ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 17

Sunday September 09, 2018

எப்படியாவது கே.பியின் வீட்டில் இருந்து வெளியேறி அங்கிருந்து ரியூன் ஹொட்டேலிற்கு சென்று விட்டால், ஏதாவது வழியைக் கண்டுபிடித்துக் கே.பியின் பிடியில் இருந்து தப்பிச் சென்று விடலாம் என்ற நப்பாசையில் இருந்த அவரது மனதில் இப்பொழுது சிறகுகள் விரிய ஆரம்பித்தன.

முதலில் ரியூன் ஹொட்டேல் செல்வது. பின்னர் அங்கிருந்து எப்படியாவது வெளியேறி தரைவழியில் சிங்கப்பூர் சென்று விட வேண்டும். அதன் பின்னர் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நேரடி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்வதுதான். இப்படியாகக் கற்பனைச் சிறகுகளை விரித்துக் கொண்டிருந்தவரிடம் மீண்டும் கே.பி பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்.

‘நான் தலைவரை வன்னியில் இருந்து பத்திரமாக வெளியில் கொண்டு வந்து அவரது தலைமையில் தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கிறதென்று திட்டமிட்டிருந்தனான். ஏற்கனவே இது பற்றி எங்கடை அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனுடடைய சகோதரர் லூக்காஸ் அம்மானும், பழைய ரெலோ பொறுப்பாளர் சார்ள்ஸ் அன்ரனிதாசும் என்னோடை கதைச்சிருந்தவையள். ஆனால் கஸ்ரோவும், நெடியவனும் திட்டத்தைக் குழப்பிப் போட்டாங்கள். நான் கேட்ட ஒன்றரை மில்லியன் டொலர் காசை நேரத்துக்குத் தந்திருந்தால் தலைவரை வன்னியில் இருந்து நான் பத்திரமாக ஹெலிகொப்டரில் வெளியில் கொண்டு வந்திருப்பன்...’

இப்படி கே.பி கூறியதும் ஒரு கணம் ஜேம்ஸ் பாண்ட் 007 திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு ஏற்பட்டது. அடுத்த கணம் யதார்த்தம் சுரீரென மூளையில் தைக்க, தன்னிடம் கே.பி படம் காட்டுகின்றார் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

‘தலைவரை வன்னியில் இருந்து ஹெலிகொப்டரில் வெளியில் கொண்டு வர இருந்தனீங்களா? எப்படி? அது என்ன திட்டம்..?’ இப்படி கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டதும் கே.பி விரிவாகப் பேசத் தொடங்கினார்.

‘கிளிநொச்சியை ஆமி பிடிச்சதும் தலைவரின் மகன் சார்ள்ஸ் அன்ரனி என்னோடு தொடர்பு கொண்டு தலைவரையும், குடும்பத்தையும் வெளியில் எடுக்கிறதுக்கு உதவி செய்யச் சொல்லிக் கேட்டவர். நானும் ஓம் என்று சொல்லி ஒரு பிளான் (திட்டம்) போட்டனான். கப்பல் ஒன்றை சார்ட்டர் (charter) பண்ணி (வாடகைக்கு எடுத்து), சிறீலங்கன் நேவியின் கண்ணில் படாத துறைமுகம் ஒன்றில் அதை நிற்பாட்டி வைத்து விட்டு, அதில் இருந்து ஹெலிக்கொப்டரில் வெளிக்கிட்டுப் போய் தலைவரையும், அவரது குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு கப்பலுக்கு கொண்டு வாறதுதான் திட்டம்.’

வன்னி கிழக்கின் கடற்பரப்பை கடும் முற்றுகைக்குள் சிங்களக் கடற்படையினர் வைத்திருந்தாலும், யுத்தத்தின் இறுதி நாட்கள் வரை அதனை உடைத்துக் கொண்டு வெளியேறும் வல்லமை கடற்புலிகளுக்கு இருந்தது. இதற்கு உதாரணமாக 04.05.2009 அன்று முள்ளிவாய்க்காலை அண்டிய கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் கடற்கலம் ஒன்று கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடலாம். தவிர சிங்களக் கடற்படையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு முள்ளிவாய்க்காலை விட்டு கடல்வழியில் தமிழ்நாட்டிற்கு பொதுமக்கள் தப்பிச் சென்ற சம்பவங்களும் யுத்தத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்தன.

இவ்வாறு வன்னியை விட்டுக் கடல்வழியில் தப்பிச் செல்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இருந்த பொழுது, வன்னியை விட்டுத் தமிழீழத் தேசியத் தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் வெளியேற்றுவதற்கு மலேசியாவில் இருந்த தன்னிடம் சார்ள்ஸ் அன்ரனி உதவி கோரினார் என்று கே.பி கூறியது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. அதுவும் சிங்கள வான்படையின் ராடர் திரைகளிலும், களத்தில் நின்ற சிங்களத் தரைப்படையின் கண்களிலும் தெளிவாகத் தென்படக் கூடியதும், பலத்த இரைச்சல் சத்தத்தை எழுப்பி அவர்களது கவனத்தை ஈர்க்கக் கூடியதுமான உலங்குவானூர்தி மூலம் வன்னி சென்று தலைவரையும், அவரது குடும்பத்தையும் தான் மீட்டு வர இருந்ததாக கே.பி கூறியது அவரது பிடியில் இருந்தவருக்கு எள்ளிநகையாடும் விடயமாகவே இருந்தது.

இப்பொழுது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டார்: ‘உங்களுக்கு ஹெலி ஓட்டத் தெரியுமா? உங்களிடம் பைலட் லைசன்ஸ் இருக்கா..?’

உடனே சத்தமாக சிரித்து விட்டு கே.பி கூறினார்: ‘இல்லை, இல்லை. நான் பிளைட் (வானூர்தி) ஓட மாட்டேன். ஹெகொப்டர் ஓடுவதற்கு எங்கடை வான்புலிப் பைலட்மாரிடம் (வானோடிகளிடம்) நான் உதவி கேட்டிருந்தேன்.’

**************************************************

‘எகிப்துக்குப் போய் அங்கு வணங்கா மண் கப்பலில் ஏறச் சொல்லி நெடியவன் சொன்னவர். அங்கை என்ன மாதிரி ஒழுங்குகள் இருக்குது?’

இப்படித் தனது எதிரில் அமர்ந்திருந்த எக்ஸ் (X) என்று கடந்த பத்தியில் நாம் விளித்திருந்த தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் கேட்டதும் எந்தச் சலனமும் இன்றி கே.பி. ரெஜி பேசத் தொடங்கினார். அவரது கண்கள் தனது எதிரில் அமர்ந்திருந்தவரை நேருக்கு நேர் பார்க்கவில்லை. திருட்டுத்தனம் செய்பவர்கள் மற்றவர்களின் கண்களைப் பார்க்க விரும்பாது நிலத்தைப் பார்த்துக் கொண்டு பேசுவது போல் ரெஜியும் பேசத் தொடங்கினார்:

‘நீங்கள் எகிப்துக்கு போக வேண்டாம். அங்கே சரியான விசா (visa) கெடுபிடிகள் இருக்குது. நீங்கள் ஓமானுக்குப் போங்கோ. அங்கே பிரச்சினையில்லை...’

‘ஓமானுக்கா..?’

‘ஓம், ஓமானுக்குத் தான் அங்கே விசா பிரச்சினையில்லை...’

இப்படிக் கூறும் பொழுது கூட ரெஜி தனது தலையை நிமிர்த்திப் பார்க்கவில்லை. ஏதோ புது மணப்பெண் மணமகனை முதற் தடவை கண்டதும் வெட்கித் தலைகுனிந்து காலால் நிலைத்தில் கீறுவது போல், தனது காலால் நிலத்தை தேய்த்தபடியே ரெஜி பேசிக் கொண்டிருந்தார்.

‘ஆனால் எகிப்து எம்பசியின் வெப்சைட்டில் (embassy website) (தூதரக இணையத்தளத்தில்) நான் பார்த்தனான். அப்படி ஒன்றும் இருக்கவில்லை. பிரிட்டிஸ் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) இருக்கிற ஆட்கள் விசா இல்லாமலே எகிப்துக்குப் போகலாம் என்று இருந்தது. இப்படி எக்ஸ் என்று நாம் விளித்த ஊடகவியலாளர் தெரிவித்ததும், குனிந்த தலையை நிமிர்த்தாமலே மீண்டும் ரெஜி கூறினார்:

‘இல்லை. வெப்சைட்டில் அப்படித்தான் இருக்கும். ஆனால் நீங்கள் எகிப்துக்கு போய் இறங்கினதும் உள்ளுக்குள் நுழைய விடமாட்டாங்கள். ஓமான் போனால் அந்தப் பிரச்சினை இல்லை. நீங்கள் ரிக்கற்றை (பயணச் சிட்டையை) நாளைக்கு ஓமானுக்கு மாத்துங்கோ. அது தான் நல்லது.’

ரெஜியின் எதிரில் இருந்த ஊடகவியலாளருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த நாட்களில் ஐபோன் (iphone), கலக்ஸி (Galaxy) போன்ற இணையத்தள இணைப்புக்களைக் கொண்ட தொலைபேசிகள் யானை விலை, குதிரை விலையில் இருந்த நிலையில், ரெஜி கூறியதை இருந்த இடத்தில் இருந்தே உறுதிப்படுத்திக் கொள்ளும் நிலையில் அவர் இருக்கவில்லை.

மீண்டும் ரெஜி பேசினார்: ‘அதை விட எகிப்து வழியாக வணங்கா மண் கப்பலில் போறதும் பாதுகாப்பு இல்லை. கப்பல் சுயஸ் (Suez) கால்வாய்க்குப் போய், செங்கடல் வழியாக சோமாலியாவைத் தாண்டித் தான் போகும். சில வேளை கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் மடக்கிப் பிடிக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்குது. வன்னிக்குப் போறது என்று நினைச்சு கடைசியில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பணயக் கைதியாக நீங்கள் மாட்டுகிற நிலையும் வரலாம். ஆனால் ஓமான் சோமாலியாவுக்கு அங்காலை இருக்கு என்ற படியால் கப்பல் சோமாலியன் பைறேற்சிடம் (pirates) (கடற்கொள்ளையர்களிடம்) மாட்டினாலும், உங்களுக்கு ஆபத்து இல்லை...’

ஒருபுறம் வெள்ளாடு நனைகின்றது என்று ஓநாய் வீறி  வீறி அழுத கதையாகவே ரெஜியின் பேச்சு இருந்தாலும், இன்னொரு புறத்தில் எகிப்துக்கு செல்லாமல் ஓமான் செல்லுமாறு எக்ஸ் என்ற தமிழ்த் தேசிய ஊடகவியலாளரிடம் கே.பி.ரெஜி கூறியதன் நோக்கம் அவரை எப்படியாவது வணங்கா மண் கப்பலில் ஏற விடாது செங்கடலைக் கப்பல் கடக்கும் வரை அவரது பயணத்தை இழுத்தடிப்பது தான். ஏனென்றால் பிரான்சில் இருந்து புறப்பட்ட கப்டன் அலி (வணங்கா மண்) என்ற கப்பல் எகிப்தில் மட்டுமே ஓரிரு நாட்கள் எரிபொருள் நிரப்புவதற்காகத் தரித்து நிற்பதாக ஏற்பாடாகியிருந்தது. அதன் பின்னர் எகிப்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு கப்பல் செல்வதுதான் ஏற்பாடு.

ஓமானிலோ, வேறு எந்த நாட்டிலோ கப்பல் தரித்து நிற்பதாக எந்த ஏற்பாடும் இருக்கவில்லை. அதனை அப்பொழுது எக்ஸ் என்று நாம் விளித்த ஊடகவியலாளர் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதனை ரெஜி நன்கு அறிந்திருந்தார். ஆனால் எக்ஸ் என்ற ஊடகவியலாளரை மட்டும் ரெஜி திசைதிருப்புவதற்கு முற்படவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் வணங்கா மண் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்த மருத்துவர் அருட்குமாரிடமும் இதே மாதிரியான கதையைக் கூறி அவரையும் ஓமான் செல்லுமாறு ரெஜி அறிவுறுத்தினார்.

**************************************************

உலங்குவானூர்தியில் தமிழீழ தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் ஏற்றிக் கொண்டு சிங்களக் கடற்படை நெருங்க முடியாத துறைமுகம் ஒன்றில் தரித்து நிற்கும் கப்பலுக்கு சென்று, அக்கப்பல் மூலம் பாதுகாப்பாகத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதற்கு தான் திட்டமிட்டிருந்ததாக கே.பி கூறியது ஒரு அப்பட்டமான அம்புலிமாமா கதை என்பது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு நன்கு புரிந்திருந்தது.

தவிர, முள்ளிவாய்க்கால் மீதான சிங்களப் படைகளின் முற்றுகையை வான்வழியில் உலங்குவானூர்தி மூலம் உடைப்பதை விட, கடல்வழியில் உடைத்துக் கொண்டு வெளியேறுவதே அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை, குறைந்த பட்சம் 11.05.2009 வரையாவது, நடைமுறைச் சாத்தியமான ஒன்றாக இருந்தது. அதற்கான வாய்ப்புக்கள் இருந்ததாலேயே இலண்டனில் இருந்த எக்ஸ் என்று நாம் விளிக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளரையும், நோர்வேயில் இருந்த வை (Y) என்று நாம் விளிக்கும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரையும் உடனடியாக எகிப்து சென்று, வணங்கா மண் கப்பலில் ஏறி முள்ளிவாய்க்கால் வருமாறு 11.05.2009 அன்று வன்னியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்துமா சமுத்திரம் என்பது நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான கப்பல்கள் பயணிக்கும் ஒரு பெருங்கடல். இவ்வாறான ஆயிரக்கணக்கான கப்பல்கள் பயணிக்கும் பெருங்கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பலை அடையாளம் காண்பதென்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. அதுவும் வன்னியுடன் நேரடி செய்கோள் தொலைபேசித் தொடர்புகள் எவற்றையும் பேணாது, எந்தவொரு துறைமுகத்திலோ அல்லது நடுக்கடலிலோ ஆயுதங்கள் எவற்றையும் ஏற்றிக் கொள்ளாது, சாதாரண சரக்குப் பொருட்களுடன் இந்து சமுத்திரம் ஊடாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று பயணிக்குமாக இருந்தால், அதனை சிங்களக் கடற்படையால் மட்டுமன்றி பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளால் கூட அடையாளம் காண முடியாது. ஒரு கதைக்கு சிங்களக் கடற்படையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அனைத்துலக கடற்பரப்பில் வைத்து இக்கப்பல் ஏற்றிக் கொண்டாலும் கூட, அதில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை தப்பிச் சென்றது என்பதைக் கூட சிங்களக் கடற்படையாலோ, அன்றி பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளாலோ அடையாளம் காண முடியாது.

இதேபாணியில் தான் 1999ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிங்களக் கடற்படையின் முற்றுகையை உடைத்துக் கொண்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை வன்னியில் இருந்து கப்பல் மூலம் கிழக்காசிய நாடொன்றுக்கு கடற்புலிகள் அழைத்துச் சென்றார்கள்.

இவ்விடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். வன்னியுடன் நேரடி செய்கோள் தொலைபேசித் தொடர்புகளைக் கொண்டிருக்காத ஒரு கப்பலுடன் எப்படித் தப்பிச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியால் தொடர்பை ஏற்படுத்த முடியும்? இதற்கு திறீ வே கால் (three-way call) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொலைபேசி அழைப்பு முறைக்கு நிகரான திரிகோண தொலைபேசித் தொடர்பாடல் முறையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்தார்கள். குறிப்பாக தென்னிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய புலனாய்வுத்துறையினரும், படையப் புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவ்வாறான திரிகோண தொலைபேசித் தொடர்பாடல் முறை கையாளப்பட்டு வந்தது. 

இங்கு நாம் இவ்வாறு குறிப்பிடுவதன் நோக்கம் இப்படித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறியது என்று கூறுவதற்காக அல்ல. மாறாக, இப்படியும் வாய்ப்புக்கள் இருந்தன என்பதைக் குறிப்பிடுவதற்காகத் தான்.

சரி, இப்பொழுது கே.பியின் அம்புலிமாமா திட்டத்திற்கு வருவோம்.

ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்தி, அதில் உலங்குவானூர்தி ஒன்றை ஏற்றிக் கொண்டு இந்துமா சமுத்திரத்தில் உள்ள துறைமுகம் ஒன்றிற்கு அதனைக் கே.பி கொண்டு செல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் உள்ள துறைமுகம் ஒன்றிலோ அன்றி இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் உள்ள துறைமுகங்களிலோ, அல்லது இந்திய கடற்படையின் கண்காணிப்பிற்கு உட்பட வங்கதேசம் (பங்களாதேஸ்), மாலைதீவு ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் இந்தக் கப்பலை நிறுத்த முடியாது. மியன்மார் (பர்மா), இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் தான் அதனை நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அவுஸ்திரேலியாவின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்கோஸ் (Cocos Islands) தீவுகளுக்குத் தான் தனது கப்பலை கே.பி கொண்டு செல்ல வேண்டும்.

இதில் சிக்கல் என்னவென்றால், கொக்கோஸ் தீவுகளுக்கு அருகில் வைத்துத் தான் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கடற்புலிகளின் மூன்று ஆயுதக் கப்பல்களை 2007ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் தாக்கியழித்தனர். எனவே அங்கு தனது கப்பலை கே.பி கொண்டு செல்வது என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை.

தவிர உலங்குவானூர்தி ஒன்றை ஏற்றிக் கொண்டு வரும் கப்பலுடன் மியன்மார், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் துறைமுகங்களுக்கு கே.பி செல்வது சாத்தியமில்லை. அப்படிச் சென்றால், அக்கப்பல் அந்நாடுகளின் கடற்படையினரால் உடனடியாகவே மடக்கிப் பிடிக்கப்படும். இதை விட இன்னுமொரு சிக்கலும் இருந்தது.

கே.பி கூறிய ஒன்றரை மில்லியன் டொலர்கள் பணத்தில் கொள்வனவு செய்யப்படக்கூடிய எந்தவொரு உலங்குவானூர்தியும் முந்நூறு மைல்களுக்கு மேல் பயணிக்கக் கூடியவை அல்ல. சரி, ஒரு கதைக்கு பன்னிரண்டு மில்லியன் டொலர்கள் கொடுத்து சிங்கள - இந்திய வான்படையினர் பயன்படுத்தும் ருசிய தயாரிப்பான எம்.ஐ-24 ரக உலங்குவானூர்தி ஒன்றையோ, அன்றி பதினைந்து மில்லியன் டொலர்கள் கொடுத்து எம்.ஐ-17 ரக உலங்குவானூர்தி ஒன்றையோ கே.பி கொள்வனவு செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவை கூட இருவழிப் பயணமாக சில நூறு மைல்களுக்கு மேல் பயணிக்கக் கூடியவை அல்ல.

முள்ளிவாய்க்காலில் இருந்து கே.பி தனது கப்பலை நிறுத்தத் திட்டமிட்டிருந்த நாடுகளின் துறைமுகங்களுக்கு அமெரிக்க மரைன்ஸ் (Marines) (ஈருடகப் படையினர்) பயன்படுத்தும் அப்பாச்சி (Apache) ரக உலங்குவானூர்திகளால் கூட பயணிக்க முடியாது. ஏனென்றால் அவற்றால் ஏறத்தாள ஆயிரம் மைல்கள் தான், அதுவும் ஒருவழிப் பயணமாக, பயணிக்க முடியும். கே.பி கூறிய அளவு தூரத்திற்கு அமெரிக்க வான்படையினரின் பிளக் ஹோக் (Black Hawk) (கரும் கழுகு) ரக உலங்குவானூர்திகளால் மட்டுமே பயணிக்க முடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பிற்குப் பொறுப்பாக இருந்த பொழுது சாதாரண மைக்ரோ லைட் கிளைடர்களை (micro light gliders) (இலகு ரக வானுலாவூர்திகளை) கூட கொள்வனவு செய்து வன்னிக்கு அனுப்பி வைக்க முடியாத கையாலாகாத நிலையில் இருந்த கே.பியால், வான்புலிகளுக்கு உலங்குவானூர்தி ஒன்றை அனுப்புவதாகக் கூறி பனைமர உயரத்திற்கு மேல் பறக்க முடியாத ரொபின்சன் (Robinson) ரக உலங்குவானூர்தி ஒன்றை மட்டும் ஜெயசிக்குறுய் சமர்க் காலத்தில் வன்னிக்கு அனுப்பிய கே.பியால், பிளக் ஹோக் ரக உலங்குவானூர்தியையா கொள்வனவு செய்ய முடியும்? அதுவும் வெறும் ஒன்றரை மில்லியன் டொலர் பணத்தில்!

**************************************************

கே.பி.ரெஜியிடம் விடைபெற்றுக் குழப்பத்துடன் வீடு திரும்பிய எக்ஸ் என்ற தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் செய்த முதல் வேலை எகிப்திற்கு மறுநாள் தான் மேற்கொள்ள இருந்த பயணத்திற்கான சிட்டையை இரத்துச் செய்ததுதான். அடுத்ததாக ஓமான் செல்வதற்கான பயணச் சிட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு தயாராகியவர், திடீரென மூளையில் பொறி தட்ட, ஓமான் தூதரக இணையத்தளத்திற்கு சென்று ஓமான் அரசின் விசா நடைமுறைகள் பற்றி ஆராய்ந்தார். அப்பொழுது அவர் அதிர்ந்தே போனார்.

ஓமான் செல்வதாயின் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் விசாவிற்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு பதில் வழங்கப்படுவதற்கு இரண்டு தொடக்கம் மூன்று வாரங்களாவது எடுக்கும் என்று ஓமான் தூதரக இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஓமான் செல்வதற்கு விசா தேவையில்லை என்று சில மணிநேரத்திற்கு முன்னர் தன்னிடம் ரெஜி கூறியதற்கும், ஓமான் தூதரக இணையத்தளத்தில் விசா நடைமுறை பற்றி கூறப்பட்டதற்கும் இடையில் இருந்த வேறுபாடு அவரை அதிர வைத்தது. 

இது இவ்விதமிருக்க நோர்வேயில் இருந்து புறப்பட்ட வர் என்று நாம் விளித்த வை என்ற தமிழ்த் தேசிய செயற்பட்டாளர் 11.05.2009 அன்று நள்ளிரவுக்கு முன்னரே எகிப்து தலைநகர் கைரோவை (Cairo) சென்றடைந்தார். ஆனால் எக்ஸ் என்ற ஊடகவியலாளரிடம் ரெஜி கூறியது போல் எகிப்தில் எந்த விசா கெடுபிடிகளும் இருக்கவில்லை. எவ்வித சிரமமும் இன்றி கைரோ விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய வை என்ற செயற்பாட்டாளர், அருகில் உள்ள சபீர் ஹொட்டேல் (Safir Hotel) என்ற விடுதியில் தானும், மறுநாள் தன்னுடன் இணைவதாக ஏற்பாடாகியிருந்த தமிழ்த் தேசிய ஊடகவியலாளரும் தங்குவதற்கு அறை ஒன்றை பதிவு செய்து அன்றைய இரவைக் கழித்தார்.

**************************************************

கே.பி கூறிய அம்புலிமாமா கதை அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. அக்கணமே வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும் போல் அவருக்கு இருந்தது. ஆனாலும் வாய் வரை வந்த சிரிப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டு கே.பியிடம் அவர் கேட்டார்:

‘வான்புலிகளின் பைலட்மார் (வானோடிகள்) வெளிநாட்டில் இருக்கீனமோ? யாரோடு நீங்கள் கதைச்சனீங்கள்? அவையள் என்ன சொன்னவையள்?’

அதற்கு கே.பி கூறினார்: ‘அந்த நேரம் மிடில் ஈஸ்ட் (Middle East) (மத்திய கிழக்கு ஆசியப் பிராந்தியம்) பக்கமாக வான்புலிகளின் பொறுப்பாளர் ஒருவர் நின்றவர். முந்தி நான் ஆயுத விநியோகத்திற்குப் பொறுப்பாக இருக்கேக்குள் அவர் எனக்குக் கீழை வேலை செய்தவர். அவரிட்டை தான் நான் தொடர்பு கொண்டு இந்தத் திட்டத்தைப் பற்றிக் கதைச்சனான்.’

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு