ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 12

ஞாயிறு ஜூலை 01, 2018

1997-1998ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய நாடொன்றில் நடந்த சம்பவம் அது. ஐரோப்பிய நாடுகளைக் கடும் குளிரும், பனியும் வதைத்தெடுத்துக் கொண்டிருந்த பின்பனிக் காலத்தில் அது நிகழ்ந்தது.

‘ராஜ் அண்ணை, ஹீற்றரை (வெப்பவூட்டியை) போடுங்கோ. கடும் குளிராக இருக்குது...’

தனது அறையில் இருந்த அந்தப் போராளியிடம் அவருடன் தேசியப் பணிக்காகக் கூடச் சென்றிருந்த செயற்பாட்டாளர் வேண்டினார்.

ஆனால் கூட இருந்த ராஜ் என்ற போராளியோ மசியவில்லை. பதிலுக்கு அவர் கூறினார்: ‘இயக்க செயற்பாடுகளில் ஈடுபடும் நாங்கள் இப்படியான குளிரிலும் வாழப் பழக வேண்டும். எனக்குத் தெரிய சில போராளிகள் கடும் குளிரில் மொஸ்கோவில் வாழுகீனம். அமைப்புச் சொல்லிப் படிக்கிறதுக்கு என்று மொஸ்கோவிற்கு வந்தவையள். போதிய வசதிகள் இல்லை. சாப்பாடு இல்லை. கையில் பணம் இல்லை. ஆனாலும் சமாளிச்சுக் கொண்டுதான் அவையள் இருக்கீனம். நாங்களும் இப்படியான நாடுகளில் போய் வேலை செய்ய வேண்டி வரலாம். அப்படியான சூழல்களுக்கு இப்பவே எங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.?

இந்த வார்த்தைகளைக் கேட்ட பொழுது அந்தப் போராளி மீது இருந்த மதிப்பு அவருடன் கூடச் சென்றிருந்த செயற்பாட்டாளருக்குப் பன்மடங்காகியது. ‘போராளி என்றால் இப்படி இருக்க வேண்டும். ஆள் ஒரு உண்மையான போராளிதான்...’ என்று அவர் தனக்குள் கூறிக்கொண்டார்.

*****************************************************************

இப்பொழுது மீண்டும் வாசகர்களை கோலாலம்பூர் நோக்கி அழைத்துச் செல்கிறோம். சட்டத்துறையில் கல்வி கற்பதற்காக என்று சமாதான காலத்தில் வந்து, ஏறத்தாள ஆறு ஆண்டுகளுக்கு மேலாக எதையும் கற்காது காலத்தைக் கடத்தி இயக்கப் பணத்தை வீணடித்த சுகி (சுபன்) என்ற நபரைத் தனது நிர்வாகப் பொறுப்பாளராக கே.பி நியமித்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்த பொழுது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு கே.பியின் ஆளுமைக் குறைபாட்டை நினைத்துச் சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று தெரியவில்லை.

அத்தருணத்தில் ‘பரமார்த்த குருவும் அவரது சீடர்களும்’ என்ற கதைதான் அவரது நினைவில் அலைமோதியது.

திடீரென தனது பக்கவாட்டில் நிழலாட, அவர் திரும்பிப் பார்த்தார். அவரை நோக்கி இப்பொழுது கே.பி வந்து கொண்டிருந்தார். முதல் நாள் அவர் அணிந்திருந்த சாரத்தின் இடத்தை நீள்காற்சட்டை ஒன்று அலங்கரித்தது. அவரது கறுப்பு நிற மூக்குக் கண்ணாடியும் காணாமல் போயிருந்தது.

கே.பியுடன் கூடவே இன்னுமொருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைக் குள்ளமானவர் என்றும் கூற முடியாது, நடுத்தர உயரமுடையவர் என்றும் கூற முடியாது. தலையில் வழுக்கை விழுந்தவர் என்றும் கூற முடியாது, அடர்ந்த முடியுடையவர் என்றும் கூற முடியாது. ஆனாலும் அவரது தடித்த மீசை மட்டும் அவரை அடையாளம் காட்டியது.

‘சந்தேகமே இல்லை. இவர் தான் தயாமோகன்’ இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் தனது மனதுக்குள் எடை போட்டுக் கொண்டார்.

*****************************************************************

‘கே.பி. அண்ணை யதார்த்தத்தை விளங்கி நடக்கிறார். அதை நீங்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு கே.பி அண்ணையிடம் இருந்து எல்லாப் பொறுப்புக்களையும் இயக்கம் எடுத்ததும் உண்மைதான். கிட்டத்தட்ட பென்சன் (ஓய்வூதியம்) நிலையில் தான் கே.பி அண்ணை இருந்தவர். ஆனால் இது நாங்கள் கட்டி வளர்த்த கட்டமைப்பு. அதுவும் நான் கட்டி வளர்த்த கட்டமைப்பு. இப்ப அதுக்கு மேல் மாபியா குந்திக் கொண்டு இருக்குது. நெடியவனும், கஸ்ரோவின் வாலுகளும் ஆடுகினம். நானும் பொறுமையாகத் தான் இருக்கிறன். ஆனால் எனக்கு விசர் வந்திட்டுது என்றால், பிறகு என்னை ஆராலையும் கட்டுப்படுத்த முடியது.

வெறி கொண்டு விசர் ஆட்டம் ஆடுவேன்,? இப்படி மாறன் என்று நினைத்து உரையாடிக் கொண்டிருந்தவரிடம் சர்வே கூறினார்.

அன்றைய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் பதில் பொறுப்பாளராக விளங்கிய நெடியவன் மீதும், போராளிகள் மற்றும் கிளைச் செயற்பாட்டாளர்கள் மீதும் சர்வே சீற்றம் கொண்டதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் பொறுப்பாளர் பதவியில் இருந்து 2003 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கே.பி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வன்னிக்கு சர்வே அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் உலகெங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் கடன்களை சர்வே குவித்து வைத்திருந்ததோடு, உரிய முறையில் நிதி திரட்டல் கணக்கு விபரங்களைப் பேணவில்லை என்பது தமிழீழத் தேசியத் தலைவருக்கும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் - தளபதிகளுக்கும் சரி, தித்திப்பான செய்தியாக இருக்கவில்லை.

இதனால் சர்வேயை சந்திப்பதற்குத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பின்னடித்து வந்தார். அது மட்டுமல்ல. கிளிநொச்சியில் தங்கியிருந்த பொழுது தான் யாழ்ப்பாணம் செல்ல விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் போராளிகளிடம் சர்வே கேட்டுக் கொண்டார். தன்னைப் பிரத்தியேகமான வாகனம் ஒன்றில் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் யாழ்ப்பாணத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுப்பி வைப்பார்கள் என்று தான் சர்வே எதிர்பார்த்தார். ஆனால் நடந்ததோ வேறு. சர்வே அவர்களைக் கிளிநொச்சி நகருக்கு அழைத்துச் சென்ற அனைத்துலகத் தொடர்பகப் போராளி ஒருவர், அங்கு நின்ற பொதுமக்கள் பயணிக்கும் பேருந்து வண்டியயான்றைக் காண்பித்து, ‘இதில் நீங்கள் ஏறினால் யாழ்ப்பாணம் போகலாம்,’ என்று கூறி அவரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார்.

இவ்வாறான சின்னச் சின்னக் காரணங்களை வைத்துத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மீதும், அனைத்துலகத் தொடர்பகப் போராளிகள் மற்றும் கிளைச் செயற்பாட்டாளர்கள் மீதும் 18.05.2009 இற்குப் பின்னர் சர்வே அவர்கள் காழ்ப்புணர்ச்சியைக் காண்பிக்கத் தொடங்கினார்.

இங்கு ஒரு விடயத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டும். தான் கட்டி வளர்த்ததாக உரிமை கோரிய கட்டமைப்பின் மீது மாபியா குந்தியிருப்பதாக சர்வே குற்றம் சுமத்தியிருந்தாலும், உண்மையில் மாபியா பாணியில் தான் கே.பியும், அவரது இரு கரங்களான சர்வே, மனோ (வேலும்மயிலும் மனோகரன்) ஆகியோரும், அவர்களுக்குப் பரிவட்டம் கட்டுவோரும் 2003 ஆம் ஆண்டிற்கு முன்னர் வெளிநாடுகளில் காட்டாட்சி புரிந்தார்கள் என்பது தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் அறிந்த உண்மை.

தவிர, 18.05.2009 இற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை சாம்ராஜ் மற்றும் மாறன் அல்லது மணி போன்ற பெயர்களில் இயங்கும் நபர்கள் கையகப்படுத்தியமை போன்று, 2003ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களில் கணிசமானவற்றை கே.பியும், சர்வே, மனோ மற்றும் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டுவோரும் கையகப்படுத்தியிருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தில் ஐவரி கோஸ்ட் போன்ற ஆபிரிக்க நாடுகளில் வாங்கப்பட்ட பல ஏக்கர் பண்ணைகளை தனது தனிப்பட்ட உடமையாக 18.05.2009 இற்குப் பின்னர் சாம்ராஜ் மாற்றிக் கொண்டது போன்று, 2003 ஆம் ஆண்டுக்கு முன்னர் கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தில் வாங்கப்பட்ட பண்ணைகளை கே.பி தனது உடமையாக்கிக் கொண்டார்.

இவை மட்டுமல்ல, இயக்கப் பணத்தில் மலேசியாவில் வணிக வளாகத் தொகுதி, சீனாவில் உற்பத்தி சாலைகள், பிரித்தானியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் போன்றவற்றை சாம்ராஜ் அவர்கள் தோழரான மாறன் அல்லது மணி என்றழைக்கப்படும் நபர் தனது உடமையாக்கியது போன்று, கட்டாரில் இயக்கப் பணத்தில் மீன் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம், கனடாவில் நகைமாடம் போன்றவற்றை கே.பியின் நம்பிக்கை நட்சத்திரங்களான மனோ, இன்பம் ஆகியோர் நடத்தி வந்தார்கள். அதாவது ஒரு மாபியா பாணியிலான வலையமைப்பைத் தான் 2003ஆம் ஆண்டுக்கு முன்னர் கே.பியும், அவரது கையாட்களும் கொண்டிருந்தார்கள்.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு