ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 7

Thursday April 19, 2018

‘தமிழீழம் அமைவதைப் பற்றி எம்.கே.நாராயணனின் நிலைப்பாடு என்ன?’

இப்படித் தான் கேட்டதும் என்ன செய்வதென்று தெரியாது கே.பி திணறுவார் என்றே கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் எண்ணினார். ஆனால் அதனையிட்டு எந்தச் சலனத்தையும் கே.பி காண்பிக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பின்னர் தனது இடது காலின் மேல் வலதுகாலைப் போட்டவாறே இன்பத்தைப் பார்த்துக் கே.பி கூறினார்: ‘ஒருக்கா இதைப்பற்றி அண்ணருக்கு விளங்கப்படுத்துங்கோ...’ கே.பியின் குரலில் ஒரு விதமான ஏளனம் தென்பட்டது. ஆனால் அந்த ஏளனம் அவரது கண்களின் வழியாக வெளியில் தெரியாதவாறு அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி அதனை மறைத்திருந்தது. அப்பொழுதுதான் இன்னொரு விடயத்தை கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் அதானித்தார்.

கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதிகள் இருளில் மூழ்கத் தொடங்கியிருந்தன. ஆனால் கே.பி மட்டும் தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றவில்லை. அப்பொழுது இன்பம் பேசினார்: ‘தமிழீழத்தை ஒருக்காலும் இந்தியா ஆதரிக்காது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனால் இந்தியாவில் இருப்பது போல் ஒரு மாநில சுயாட்சி முறை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் என்பதுதான் எம்.கே.நாராயணனின் விருப்பம். இரண்டு கிழமைக்கு முன்னர் கொழும்பில் போய் ராஜபக்சாவை சந்தித்த போது இதைத்தான் தானும், சிவசங்கர் மேனனும் அவரிடம் வலியுறுத்தியதாக நியூயோர்க்கில் உள்ள சிங் மூலம் ருத்ராவுக்கு நாராயணன் தெரியப்படுத்தியிருந்தார். தேட்டீன் பிளஸ் (பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால்) என்று அடிக்கடி இந்திய இராஜதந்திரிகள் சொல்லுவதன் அர்த்தம் இதுதான்.?

‘இந்தியாவில் உள்ள மாநில சுயாட்சிமுறைக்குத்தான் எம்.கே.நாராயணன் ஆதரவு என்றால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று ஏன் அவர் மும்முரமாக நிற்கிறார்? இது ஒன்றுக்கொன்று முரண்பாடானது அல்லவா?’ என்றார் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர். இப்பொழுது கே.பி. திருவாய் மலர்ந்தருளினார்: ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாங்கள் அமைப்பதன் நோக்கம் எங்கடை புலம்பெயர்ந்த மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதுதான். சரியோ, பிழையோ, நாட்டில் இருக்கிற மக்கள் இப்ப கூட்டமைப்புக்காரரைத் தான் தங்கடை புதிய தலைமைத்துவமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கீனம். ஆனால் வெளிநாட்டில் தான் பிரச்சினை. கஸ்ரோவின்ரை பெடியளும், அவையளுக்குப் பின்னாலை நின்று கொண்டு தாங்கள் தாம் தலைவரின்ரை வாரிசுகள் என்று சொல்லிக் கொள்கிற ஒரு சில பேரும் தான் இப்பவும் ஆயுதப் போராட்டம் என்றும், தமிழீழம் என்று கதைச்சுக் கொண்டிருக்கீனம். இவங்கள் மூக்குச்சளி மாதிரி. மூக்கு இருக்கும் வரையும் இருப்பாங்கள். இவங்களுக்காக நாங்கள் மூக்கை வெட்ட ஏலாது. இவங்களிட்டை இருந்து மக்களைப் பிரித்தெடுக்கிற மருந்துதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.’

‘அப்படியயன்றால் இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீங்கள்?’ இப்படிக் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டதும் ஒரு சில வினாடிகளுக்கு அட்டகாசமாகச் சிரித்து விட்டுக் கே.பி பதில் கூறினார்: ‘தமிழீழத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்று சொன்னால் சனம் எங்களை அடிக்கத்தான் வரும். தலைவர் உயிரோடை இல்லை என்று சொன்னதுக்கே ஆளாளுக்கு நெருப்பெடுக்கிறாங்கள். வைகோ என்னைப் பார்த்துக் கடைந்தெடுத்த அயோக்கியன் என்று சொல்கிறார். நெடுமாறன் ஐயா என்னவென்றால், தலைவர் இல்லை என்று அறிவிக்கிறதுக்கு எனக்கு ஆர் அதிகாரம் தந்தது என்று கேட்கிறார். வைகோ, காசி ஆனந்தன், நெடுமாறன் எல்லோரோடையும் கதைச்சு நான் களைத்துப் போய்விட்டேன்.’

கே.பி இவ்வாறு கூறியது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

ஆர்வக் கோளாறு மேலிட அவர் கேட்டார்:  ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி அவையள் என்ன சொல்லுகினம்?’’

**********************************

இப்பொழுது வாசகர்களை ஒரு வாரம் முன்னகர்த்தி, கோலாலம்பூரை விட்டு இலண்டனுக்கு அழைத்து வருகிறோம். வடமேற்கு இலண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் நகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் பல்பொருள் அங்காடி அது. அந்தப் பல்பொருள் அங்காடியை நிர்வகித்து வருபவரின் அழைப்பின் பேரில் அந்தத் தமிழ்த் தேசிய உணர்வாளர் அங்கு வந்திருந்தார்.

‘எனக்கு அவசரமாக இரண்டு பேரின் தொடர்பு தேவைப்படுகிறது. ஒராள் சேகர் அண்ணை. இயக்கத்தின்ரை இலண்டன் பொறுப்பாளராக ஒரு காலத்தில் இருந்தவராம் - கிட்டண்ணை வருவதற்கு முதல். மற்றவன் ஒரு சின்னப் பொடியன். மணி என்று தான் சொல்லுகிறவையள். கஸ்ரோ அண்ணை இலண்டனுக்கு அனுப்பி ஆட்களில் ஆளும் ஒருவனாம்.’ அதற்கு அங்கு வந்திருந்தவர் கூறினார்: ‘சேகர் அண்ணையின்ரை தொடர்பு எடுக்கிறது பெரிய விசயம் இல்லை, திரு அண்ணை. பொலிஸ் பாஸ்கரிட்டை கேட்டால் அவரோடு தொடர்பு எடுக்கலாம். ஆனால் மணி யார் என்று எனக்குத் தெரியவில்லை. கஸ்ரோ அண்ணையின்ரை பெடியன்களில் ஒருவர் என்றால் ஒரு வேளை பெரிய மகேஸ் அண்ணையின் தொடர்பில் இருக்கும் ஆளாக அவர் இருக்கலாம்.’ ‘இந்த இரண்டு பேரின் தொடர்பையும் அவசரமாக எடுத்துத் தரச் சொல்லி விநாயகம் அண்ணை கேட்டிருக்கிறார். ஆள் இத்தாலியில் வந்து நிற்கிறார். கொழும்பில் கெதியில் ஒப்ரேசன் ஒன்று செய்ய வேண்டுமாம். அதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்படுகின்றது. இவையள் இரண்டு பேரிட்டையும் இயக்கத்தின்ரை சொத்துக்கள் இருக்கிறதாகக் கேள்வி.’

**********************************

இப்பொழுது மீண்டும் வாசகர்களை ஒரு வாரம் பின்னகர்த்தி, கோலாலம்பூர் நோக்கி அழைத்து வருகின்றோம். கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்ட கேள்விக்கு உடனடியாகக் கே.பி பதில் கூறவில்லை. சற்று நிதானிப்பது போல் பாசாங்கு செய்து விட்டு கே.பி பேசத் தொடங்கினார்: ‘நான் வைகோ, நெடுமாறன் ஐயா, காசி ஆனந்தனோடை மட்டும் கதைக்கவில்லை. அவயைளோடு நின்ற எங்கடை ரெலோ எம்.பி சிவாஜிலிங்கத்தோடையும் கதைச்சனான். சிவாஜிலிங்கத்தை எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அந்தக் காலத்தில் பாங்க் றொபரி (வங்கிக் கொள்ளை) ஒன்றில் நாங்கள் ஈடுபடும் போது தான் அதில் பங்குபற்றியதாகவும், அதில் தனக்கு என்னை நன்றாகத் தெரியும் என்றும் சிவாஜிங்கம் சொன்னவர். நான் அப்ப ரெலோவோடு இருந்தாலும் தலைவரோடை - அதாவது எங்கடை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தான் நின்றனான். இன்னும் சில நாட்களில் சிவாஜிலிங்கம் இங்கை வருவார். தலைவருக்கு மிகவும் நெருக்கமான வல்வெட்டித்துறை ஆட்கள் சில பேரையும் ஆள் இஞ்சை கூட்டுக் கொண்டு வருவதாக இருக்கிறார். என்னைத் தலைவருக்கு அறிமுகப்படுத்தியது அமிர்தலிங்கம் ஐயா தான்.’

கே.பி கூறியது ஒரு அண்டப் புழுகு என்பது அப்பொழுது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்குத் தெரிந்திருக்கவில்லை. கே.பியின் ஆரம்ப காலப் போராட்ட நாட்கள் ரெலோ இயக்கத்துடனேயே இருந்தன. அப்பொழுது அவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கவில்லை. 1982ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் ரெலோ இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து அவ் அமைப்பை விட்டு வெளியேறித் தமிழ்நாடு சென்ற கே.பி, அங்கு விஸ்ணுசுந்தரம் என்ற கள்ளக்கடத்தல் வியாபாரியிடம் முகவர் கட்டணம் (கொமிசன்) பெற்றுத் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஓட்டுவதற்காகக் கள்ளக்கடத்தல்களில் ஈடுபட்டு வந்தார். இவ்வாறாகக் கள்ளக் கடத்தல்களில் ஈடுபட்ட ஒரு தடவை நெய்வேலிக் குப்பம் எனும் இடத்தில் வைத்துத் தமிழக காவல்துறையினரால் கே.பி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குப் பின்னரான காலப்பகுதியில் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கே.பி இணைந்து கொண்டார். அப்பொழுது அமிர்தலிங்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நல்லுறவு இருக்கவில்லை. 1977ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கு மக்கள் வழங்கிய ஆணையை உதாசீனம் செய்து விட்டு மாவட்ட சபைகள் பற்றி ஜே.ஆர் ஜெயவர்த்தனவுடன் பேச்சுக்களில் அமிர்தலிங்கம் ஈடுபட்டது, அவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வழிகோலியது.

மீண்டும் கே.பி பேசினார்: ‘மே மாதம் 19ஆம் திகதி நான் காசி ஆனந்தன் அண்ணையோடை ரெலிபோன் (தொலைபேசி) அடிச்சுக் கதைச்சனான். தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார். அவருக்கு ஒரு நல்ல வீரவணக்கப் பாட்டு எழுதித் தாங்கோ என்று கேட்டனான். ஆள் மாட்டன் என்று சொல்லிப் போட்டார். கொஞ்ச நேரத்தில் நெடுமாறன் ஐயோவோடு கதைச்சனான். கூட வைகோவும் (லைனுக்கு) அழைப்புக்கு வந்தவர். நான் இரண்டு பேரிட்டையும் நிலமையை எடுத்துச் சொன்னனான். ஆனால் வைகோவும், நெடுமாறன் ஐயாவும் கேட்கவில்லை. தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் என்று என்னையே கேள்வி கேட்டவையள். இதுக்குப் பிறகு நான் என்ன செய்யிறது?’

‘ஆனால் நெடுமாறன் ஐயாவுக்கு தலைவரோடு நீண்ட நாட்களாகத் தொடர்பு இருக்கிறது அல்லவா? அப்படி இருக்கும் போது தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று அவர் சொல்வது உண்மை தானே?’

இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டதும், வேகமாகத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்த கே.பி தனது கறுப்புக் கண்ணாடியை அகற்றி விட்டு தனது எதிரில் இருந்தவரை உற்றுப் பார்த்தவாறு கூறினார்: ‘தலைவர் வெளியில் வரும் வரை அவசரப்படாமல் களத்தில் நிற்கிற தளபதிகளோடு கதைத்து இயக்கத்தைப் பலப்படுத்தச் சொல்லி எனக்கு நெடுமாறன் ஐயா அட்வைஸ் (ஆலோசனை) பண்ணினவர். நான் சொன்னேன் மிஞ்சியிருக்கிற தளபதிகள் எல்லோரும் என்னோடு தான் நிற்கீனம். இப்ப நாங்கள் செய்ய வேண்டியது தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று மக்களுக்கு அறிவித்து விட்டு புதிய வழியில் சிந்திக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நெடுமாறன் ஐயா கேட்கவில்லை. புதிதாக ஒரு வழியும் இல்லை. தலைவர் வெளியில் வரும் வரை அமைதியாக இருப்பதுதான் வழி என்று எனக்கு நெடுமாறன் ஐயா அட்வைஸ் பண்ணத் தொடங்கி விட்டார். அவருக்கு யதார்த்தம் விளங்கவில்லை. இதுக்குள்ளை வைகோ எனக்கு எச்சரிக்கை செய்தவர் தலைவர் இல்லை என்று நான் அறிவித்தால் என்னைப் பதிலுக்குத் துரோகி என்று தான் அறிவிப்பேன் என்று. நான் கதைச்ச ஆட்களில் சிவாஜிலிங்கம் மட்டும் தான் நான் சொன்னதைக் கேட்டவர்.’

‘அப்படியயன்றால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நீங்கள் அமைக்கிறதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருக்கா?’ ‘அப்படியயன்று சொல்ல முடியாது. சிவாஜிலிங்கம் எங்களின் பக்கம் நிற்கிறார். அமெரிக்காவில் இருக்கிற பொபி மூலம் இன்னொரு கூட்டமைப்பு எம்.பியோடையும் இது பற்றி நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிறோம்.’

அத்தருணத்தில் பொபி என்று கே.பி குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் பத்திரிகையின் துணை ஆசிரியராக விளங்கியவரும், ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரில் காயமடைந்து பின்னர் இயக்கத்தை விட்டு விலகி அமெரிக்கா சென்று, அங்கு உருத்திரகுமாரனின் உதவியாளராக விளங்கியவருமான பரந்தாமன் என்ற இயற்பெயரையும், வழுதி என்ற புனைபெயரையும் கொண்டவர் தான் அந்த பொபி. அமெரிக்க துணை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளாட் அவர்களுடன் தனக்கு இருந்த தொடர்பைப் பயன்படுத்தி வன்னியில் மக்களை மீட்பதற்காக அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கப்பற் தொடர் படையணியை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்வதாகத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு போக்குக் காட்டியவர் தான் இந்த பொபி. இவர் பற்றியும், இவரது செப்படி வித்தைகள் பற்றியும் கடந்த காலத்தில் ஈழமுரசு பத்திரிகை வெளிக்கொணர்ந்தது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவ்விடத்தில் துரோகங்களின் நதிமூலங்களை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கான இன்னுமொரு செய்தியும் உள்ளது. உருத்திரகுமாரனின் உதவியாளராக விளங்கிய இந்த பொபி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியிருந்தார். அங்கு சிறப்பு அதிதிகளாக சிங்கள ஒட்டுக்குழுத் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப் பெருமாள், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட ஒருவர் ஊடாக, அதாவது துரோக நதிகளை ஒருங்கிணைக்கும் பொபி ஊடாகத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தாங்கள் பேசிக் கொண்டிருப்பதாக தனது பிடியில் சிக்கியிருந்தவரிடம் கே.பி தெரிவித்திருந்தார்.

( மடையுடைப்புத் தொடரும் )

நன்றி: ஈழமுரசு