ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 8

Monday May 07, 2018

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்களுக்கு கூட்டமைப்பின் இரண்டு எம்.பிமார் மட்டும் தான் ஆதரவு என்றால், எப்படி ஏனைய எம்.பிமாரின் ஆதரவைப் பெறப் போகிறீர்கள்?” இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்ட பொழுது எந்தத் தயக்கமும் இன்றி கே.பி கூறினார்: “இது நாங்கள் உங்களுக்கு உதாரணத்துக்குச் சொன்னது. இன்னும் சில எம்.பிமாரோடையும் எங்களுக்குத் தொடர்பு இருக்கு. சண்டை நடந்த கடைசி நாட்களிலை கூட்டமைப்பின் இன்னொரு எம்.பி ஒருவர் ஊடாக பசில் ராஜபக்சவோடையும் நான் கதைச்சனான். அப்படி எங்களுக்கு வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு ஆட்களோடு தொடர்பு இருக்கு. ஆனால் கூட்டமைப்பை மட்டும் நாங்கள் நம்பியிருக்க முடியாது. மற்றைய கட்சிக்காரர்களோடு நாங்கள் உறவை வைச்சிருக்க வேண்டும்.”

மற்றைய கட்சிக்காரர்கள் என்று கே.பி யாரைக் குறிப்பிடுகின்றார் என்பதைப் புரிந்து கொள்வதென்பது கே.பியின் பிடியில்  சிக்கியிருந்தவருக்கு அவ்வளவு கடினமான ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் என்ற கோதாவில் தன்னுடன் உரையாடியவாறு கே.பி இப்படிக் கூறியதுதான் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தனது புருவங்களை உயர்த்தி அதிர்ச்சியுடன் கே.பியை அவர் நிமிர்ந்து பார்த்தபொழுது கே.பி கூறினார்: “சண்டை தீவிரமடைஞ்சவுடன் நான் எல்லாரோடையும் தான் கதைச்சனான். ஏன் இப்ப அமைச்சராக இருக்கிற ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட கடைசி நாட்களில் நான் அடிச்சுக் கதைச்சனான். ருத்ராவிடம் சொல்லி, பொபி மூலமாக புளொட் தலைவர் சித்தார்த்தனோடையும் கூட கதைச்சனான். சண்டையை நிற்பாட்டுவதற்காக நான் கதைக்காத ஆட்கள் ஒருத்தரும் இல்லை. அந்த அளவுக்கு நான் கடும் முயற்சி எடுத்தனான்.”

“டக்ளசோடு நீங்கள் கதைச்சனீங்களா?”

“ஓம், இலண்டனில் இருக்கிற அங்கை மூலமாக தொடர்பெடுத்துக் கதைச்சனான். ஒரு காலத்திலை டக்ளஸ், நான், அங்கை எல்லோரும் இந்தியாவில் ஒன்றாகத்தான் இருந்தோம்: ஒரே கோப்பையில் சாப்பிட்டோம்.”

இதற்கு மேலும் கே.பியின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தால் கைகலப்பில் தான் முடியும் என்பது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்குப் புரிந்திருந்தது. எனவே கே.பியிடம் அவர் கேட்டார்: “கன தூரம் பயணம் செய்ததால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் நல்லம். பக்கத்தில் ஏதாவது ஹொட்டேல் இருக்கா?” ஏதாவது விடுதிக்குச் சென்று விட்டால் அங்கிருந்து எப்படியாவது விமான நிலையம் சென்று அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்லலாம் என்பதே அவரது நப்பாசை.

அப்பொழுது இன்பம் கூறினார்: “நீங்கள் தங்குவதற்கு என்று ஹொட்டேல் எதையும் நாங்கள் ஒழுங்கு பண்ணவில்லை. இப்போதைக்கு நீங்கள் இங்கேயே தங்கலாம். நாளைக்கு எங்களின் முக்கிய உறுப்பினர்மார் சில பேர் இஞ்சை வருவீனம். அவையளையும் நீங்கள் சந்திச்சுக் கதைக்கலாம்.”  இவ்வாறு இன்பம் கூறியது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அத்தருணத்தில் கே.பி மீண்டும் பேசினார்: “சுகி என்று எங்கடை முக்கிய போராளி ஒருவர் இஞ்சை இருக்கிறார். அவர் எங்கடை அமைப்பின்ரை முதலாவது ஜட்ஜ் (நீதிபதி). மேற்படிப்புக்காக அவரை மலேசியாவுக்குத் தலைவர் அனுப்பி வைச்சவர். இன்னொரு பிரமுகரையும் ஊரில் இருந்து இஞ்சை கொண்டு வந்திருக்கிறம். ஆளை எங்கடை பொடியங்கள் வெளியிலை கூட்டிக் கொண்டு போயிருக்கிறாங்கள். நாளைக்கு பெரும்பாலும் சுகியோடு அவரையும் நீங்கள் சந்திக்கலாம். ஆள் கிழக்கில் இருந்து வந்திருக்கிறார்.”

“ஆர் தயாமோகனா?” இப்படிக் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டதும், முகத்தில் அசடு வழிய இன்பம் கூறினார்: “சரியாகக் கண்டுபிடிச்சிட்டியள். தயாமோகன் இப்ப இஞ்சை தான் நிற்கிறார். ஆளை நாங்கள் பத்திரமாக மட்டக்களப்பில் இருந்து கொண்டு வந்து விட்டோம்.”

******************************************************

மேற்கு இலண்டனில் அக்ரென் எனும் நகருக்குச் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் மூன்று அறை வீடு அது. அவ்வீட்டின் பின்புறத்து அறையில் மடிக் கணினியொன்றின் விசைப்பலகைகளைத் தட்டியவாறே தன்னிடம் வந்திருந்தவரிடம் அங்கிருந்தவர் பேச்சுக் கொடுக்கிறார்: “உங்களிடம் ஏதாவது நல்ல பிசினஸ் ஐடியாக்கள் ஏதாவது இருக்கா?”

“எப்படியான ஐடியாக்கள்?”

“வண் மில்லியன் (பத்து இலட்சம்) பவுண்சுக்கு எடுக்கக் கூடிய பெற்றோல் ஸ்ரேசன் (எரிபொருள் நிரப்பும் நிலையம்) பிசினஸ் ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?” இப்படி சர்வசாதாரணமாக மடிக் கணினியின் விசைப்பலகையை வருடியவாறே அங்கிருந்தவர் கேட்டது வந்திருந்தவருக்குத் தூக்கிவாரிப் போடும் வகையில் அமைந்திருந்தது. தனது புருவங்களை உயர்த்தியவாறே அவர் கேட்டார்: “ஒரு மில்லியன் பவுண்சா, ஒரு இலட்சம் பவுண்சா?” 

“ஒரு மில்லியன் பவுண்சுக்குத் தான் நான் கேட்கிறேன்.” எந்தச் சலனமும் இன்றி வந்த பதில் வந்திருந்தவரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

“மாறன் அண்ணை, ஒரு பெற்றோல் ஸ்ரேசன் எடுக்கிறதுக்கு ஒரு இலட்சம் பவுண்சு  போதும்.

அதுவும் அவுட் ஒப் இலண்டனில் (வெளிமாவட்டங்கள்) இன்னும் குறைஞ்ச காசில் பெற்றோல் ஸ்ரேசன்களை எடுக்கலாம்.”

இப்பொழுது மடிக் கணினியில் இருந்து தனது விரல்களை எடுத்து விட்டு மாறன் என்பவர் கூறினார்: “நான் ஒரு மில்லியன் பவுண்சுக்கு பெற்றோல் ஸ்ரேசன் எடுக்கிறது பற்றிக் கதைக்கிறன். முழுக் கட்டிடத்தையும், காணியையும் நாங்கள் விலைக்கு வாங்கிற மாதிரித் தான் ஐடியா.”

“ஒரு மில்லியன் பவுண்சா? அவ்வளவு காசுக்கு எங்கே போகப் போகிறீங்கள்?” இவ்வாறு மாறன் என்பவரின் எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்ட பொழுது, அவரை ஒரு ஏளனப் பார்வையுடன் சில வினாடிகள் மாறன் என்பவர் பார்த்தார். அந்தப் பார்வையில் பண முதலீடுகள் பற்றித் தெரியாத ஒருவரிடம் உரையாடிய தோரணையே அவரிடம் தென்பட்டது.

******************************************************

“அண்ணைக்கான இரவுச் சாப்பாட்டை ஒழுங்குபடுத்திப் போட்டு அவரின் அறையைக் காட்டுங்கோ. ஆள் ரெஸ்ட் எடுக்கட்டும். மிச்ச விசயங்களை நாளைக்கு சுகி வந்த பிறகு கதைப்பம்.” இவ்வாறு இன்பத்திடம் கட்டளை பிறப்பித்து விட்டு, தனது வீட்டின் உட்புறத்திற்குள் கே.பி நுழைந்தார்.

“உங்களுக்கேன் சிரமம். நான் ஏதாவது ஹொட்டேல் போய் தங்குகிறேன். ரக்சி (வாடகை மகிழுந்து) ஏதாவது ஏற்பாடு செய்து தந்தீர்கள் என்றால் நான் ஏதாவது ஹொட்டேல் பார்த்துப் போகிறேன்.” இவ்வாறு அங்கிருந்து தப்பும் இறுதி முயற்சியாக கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்ட பொழுது, ஒரு ஏளனச் சிரிப்புடன் இன்பம் கூறினார்: “இஞ்சை எல்லா வசதிகளும் இருக்கும். நாங்கள் ஹொட்டேல் ஒன்றை புக் (பதிவு செய்து) பண்ணி வைச்சிருக்கிறம். ஆனால் அது அடுத்த கிழமை வாற ஆட்களுக்காகத் தான். அங்கை தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கிறது பற்றின சந்திப்புக்களை நடத்துவதாக இருக்கிறம். இப்போதைக்கு நீங்கள் இங்கேயே தங்கியிருக்கலாம்.”

******************************************************

இலண்டனில் உள்ள பணப் பரிவர்த்தனை நிலையம் ஒன்றின் பணியாளர் ஒருவரிடம் இருந்து வெளிப்பட்ட அந்தத் தகவல், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருந்தது...

“சண்டை முடியிறதுக்கு சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் உள்ள ஒருத்தருக்கு இலண்டனில் இருந்து உண்டியல் மூலம் இஞ்சையிருக்கிற ஆட்கள் அனுப்பின ஒரு மில்லியன் பவுண்ஸ் பணம், அந்தக் கனடாக்காரனிடம் இருந்து திரும்பவும் இலண்டனுக்கு வந்திருக்கு. ஆனால் உண்டியலில் கனடாவிற்கு அனுப்பி வைத்த ஆட்களுக்கு அந்தப் பணம் திரும்பி வரவில்லை. மணி என்கிற ஒருவருக்குத்தான் அது வந்திருக்கு.

“யார் அந்த மணி?”    

“அப்ப மணி ஒரு மில்லியனெயர்...?”

“மணியிடம் நிறைய மணி இருக்கு.”

இவ்வாறு ஒவ்வொருவரும் பேசிக் கொண்டாலும், எல்லோருடைய கவனமும் மணி என்ற பெயருக்குரியவர் யார் என்பதை இனம் காண்பதிலேயே இருந்தது. மணி என்ற பெயருக்குரிய அந்த நபரை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் தேடினார்கள், யுத்தத்தின் இறுதி நாட்களில் பெரும் தொகைக் கடனுதவி வழங்கிய தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் தேடினார்கள், கிரிதலவில் போலித் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறையை நிறுவிய தவேந்திரனின் ஆட்களும் தேடினார்கள், தனது துணைவியாரையும், குடும்பத்தினரையும் சிங்களப் புலனாய்வுத்துறையினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததால், கே.பியின் தலைமையை ஏற்றுக் கொண்ட விநாயகம் அவர்களின் கையாட்களும் தேடினார்கள்.

ஆனால், கோலாலம்பூரில் தங்கியிருந்த கே.பியும், நோர்வேயில் இருந்தவாறு கே.பியின் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவரது வலது கரமான சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேந்திராவும் மட்டும் இலண்டனில் தங்கியிருந்த மாறன் என்பவரைத் தேடும் படலத்தில் இறங்கியிருந்தார்கள்.

( மடையுடைப்புத் தொடரும் )

நன்றி: ஈழமுரசு