ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 11

வியாழன் ஜூன் 14, 2018

- கலாநிதி சேரமான்

'களத்தில் இயக்கம் ஈட்டிய ஒவ்வொரு வெற்றிக்கும் நாங்கள் தான் காரணமாக இருந்தோம். கே.பி அண்ணையும், நாங்களும் இல்லையயன்றால் இயக்கத்தால் ஜெயசிக்குறுய் சண்டையில் வென்றிருக்கவும் முடியாது, வன்னியைத் திரும்பவும் பிடிச்சிருக்கவும் முடியாது, ஆனையிறவைக் கைப்பற்றியிருக்கவும் முடியாது.’ இவ்வாறு கே.பி பற்றியும், கே.பி டிட்பார்ட்மென்ட் (கே.பியின் துறை) என்று தங்களைத் தாங்களே சர்வே போன்றவர்கள் அழைத்துக் கொண்ட குழு பற்றியும் மாறன் என்று நினைத்துத் தான் உரையாடிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியச் செயற்பட்டாளரிடம் சர்வே சுய சுப்பிரபாதம் பாடிக் கொண்டிருந்தார். இங்கு ஒரு விடயத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டும். 11.09.2001 அன்று அமெரிக்காவில் அல்கைடா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களுக்கு பின்னரான காலப்பகுதியில் மட்டுமன்றி அதற்கு முன்னரான காலப்பகுதியிலும் பல தடவைகள் கே.பியால் ஒழுங்கான முறையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான வழங்கல்கள் மேற்கொள்ளப்படவில்லை.

உதாரணமாக 1995ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ் குடாநாடு மீது பெரும் படையயடுப்பை தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிங்களப் படைகள் இறங்கியதும் அவரசமாக ஆட்லறிப் பீரங்கிகளை அனுப்பி வைக்குமாறு கே.பியிடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டது. ஆனால் கே.பியோ, ஆட்லறிப் பீரங்கிகளைக் கொள்வனவு செய்வதற்குப் போதிய அளவு நிதி இல்லை என்று கூறிக் காலத்தை கடத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளை நிர்வாகங்களை அப்பொழுது அனைத்துலக செயலகப் பொறுப்பாளராக விளங்கிய லோறன்ஸ் கிறிஸ்ரி திலகர் அவர்கள் (பிரான்சில் வசித்தவர்) மேற்பார்வை செய்ததால் தன்னால் கிளைகளிடம் இருந்து நிதியைப் பெறுவது கடினமாக உள்ளது என்றும் கே.பி சாக்குப் போக்குக் கூறினார்.

விளைவு: யாழ் நகரையும், வலிகாமத்தையும் விட்டுப் பின்வாங்குவதற்கு 1995ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அதன் பின்னராவது ஒழுங்கான முறையில் தமிழீழ தேசியத் தலைவர் கேட்ட ஆட்லறிப் பீரங்கிகளை கே.பி அனுப்பி வைத்திருப்பாராக இருந்தால் தென்மராட்சியும், வடமராட்சியுமாவது தமிழீழ விடுதலைப் புலிகளால் தக்க வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதனையும் கே.பி செய்யவில்லை. கே.பியின் கையாலாகத்தனத்தின் விளைவாக 1996ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தென்மராட்சியையும், வடமராட்சியையும் ‡ அதாவது ஒட்டுமொத்த யாழ் குடாநாட்டையும் - கைவிட்டு வன்னிக்குப் பின்வாங்கும் நிலைக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தள்ளப்பட்டார்கள்.

இதனை விட தனது கையாலாகாத்தனத்திற்கு இன்னுமொரு நொண்டிச் சாட்டையும் கே.பி முன்வைத்தார். தமிழீழக் கடற்பரப்பைச் சுற்றி இந்தியக் கடற்படையின் உதவியுடன் கடற்கண்காணிப்பு வலையம் ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் உருவாக்கியிருப்பதால், தன்னால் தமிழீழத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ஆயுதக் கப்பல்கள் அனைத்துலகக் கடற்
பரப்பில் வைத்து சிங்களக் கடற்படையினரால் மூழ்கடிக்கப்படக்கூடும் என்றும், அவ்வாறு ஏதும் நடந்தால், அலைந்து திரிந்து தாம் கொள்வனவு செய்யும் பெறுமதி மிக்க படைக்கலங்கள் கடலில் மூழ்கி விடும் என்றும் கே.பி முதலைக் கண்ணீர் வடித்தார். இதற்கு 14.02.1996 அன்று பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று (அப்பொழுது வடமராட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடில் இருந்தது) திருமலையில் இருந்து எழுபது கடல் மைல் தொலைவில் வைத்து இந்திய - சிங்கள கடற்படைகளின் கூட்டு நடவடிக்கையில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தையும் கே.பி அவர்கள் மேற்கோள் காட்டினார்.

இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், அக்காலப்பகுதிகளில் தான் புலம்பெயர் நாடுகளில் லெப்.கேணல் நாதன் அவர்களின் தலைமையில் முழு வீச்சுடன் நிதி திரட்டல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் இறங்கியிருந்தார்கள். தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதி என்ற மகுடத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த நிதி திரட்டல் நடவடிக்கை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு நிதியைத் திரட்டிக் கொடுத்திருந்தாலும், படைக்கலக் கொள்வனவுகளில் அசமந்தப் போக்குடன் கே.பி நடந்து கொண்டதால் இந் நிதிதிரட்டலின் மூலம் களத்தில் பெரிதாக தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சொல்லை விட செயலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களோ, கே.பியின் இந்த நொண்டிச் சாட்டுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.

விளைவு: தமிழீழ தேசியத் தலைவரின் நேரடி திட்டமிடலின் கீழும், நெறிப்படுத்தலிலும் மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின் மூலம் முல்லைத்தீவு பெருந்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வீழ்த்தப்பட்டு அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளும், அவற்றுக்கான எறிகணைகளும் கைப்பற்றப்பட்டன. ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின் வெற்றியை உறுதி செய்வதற்காக முதல் நாள் தானே முல்லைத்தீவு பெருந்தளத்திற்குள் சென்று வேவு பார்த்து விட்டு பிரிகேடியர் தீபன் அவர்கள் திரும்பி வந்தார் என்றால், அத்தளத்தைக் கைப்பற்றுவதற்குத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

முல்லைத்தீவு பெருந்தள மீட்பானது தமது படைக் கட்டமைப்பில் இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இணைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக மட்டும் அமையவில்லை. வன்னிக்கான அனைத்துலகக் கடல்வழிப் பாதையைத் திறப்பதற்கும் அது வழிகோலியது. அதன் பின்னர் நிதிப்பிரச்சினை என்று கூறி கே.பி எழுப்பி வந்த ஒப்பாரிகளுக்கு முடிவு கட்டுவதற்காக கே.பி தங்கியிருந்த நாட்டிற்குக் கடல்வழியில் தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் செ.வ.தமிழேந்தி அவர்களைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அனுப்பி வைத்ததும், அதன் பின்னர் கே.பி திடீரென உசாரடைந்து வன்னிக்கு ஆட்லறிப் பீரங்கிகளை அனுப்பி வைத்ததும் வேறு கதை.

ஆனாலும் அதன் பின்னரும் ஒழுங்கான முறையில், தரமான படைகலங்களைக் வன்னிக்குக் கே.பி அனுப்பி வைத்தார் என்று நாம் கூற முடியாது. இதிலும் பல குளறுபடிகளைக் கே.பி அவர்கள் செய்து வந்தார். உதாரணமாக வன்னிக்கு கே.பி அனுப்பி வைத்த ஆட்லறி பீரங்கிகளில் சில ஏற்கனவே வேறு நாடுகளில் நிகழ்ந்த சமர்களில் பயன்படுத்தப்பட்டவையாக இருந்தன. இதனால் ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் தொடக்கம் ஓயாத அலைகள் - 2 (கிளிநொச்சி மீட்பு நடவடிக்கை), ஓயாத அலைகள்- 3 (வன்னி மீட்பு நடவடிக்கை, ஆனையிறவுப் பெருந்தள மீட்பு, தென்மராட்சி மீட்பு நடவடிக்கை, யாழ் நகர முற்றுகை) உள்ளடங்கலாக தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வரையான சமர்களில் பயன்படுத்தப்பட்ட ஆட்லறிப் பீரங்கிகளின் குழல்கள் கட்டம் கட்டமாக செயலிழந்து போயின.

இது மட்டுமன்றி சிங்கள வான்படையின் கிபீர் மிகையயாலி விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கோரப்பட்ட பொழுது, உரிய ஏவுகணைகளை அனுப்பி வைக்காது அப்பாச்சி-2 என்று கூறப்பட்ட படைக்கலங்களை வன்னிக்கு கே.பி அனுப்பியதும், அவை உரிய கணினி மென்பொருள் இன்மையால் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டதும் இன்னொரு கதை. சரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கனரக படையணிகளுக்கான படைக்கலங்களை அனுப்பி வைப்பதில் தான் அசமந்தப் போக்குடன் கே.பி நடந்து கொண்டார் என்றால், காலாட் படையணிகளுக்கான வழங்கல்களிலும் இவ்வாறே அவர் செயற்பட்டார்.

உதாரணமாக ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது டாஸ்-2 என்று அழைக்கப்பட்ட ரி-56-2 ரக தானியங்கித் துப்பாக்கிகள் கே.பியால் வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் களமுனையில் இவற்றைப் போராளிகள் பயன்படுத்திய பொழுதுதான் அவை கடும் சமர்களுக்கு உதவாதவை என்று தெரிய வந்தது. காரணம் இத் துப்பாக்கிகளின் குழல்கள் வேகமாகப் பழுதடைந்ததோடு, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் பொழுது அவற்றின் பொறிகள் இறுகிச் செயலிழப்பதும் சர்வ சாதாரணமாகவே இருந்தது. இதனால் களமுனையில் அநியாயமாகப் போராளிகள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.

2003ஆம் ஆண்டு கே.பியை இயக்க செயற்பாடுகளில் இருந்து விலக்கி வைப்பதற்கு தமிழீழ தேசியத் தலைவர் தீர்மானித்ததற்கு இவையும் காரணங்களாக இருந்தன. ஒரு தடவை கப்பல் நிறையக் காலவதியாகிய மருந்துகளை வன்னிக்கு கே.பி அனுப்பி வைத்தது பற்றி 2002ஆம் ஆண்டு தன்னைச் சந்தித்த ஜெகத் கஸ்பார் அடிகளாரிடம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கூறியதும், அதனை முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் நக்கீரன் இதழில் வெளிவந்த தொடர் ஒன்றில் கஸ்பார் அடிகளார் வெளிக்கொணர்ந்தமையும் வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவ்வாறு கே.பியின் திருவிளையாடல்கள் பற்றி நன்கு அறிந்திருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரிடம், ஏதோ 2002ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈட்டிய யுத்த வெற்றிகளுக்கெல்லாம் கே.பியும், தாமும் தான் சொந்தக்காரர்கள் என்ற தொனியில் சர்வே பேசிக் கொண்டிருந்தார். இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் நாம் பதிவு செய்வது பொருத்தமானது. ஏனென்றால் அது கே.பியும், ஏனைய சிங்களக் கைக்கூலிகளும் வலைவீசித் தேடிக்கொண்டிருந்த மாறன் அல்லது மணி என்றழைக்கப்படும் நபருடன் தொடர்புடைய இன்னொரு நபர் பற்றியது.

சற்றலைட் தொலைபேசிகள் என்று கூறப்படும் செய்கோள் தொலைபேசிகள் 1990களின் முற்பகுதியில் இருந்தே வணிக நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவற்றைக் கொள்வனவு செய்து வன்னிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் கே.பியிற்கு இருந்ததில்லை. அதற்கான முயற்சிகள் எவற்றிலும் அவர் இறங்கவுமில்லை. இதனால் கப்பல்களில் இருந்து ஏனைய கப்பல்களுக்கு செய்தி அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி (ரெக்ஸ் மெசேஜ் என்று ஆங்கிலத்தில் கூறப்படும்) இயந்திரங்களையே வன்னிக்கும், வெளிநாடுகளுக்கும் இடையிலான தொடர்பாடல்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்தார்கள். இவற்றில் இப்பொழுது செல்பேசிகளில் எழுதுவது போன்றெல்லாம் தமிழில் எழுத முடியாது. ஆங்கில மொழியிலேயே குறுஞ்செய்திகளை எழுதி அனுப்ப முடியும். போதாக்குறைக்கு கப்பல் குறுஞ்செய்தி இயந்திரங்களில் இருந்து அனுப்பப்படும் செய்தி, அனுப்பப்பட்டவருக்குக் கிடைத்ததா? இல்லையா? என்பதை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளும் அப்பொழுது வன்னியில் இருக்கவில்லை.

இது மட்டுமன்றி கப்பல் குறுஞ்செய்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் இந்திய உளவுப் பிரிவினரால் ஒட்டுக்கேட்கப்படும் அபாயமும் காணப்பட்டது. இதனால் இக்குறைபாட்டை நிறைவு செய்வதற்காக நம்பிக்கைக்குரிய ஒரு போராளிக்கு சங்கேத மொழி கற்பித்து அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தமிழீழ தேசியத் தலைவர் பணிக்க, 1991 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து கொண்ட சாம்ராஜ் என்றழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஜெயகணேஸ் என்பவரை அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுத் தொடர்புப் பிரிவுப் பொறுப்பாளராக விளங்கிய (பின்னர் அனைத்துலகத் தொடர்பகம் எனப் பெயர் மாற்றப்பட்டது) பிரிகேடியர் கஸ்ரோ அவர்கள் (மணிவண்ணன்) பிரான்சு நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இவர் பிரிகேடியர் கஸ்ரோ அவர்களின் பணிப்பிற்கேற்ப பின்நாட்களில் செய்கோள் தொலைபேசிகளை தேடி அலைந்ததும், அதனை அடுத்து விழுந்தடித்துக் கொண்டு 1997 ஆம் ஆண்டு துரையா ரக செய்கோள் தொலைபேசிகளைக் கே.பி கொள்வனவு செய்ததும் இன்னொரு கதை.

சரி, சாம்ராஜ் என்ற இந்த நபருக்கும், தான் உரையாடிக் கொண்டிருந்ததாக சர்வே கருதிய மாறன் என்ற நபருக்கும் என்ன தொடர்பு என்று வாசகர்களாகிய நீங்கள் கேட்கலாம். மணி என்ற பெயரில் அறியப்பட்ட மாறன் என்பரிடம் இருந்ததாகப் பலர் கருதிய ஒரு மில்லியன் பவுண் இயக்கப் பணத்தை விடப் பல மடங்கு இயக்கச் சொத்துக்கள் சாம்ராஜ் என்பவரிடம் இருந்ததும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தேசிய சொத்துக்களை இவர்கள் இருவரும் தமது உடமையாக்கியதும் தான் அந்தத் தொடர்பு. அது பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு