத்த கோரிக்கையை ஏற்றுத் தனக்கு அழைப்பு எடுத்தமையையிட்டுப் பெரும் மகிழ்ச்சியில் சர்வே பேசினார்: ‘ஏன்ராப்பா சனத்தை ஏமாத்திறியள்?’ இப்படித் தொடங்கிய சர்வே அவர்களின் பேச்சு, ஏதோ முள்ளிவாய்க்காலில் தமிழீழத் தேசியத் தலைவரின் அருகில் இருந்து எல்லாவற்றையும் அவதானித்தவர் போன்ற தொனியில் நகர்ந்து கொண்டிருந்தது. தான் பேசிக் கொண்டிருந்த ஒவ்வொரு வினாடியும் தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதிலும், கே.பியைத் தமிழீழ மக்களின் அடுத்த தேசியத் தலைவராக முன்னிறுத்துவதிலுமே சர்வே குறியாக இருந்தது அவரது பேச்சில் தொனித்ததை மறுமுனையில் இருந்தவரால் உணர முடிந்தது.

‘நாங்கள் இருக்கும் போது இயக்கம் கேட்ட ஆயுதங்களை எல்லாம் அனுப்பி வைச்சனாங்கள். ஆயுத விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எல்லாம் ஒழுங்காக நடந்தது. எப்ப கே.பி அண்ணையை இயக்கம் விலக்கி வைச்சுதோ, அதுக்குப் பிறகுதான் ஆயுத விநியோகம் எல்லாம் தடைப்பட்டது. எங்கடை போராட்டம் தோற்றுப் போனதுக்கு கே.பி அண்ணையை இயக்கம் விலக்கி வைச்சது தான் காரணம்.’ இவ்வாறு கே.பி பற்றிய சுப்ரபாதத்தை சர்வே பாடிக் கொண்டிருந்தது மறுமுனையில் அதனை செவிமடுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருக்கு எரிச்சலூட்டும் வகையிலேயே அமைந்திருந்தது. ஏனென்றால்....

2003ஆம் ஆண்டு பங்குனி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு கே.பியைத் தமிழீழத் தேசியத் தலைவர் விலக்கி வைப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே எந்த ஆயுதக் கப்பல்களையும் வன்னிக்கு கே.பி. அனுப்பி வைக்கவில்லை. இது பலருக்குத் தெரியாது. ஆனால் இது பற்றிய தரவுகள் மறுமுனையில் பேசியவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாகக் கே.பி அவர்கள் விளங்கிய காலப்பகுதியில் அவர் வசித்து வந்த தென்கிழக்காசிய நாட்டில் இயங்கிய வடகொரிய தூதுரகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவரின் தொடர்பு அவருக்குக் கிடைத்திருந்தது. இந்தப் பெண்மணி வெளித்தோற்றத்திற்கு வடகொரியத் தூதரகத்தின் நிர்வாகநிலை அதிகாரியாகத் தென்பட்ட பொழுதும், வடகொரியாவின் ஆயுத விற்பனை நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒருவராகவே அவர் விளங்கி வந்தார்.

1999ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை இந்த அதிகாரியின் அனுசரணை ஊடாக வடகொரியாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களையே கே.பி வன்னிக்கு அனுப்பி வந்தார். அரசியலில் எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்று கூறுவது கே.பியின் ஆயுதக் கொள்வனவு விடயத்திலும் நடந்தது. 11.09.2001 அன்று நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீதும், பென்ரகன் கூட்டுப் படைத் தலைமையகம் மீதும் அல்கைடா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோதாவில் அனைத்துலக நடவடிக்கை ஒன்றை அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ் அவர்கள் தொடங்கினார். அப்பொழுது அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது யுத்தம் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள், மற்றும் ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கு எதிராக மட்டுமன்றி, இவ்வாறான அமைப்புக்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் ஈராக், ஈரான், வடகொரியா ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

இதனால் பதற்றமடைந்த அன்றைய வடகொரிய அதிபர் கிம் ஜொங்க் இல் (தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜொங்க் உண் அவர்களின் தந்தை) உடனடியாகவே ஆயுதம் தாங்கிய அமைப்புக்களுக்கான ஆயுத விற்பனைகளை இடைநிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கே.பி அவர்களுடான தொடர்புகளை வடகொரிய தூதரகத்தின் நிர்வாகநிலை அதிகாரி துண்டிக்க, கே.பியின் ஆயுத விநியோகக் கிணறு வற்றிப் போனது. ஆப்கானிஸ்தான் தொடக்கம் ஆர்ஜன்ரீனா வரை அலைந்து திரிந்து ஆயுதக் கொள்வனவுகளில் கே.பி ஈடுபடுகின்றார் என்றும், பிளாஸ்ரிக் சேர்ஜரி (நெகிழிச் சத்திரச் சிகிச்சை) செய்து அடிக்கடி தனது முகத்தை அவர் மாற்றிக் கொள்கின்றார் என்றும் சிங்கள-இந்திய ஊடகங்கள் கற்பனைக் கதைகளை எழுதிக் கொண்டிருக்க, கே.பியோ வடகொரிய தூதரகத்தை வட்டமிட்ட வண்ணம் இருந்தார். கடைசியில் தூதரக வளாகத்திற்குள் நுழைந்து அங்கு வரவேற்பறையில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் அலுவலரிடம் தனது நிலையைக் கூறி மன்றாட்டமாகக் கூட கே.பி பேசிப் பார்த்தார். ஆனால் வடகொரிய தூதுரக அதிகாரியோ இம்மியளவு கூட மசியவில்லை.

கே.பியின் இந்தக் கையாலாகாத்தனம் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தீச்சுவாலை எதிர்ச்சமரின் விளைவாக ஏறத்தாள முதுகெலும்பு முறிந்தது போன்ற நிலையில் காணப்பட்ட சிங்களப் படைகளுக்கு எதிராக எந்தவொரு வலிந்த தாக்குதலையும் மேற்கொள்ள முடியாத நிலையையே கே.பியின் கையாலாகத்தனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்தியிருந்தது.

சிங்கள தேசத்தின் பிரதம மந்திரியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற மறுகணமே நல்லெண்ண சமிக்ஞையாக ஒருதலைப்பட்சமான முறையிலான போர்நிறுத்தத்தை இரண்டு மாதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தமைக்கும், அதனைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ஆம் நாளன்று ரணில் அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டதற்கும் கே.பியிடம் இருந்து ஆயுதங்கள் எவையும் வந்து சேராததே காரணமாகும்.

இவ்வாறு 11.09.2001 முதல் 2003ஆம் ஆண்டு பங்குனி மாதம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை வன்னிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க முடியாது கையாலாகாத நிலையில் இருந்த கே.பியைப் பற்றி சர்வே கூறிய அம்புலிமாமா கதை மறுமுனையில் இருந்தவரை சீற்றத்தில் ஆழ்த்தியது.  

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு