ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 14

புதன் ஓகஸ்ட் 01, 2018

பணக்கறையும், குருதிக்கறையும் படிந்த கரங்கள்
- கலாநிதி சேரமான்

‘சரி, தமிழீழத்தை அடைவதற்கு உங்கள் திட்டம் என்ன?’ இப்படி சர்வே அவர்களிடம் மாறன் என்று நினைத்து சர்வே உரையாடிக் கொண்டிருந்தவர் கேட்டதும், மிகுந்த உற்சாகத்துடன் சர்வே பேசத் தொடங்கினார்.

‘இண்டைக்கு இயக்கத்தில் மிஞ்சி இருக்கிற ஆரம்ப கால உறுப்பினர் கே.பி அண்ணை மட்டும் தான். இயக்கத்தின் ஆயுத விநியோகங்கள் பற்றிய சுழியோடல்கள் தெரிந்தவரும் அவர் தான். நாங்கள் அவரின் வழிகாட்டலின் படிதான் நடக்க வேணும். இனிமேல் ஆயுதப் போராட்டம் என்பது சாத்தியமில்லை. அதனால் தான் ருத்ராவின் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கப் போகிறோம்.’இப்படி சர்வே கூறியதும் தான் தாமதம், சர்வே அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவர் சீற்றத்துடன் குறுக்கிட்டுக் கூறினார்: ‘தென்சூடானில் இருப்பது போல் இடைக்கால நிர்வாகத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டால் அதுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் என்று தலைவருக்குப் படம் காட்டியவர் தான் இந்த ருத்ரா. தனக்கு கிறிஸ்ரீனா றொக்காவுடன் (தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க அமைச்சர்) நேரடித் தொடர்பு இருக்கிது என்றும், இடைக்கால நிர்வாகத் திட்டத்தை இயக்கம் முன்வைத்தால் அதனை அடிப்படையாக வைத்துத் தன்னால் கிறிஸ்ரீனா றொக்காவுடன் பேசி அமெரிக்காவின் ஆதரவைப் பெற முடியும் என்று சொன்னவர் தான் ருத்ரா. ஆனால் கடைசியில் நடந்தது என்ன? தலைவருக்கும், இயக்கத்துக்கும், சனத்துக்கும் ருத்ரா நம்பிக்கைத் துரோகம் செய்தவர். இந்தப் பிரச்சினைக்குப் பிறகு தான் கலந்து கொண்ட எந்தப் பேச்சுவார்த்தைக்கும் ருத்ராவை பாலா அண்ணை கூப்பிட்டதில்லை. தலைவரும் அதுக்குப் பிறகு ருத்ராவை வன்னிக்கு கூப்பிட்டதில்லை. அப்படிப்பட்ட ஒரு ஏமாற்றுப்பேர்வழி ருத்ராவை நம்பியா நீங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கப் போறீங்கள்?’

ஆனால் சர்வே அவர்களோ விடுவதாக இல்லை: ‘அடேயப்பா, நீ ஒரு விசயத்தை விளங்கிக் கொள். ருத்ரா பாவம். இயக்கம் அழிஞ்சதுக்கு தலைவர் தான் காரணம். சமாதான காலத்தின் இடைநடுவில் தலைவர் தான் கடும்போக்கான நிலைப்பாடு எடுத்தவர். ‘‘இவ்வளவு நாளும் மீசை வழிச்ச பிரபாகரன் கதைச்சவர். இனி மீசை வளர்த்த பிரபாகரன் கதைப்பார்’’ என்று சொல்லித் தலைவர் தான் கடும்போக்கான நிலைப்பாட்டை எடுத்து சர்வதேசத்தைப் பகைச்சுக் கொண்டவர். பாலா அண்ணை தான் உண்மை விளங்காமல் ருத்ரா தலைவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து போட்டார் என்று தேவையில்லாமல் பழிபோட்டவர்.’ 


இப்பொழுது உரையாடல் காரசாரமான கட்டத்தை தொட்டிருந்தது. ஏனென்றால் தென்சூடானின் பாணியில் இடைக்கால நிர்வாகத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரினால் அதற்கு அமெரிக்காவும், ஏனைய உலக நாடுகளும் ஆதரவு வழங்கும் என்று விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் மாயாஜாலம் புரிந்த காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு சர்வே நீக்கப்பட்டிருந்தார். அதாவது அக்காலப் பகுதியில் இயக்கத்திற்குள் என்ன நடந்தது என்பது சர்வே அவர்களுக்குத் தெரியாது. பல மாதங்களாகத் தனது தொலைபேசி இணைப்பை மாற்றாமல் சர்வே வைத்திருந்தும் அவருடன் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பு கொள்ளவேயில்லை. அப்படியிருந்தும் ருத்ராவின் ஏமாற்று வித்தைகளை மூடி மறைத்துத் தமிழீழத் தேசியத் தலைவர் மீதும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மீதும் சர்வே அவர்கள் பழிபோட முற்பட்டது அவரது துணிச்சலின் உச்சம்தான்.

ஆனால் சர்வேயுடன் உரையாடிக் கொண்டிருந்தவரோ விடவில்லை: ‘உண்மையில் என்ன நடந்தது என்று பாலா அண்ணை எனக்குச் சொன்னவர். ருத்ரா தனது நம்பிக்கைக்கு உரியவர் என்றால், பாலா அண்ணையின் மரணத்துக்குப் பிறகு அவரது இடத்திற்கு ருத்ராவைத் தலைவர் நியமித்திருப்பார். ஆனால் அப்படித் தலைவர் செய்யவில்லை. ஏனென்றால் கருணா தலைவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தது போல் ருத்ராவும் நம்பிக்கைத் துரோகம் செய்தவர். நீங்கள் ருத்ராவை வைச்சு ஏதாவது செய்யப் போகிறீங்கள் என்றால், இன்னொரு பெரிய துரோகம் விரைவில் ருத்ரா தலைமையில் நடக்கப் போகிது என்றுதான் அர்த்தம்.’  

அவ்வளவுதான். மறுமுனையில் எதுவும் பேசாது தொலைபேசி அழைப்பை சர்வே அவர்கள் துண்டித்துக் கொண்டார். அவருக்குத் தெரியும், நெடியவனின் வலது கையான மாறன் என்று நினைத்துத் தான் பேசிக் கொண்டிருந்தவருடன் இனிப் பேசுவதில் எந்தப் பயனுமில்லை என்பதுதான். 

அடுத்தது கே.பியின் திட்டப்படி இன்பத்தின் ஊடாகப் புனைப்பத்தி எழுத்தாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களிடம் மாறன் என்று தான் நினைத்து உரையாடிக் கொண்டிருந்தவர் பற்றிய தகவல்களை வழங்கி, அவர் பற்றிய கட்டுரை ஒன்றை சிங்கள ஊடகம் ஒன்றில் வெளிவர வைத்து, அதன் மூலம் அவர் வாழும் நாட்டில் அவருக்கு சட்ட நெருக்கடி கொடுத்து அவரை ஒதுங்க வைப்பதுதான் கே.பியின் திட்டமாக இருந்தது.

..........

மாறன் என்று நினைத்து சர்வே உரையாடிக் கொண்டிருந்தவரும், மாறன் என்பவரும் வெவ்வேறு நபர்கள் என்றும், விநாயகம், தவேந்திரன், நகுலன், ராம் போன்றவர்கள் தேடிக் கொண்டிருந்த மணியும், உண்மையான மாறனும் ஒரே ஆட்கள் என்பதை எமது கடந்த தொடர்களில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் என்றழைக்கப்பட்ட இந் நபரின் இயக்கப் பெயர் தூயமணி. பெயரளவில் தான் அவர் தூயமணியாக விளங்கினாரே தவிர, பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான மக்கள் பணத்தைக் கையகப்படுத்தித் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் புரிந்த துரோகமணியாகவே அவர் திகழ்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தில் பணிபுரிந்த இவர் 2003ஆம் ஆண்டு அரசியல் கல்வி கற்பதற்காக இலண்டனுக்கு அனுப்பப்பட்டவர். எனினும் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலீடுகளைக் கவனிப்பதற்கு போதிய அளவு போராளிகள் இல்லாத காரணத்தால், சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கும் இவர் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தில் இவரால் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன. அத்தோடு இலண்டனில் தளபாட அங்காடி ஒன்றும் மக்கள் பணத்தில் இவரால் திறக்கப்பட்டது. இவற்றை விட இலண்டனுக்கு வெளியே பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் இவரால் திறக்கப்பட்டன. இவை எல்லாம் இன்று இவரதும், சீனப் பெண்ணான இவரது துணைவியாரதும் தனிப்பட்ட சொத்துக்களாகியுள்ளன.

ஆனால் மாறனை விடப் பன்மடங்கு அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கையகப்படுத்தி வைத்திருப்பவர் அவரது சகாவும், நண்பருமான சாம்ராஜ் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் ஜெயகணேஸ் ஆவார். ஆபிரிக்காவின் ஐவரி கோஸ்ட் தொடக்கம் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளடங்கலாக நியூ சீலண்ட் வரை இவரது வசம் பல மில்லியன் டொலர் இயக்கச் சொத்துக்கள் உள்ளன.

ஐரோப்பாவில் மட்டும் மக்கள் பணத்தில் இவரால் திறக்கப்பட்டு, பின்னர் நட்டக் கணக்குக் காட்டப்பட்டு இழுத்து மூடப்பட்ட உணவங்கள் ஏராளம். தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இருந்த பொழுது பிரான்சு லூட்ஸ் மாதா கோவிலுக்கு அருகில் இவரால் இயக்கப்பட்ட உணவகம் இயக்கப் பணத்தில் உருவாக்கப்பட்டது. அது பின்னர் நட்டக் கணக்குக் காட்டப்பட்டு இழுத்து மூடப்பட்டது வேறு கதை. இதுதான் பாரிசில் இவரால் திறக்கப்பட்ட அச்சகத்திற்கும் நடந்தது. இவை மட்டுமா?

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரிடம் கடனாகப் பெற்று இத்தாலியில் இவரால் திறக்கப்பட்ட மதுபானக் கடை, பின்னர் நட்டக் கணக்குக் காண்பிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது. இன்று வரை அந்தத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரிடம் அவரது கடனை சாம்ராஜ் மீளளிக்கவில்லை.

இதேபோல் பிரான்சில் தனக்கு உதவி புரிந்த தனது இளைமைக் கால நண்பர் ஒருவரின் பெயரையும், வீட்டு முகவரியைப் பயன்படுத்தி ஆவண மோசடி செய்து பல்வேறு சிறிய வங்கிகளில் கடன்களைப் பெற்று, அவற்றை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியவரும் இந்த சாம்ராஜ் தான்.

ஆனால் சாம்ராஜ் அவர்களின் கரங்களில் மக்களின் பணக் கறை மட்டுமன்றி, சில போராளிகளின் குருதி கறைகளும் படிந்திருக்கின்றன.

..........

2011ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி ஒருவருக்கு தமிழ்நாட்டில் தங்கியிருந்த வான்புலிகளின் வானோடி ஒருவரால் ஒரு முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் வெளிநாட்டில் வான்புலிகளால் கொள்வனவு செய்யப்பட்டு, வன்னிக்கு அனுப்பி வைக்க முடியாத காரணத்தால் வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மூன்று விமானங்களைப் பராமரிப்பதற்குப் பணம் தேவைப்படுகின்றது என்றும், இப்பணத்தை விரைவாக செலுத்தத் தவறினால் அந்த மூன்று விமானங்களையும் விற்பனை செய்து தமது செலவுகளை பராமரிப்பாளர்கள் எடுத்து விடுவார்கள் என்பதுதான் அது.

சாம்ராஜ் அவர்களை அந்தப் போராளிக்கு நன்கு தெரியும். அவரிடம் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான இயக்கச் சொத்துக்கள் இருப்பதும் அவருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் பிரிகேடியர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களால் யுத்தம் நிறைவடைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனவே சாம்ராஜ் அவர்களின் வீடு தேடிச் சென்று இயக்கத்தின் வானூர்திகளை மீட்பதற்கான இயக்கப் பணத்தை தருமாறு அந்தப் போராளி கேட்ட பொழுது சாம்ராஜ் என்ன கூறினார் தெரியுமா? 

‘என்னட்டை இருக்கிற காசை எல்லாம் உங்களிட்டைத் தந்து போட்டு பிறகு நான் என்ன செய்யிறது? என்னால் ஒன்றும் தர முடியாது.’ 

இதுதான் அந்தப் போராளிக்கு சாம்ராஜ் கூறிய பதில்.

இப்படி சாம்ராஜ் கூறிக் கைவிரித்த சில மாதங்களில் அந்தப் போராளி சிங்களக் கைக்கூலிகளால் வெளிநாடு ஒன்றில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தங்கியிருந்த வான்புலிகளின் வானோடி இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட, அவர்களின் வலையில் இருந்து தப்புவதற்காகத் தாயகம் திரும்பிய அவர் அங்கு எதிரியின் நடவடிக்கை ஒன்றில் களப்பலியானார்.

(மடையுடைப்புத் தொடரும்)