ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 18

செவ்வாய் செப்டம்பர் 25, 2018

எகிப்தில் காத்திருந்த அதிர்ச்சி
- கலாநிதி சேரமான்

‘ரெஜி, நான் ஈஜிப்ற் (எகிப்து) வந்திட்டன். இஞ்சை என்னை உங்கடை ஆட்கள் வந்து சந்திப்பீனம் என்று சொன்னீங்கள். ஆனால் ஒருத்தரையும் காணவில்லை. என்ன மாதிரி? ஆர் என்னை வந்து சந்திப்பீனம்?’

கைரோ விமான நிலையத்தின் குடிவரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவைக்  கடந்தது விமான நிலைய வரவேற்பறைக்குள் தான் நுழைந்ததும், தன்னைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.ரெஜியின் ஆட்கள் வந்து சந்திப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இலண்டனில் இருந்து புறப்பட்ட மருத்துவர் அருட்குமார் அவர்களுக்கு, அங்கு அவ்வாறு எவருமே வருகை தராதது அதிர்ச்சியாகவே இருந்தது.

ஆனால் மருத்துவர் அருட்குமாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விட, அங்கிருந்து அவர் எடுத்த தொலைபேசி அழைப்பால் அதிகம் அதிர்ச்சி அடைந்தவராக ரெஜி அவர்களின் தொனி இருந்தது. ரெஜி கேட்டார்:

‘நீங்கள் ஈஜிப்ருக்கு போய் விட்டீங்களா? உண்மையாகவே நீங்கள் கைரோவிலையா நிற்கிறீங்கள்? உண்மையாகவா? உண்மையாகவா?’

இவ்வாறு அதிர்ச்சியுடன் திரும்பத் திரும்ப ரெஜி கேட்டது மருத்துவர் அருட்குமார் அவர்களை சில நொடிகள் நிதானிக்க வைத்தது. ஆனால் மருத்துவர் அருட்குமாரின் அருகில் நின்றவாறு இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட எக்ஸ் (X) என்று நாம் விளித்த தமிழ்த் தேசிய ஊடகவியலாளருக்கு ரெஜியின் பேச்சு நகைப்புக்கிடமாகவே இருந்தது.

இப்பொழுது மருத்துவர் அருட்குமார் கூறினார்: ‘ஓம் ரெஜி, நான் கைரோ எயார் போர்ட்டில் (விமான நிலையத்தில்) நிற்கிறேன். நீங்கள் சொன்னியள் உங்கடை ஆட்கள் என்னை வந்து சந்திப்பீனம் என்று. ஆனால் இஞ்சை ஒருத்தரையுமே காணவில்லை. ஒரு தமிழரையுமே காண முடியவில்லை.’

மருத்துவர் அருட்குமாரின் பேச்சில் நிதானம் இருந்தது. ஆனால் அந்த நிதானத்திலும் அதிர்ச்சியும், அதிருப்தியும் தெறித்த வண்ணம் இருந்தன.

இலண்டனில் இருந்து எகிப்திற்கு 13.05.2009 அன்று இரவு புறப்படுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த எக்ஸ் என்ற தமிழ்த் தேசிய ஊடகவியலாளரை, அங்கு செல்ல விடாது தடுத்து, அவரை ஓமான் செல்லுமாறு 12.05.2009 அன்று இரவு ரெஜி அறிவுறுத்தியிருந்தார் என்று கடந்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம். இதனால் தனது எகிப்துப் பயணத்தை எக்ஸ் என்ற ஊடகவியலாளர் இரத்துச் செய்திருந்தார் என்றும், இதே போன்ற அறிவுறுத்தலை மருத்துவர் அருட்குமார் அவர்களுக்கும் ரெஜி விடுத்திருந்தார் என்றும் அத் தொடரில் தெரிவித்திருந்தோம்.

சரி, அப்படியென்றால் அவர்கள் இருவரும் ஏன் கைரோவிற்குச் சென்றார்கள் என்று வாசகர்களுக்கு ஐயம் ஏற்படலாம். நடந்தது இதுதான்.

எகிப்திற்கு செல்லாமல், ஓமான் செல்லுமாறு 12.05.2009 அன்று இரவு ரெஜி வழங்கிய அறிவுறுத்தலால் குழம்பிப் போயிருந்த எக்ஸ் என்ற தமிழ்த் தேசிய ஊடகவியலாளர், மறுநாள் காலை 9:00 மணியாகியதும் செய்த முதல் வேலை இலண்டனில் உள்ள ஓமான் தூதரகத்திற்கு தொடர்பெடுத்ததுதான். ஆனால் ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் தொலைபேசியில் திரும்பத் திரும்ப அழைப்புகளை ஏற்படுத்திய பின்னர் தான் அவரது தொலைபேசி அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மறுமுனையில் உரையாடிய ஓமான் தூதரக அதிகாரி, தமது தூதரகத்தில் விசா (நுழைவனுமதி) எடுக்காமல் இலண்டனில் இருந்து ஓமான் செல்வது சாத்தியமில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும் ஒருவரது விசா விண்ணப்பத்தைத் தாம் பரிசீலனை செய்து விசா வழங்குவதற்குக் குறைந்தது மூன்று வாரங்களாவது தேவைப்படும் என்றும் கூறினார். அதாவது ஓமான் தூதரக இணையத்தளத்தில் காணப்பட்டதை அப்படியே ஒப்புவிப்பது போல் அந்த அதிகாரியின் பேச்சு இருந்தது.

இதனால் இன்னும் குழப்பிப் போய் செய்வதறியாது எக்ஸ் என்ற ஊடகவியலாளர் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது அவரது கைத்தொலைபேசி அலறியது. மறுமுனையில் 07943 854 555 என்ற எண்: அதுவும் பரீட்சயமில்லாத எண். யாராக இருக்கும் என்று எண்ணியவாறே தொலைபேசி அழைப்பை ஏற்ற பொழுது மறுமுனையில் தன்னை மருத்துவர் அருட்குமார் என்று அறிமுகம் செய்து ஒருவர் உரையாடினார்.

‘ஹலோ... நான் டொக்டர் அருட்குமார் கதைக்கிறன். ரெஜி உங்களோடை கதைக்கச் சொன்னவர். உங்களோடை கதைச்சு உங்களையும் கூட்டிக் கொண்டு ஓமான் எம்பசிக்கு (தூதரகத்திற்கு) போகச் சொன்னவர்.’  

இவ்வாறு மருத்துவர் அருட்குமார் கூறியதும் எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கேட்டார்: ‘எம்பசிக்கு போகச் சொன்னவரா? ஓமான் எம்பசி 12:00 மணிக்கு மூடி விடும். இன்னும் ஒன்றரை மணித்தியாலத்தில் நாங்கள் எம்பசிக்குப் போக முடியாது. மூடிய எம்பசிக்குப் போய் ஒன்றுமே செய்ய முடியாது.’

அவரது பேச்சில் நியாயம் இருந்ததை மருத்துவர் அருட்குமார் புரிந்து கொண்டார். ‘நான் ரெஜியிட்டை கதைச்சிட்டு உங்களுக்கு எடுக்கிறன்.’ இவ்வாறு கூறி விட்டு தொலைபேசி அழைப்பை அவர் துண்டித்தார்.

மருத்துவர் அருட்குமாரின் தொலைபேசி அழைப்பைத் துண்டித்த மறுகணமே மீண்டும் அவரது தொலைபேசி அலறியது. மறுமுனையில் நோர்வேயில் இருந்து நெடியவன் பேசினார்: ‘என்ன மாதிரி உங்களின் பயண ஒழுங்குகள்? இஞ்சையிருந்து (நோர்வேயில் இருந்து) வெளிக்கிட்டவர் நேற்று இராத்திரியே கைரோ போய்ச் சேர்ந்திட்டார். ஆள் உங்களுக்கும் சேர்த்துத் தான் ரூம் (அறை) ஒழுங்கு பண்ணியிருக்கிறார். இண்டைக்கு இரவு நீங்கள் அங்கே போய் சேர்ந்திடுவீங்கள் தானே?’

‘இல்லை, ரெஜி சொன்னவர் எகிப்தில் விசா கெடுபிடி இருக்குதென்று. ரிக்கற்றை (பயணச் சிட்டையை) கான்சல் (இரத்துச் செய்து விட்டு) பண்ணிப் போட்டு ஓமானுக்குப் போகச் சொன்னவர். ஆனால் ஓமானுக்குப் போறதுக்கு விசா எடுக்க வேணும் என்கிறாங்கள். அதுக்கும் மூன்று கிழமை எடுக்கும். எனக்கென்றால் ஒரே குழப்பமாக இருக்குது.’

இதை மறுமுனையில் உரையாடிய நெடியவன் எதிர்பார்க்கவில்லை. அவர் கூறினார்: ‘நீங்கள் ஏன் ரெஜியின் கதையைக் கேட்டனீங்கள்? நான் வணங்கா மண் திட்டம் பற்றி அறிஞ்சு கொள்ளத் தான் அவரோடை கதைக்கச் சொல்லி உங்களை அனுப்பினான். உங்களை வன்னியில் இருக்கிறவையள் தான் வரச் சொல்லிக் கேட்டவையள். ரெஜிக்கும் நீங்கள் வன்னிக்குப் போறதுக்கும் சம்பந்தமில்லை ரெஜி ஏதோ குழப்பம் செய்கிறார். கப்பல் ஓமானுக்குப் போகாது. அது எகிப்துக்குத் தான் போகும். எதுக்கும் நீங்கள் இனி ரெஜியோடை கதைக்காதையுங்கோ. நீங்கள் வருவீங்கள் என்று வன்னியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கீனம்.’

இதை எக்ஸ் என்ற ஊடகவியலாளர் எதிர்பார்க்கவில்லை. அப்பொழுது அவர் நெடியவனிடம் கேட்டார்: ‘டொக்டர் அருட்குமார் என்று ஒருத்தர் எனக்கு இப்ப ரெலிபோன் (தொலைபேசி) அடிச்சவர். தன்னை ஓமான் போய் வணங்கா மண் கப்பலில் ஏறச் சொல்லி ரெஜி சொன்னவராம். இப்ப ரெஜியோடை கதைச்சுப் போட்டு அவர் எனக்கு எடுப்பதாக சொன்னவர்.’

இவ்வாறு எக்ஸ் என்ற ஊடகவியலாளர் தெரிவித்ததும் நெடியவன் கூறினார்: ‘இனி ரெஜி மட்டுமில்லை. டொக்டர் அருட்குமார் ரெலிபோன் எடுத்தாலும் நீங்கள் ஆன்சர் (பதிலளிக்க) பண்ண வேண்டாம். நீங்கள் நாளைக்கு வியாழக்கிழமை இரவு கைரோவில் இறங்கிற மாதிரி ரிக்கற்றை (பயணச் சிட்டையை) போட்டுக் கொண்டு வெளிக்கிடுங்கோ. எப்படியும் நாளையண்டைக்கு (வெள்ளிக்கிழமை) கப்பல் எகிப்துக்கு போய் விடும்;.’

அவ்வளவு தான். அந்தக் கணம் முதல் மருத்துவர் அருட்குமார் அவர்களிடமிருந்து வந்த எந்தத் தொலைபேசி அழைப்புக்களையும் எக்ஸ் என்ற ஊடகவியலாளர் எடுக்கவில்லை. மறுநாள் (14.05.2009 வியாழன்) மாலை இலண்டன் ஹ{த்ரோ விமான நிலையத்திற்கு சென்று குடியகல்வுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைவதற்கு காத்திருந்த எக்ஸ் என்ற ஊடகவியலாளருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஏறத்தாள முப்பது மணிநேரமாக எந்த மருத்துவர் அருட்குமாரின் அழைப்பை அவர் தவிர்த்து வந்தாரோ, அதே சாட்சாத் மருத்துவர் அருட்குமார் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

அதற்குள் அவரது கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ஒரு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் அம்பாறையில் இருந்து தளபதி நகுலன்: ‘என்ன நீங்கள் இரண்டு நாளாக ஐ.பி.சியில் இல்லை போல் இருக்குது? எங்கையும் தூரத்துக்கு வெளிக்கிடுகிறீங்களோ?’      

சிரித்துக் கொண்டே எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கூறினார்: ‘ஓம், நான் வன்னிக்கு வெளிக்கிடுகிறன். வணங்கா மண் கப்பலில் ஏறி வன்னிக்கு வரச் சொல்லியிருக்கீனம். வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருத்தரும் முன்வராததால் நான் வன்னி போகிறேன். இப்ப எயார் போட்டில் நிற்கிறன்.’

‘சரி, நீங்கள் வெளிக்கிடுங்கோ. நீங்கள் அங்கே போனதும் கதைக்கிறேன்.’ இவ்வாறு கூறிவிட்டுத் தொலைபேசி அழைப்பை நகுலன் துண்டித்தார்.

இப்பொழுது எக்ஸ் என்ற ஊடகவியலாளரின் கவனம் மருத்துவர் அருட்குமாரின் பக்கம் திரும்பியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் சிரிப்பை அடக்க முடியாது ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தார்கள். பின்னர் மருத்துவர் அருட்குமார் அவர்களைப் பார்த்து எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கேட்டார்: ‘எங்கை போகப் போகிறியள்? ஓமானுக்கா?’ அவரது கேள்வியில் நகைச்சுவை தொனித்தது.

உடனே மருத்துவர் அருட்குமார் கூறினார்: ‘இல்லை, நான் கைரோவுக்குப் போகிறேன். ரெஜி கடைசியில் அங்கை தான் போகச் சொன்னவர். நீங்கள் எங்கை போகிறியள்? நீங்களும் கைரோவுக்குத் தானே போகிறியள்?’

இருவரும் பேசிக் கொண்டே தமது உறவினர்களுக்கு விடைகொடுத்து விட்டு விமானத்தில் ஏறியதும் மருத்துவர் அருட்குமார் பேசினார்: ‘நான் கப்பலில் போறதுக்கு என்று போன மார்ச் (பங்குனி) மாதமே லீவ் (விடுமுறை) எடுத்திருந்தனான். ஆனால் என்னவோ தெரியவில்லை கப்பல் வெளிக்கிடவில்லை. பிறகு போன கிழமை கப்பல் பிரான்சில் இருந்து வெளிக்கிடேக்குள்ளை எனக்கு ஓவ் (ஓய்வனுமதி) கிடைக்கவில்லை. இந்தக் கிழமை தான் கிடைச்சது.’ இப்படிக் கூறி விட்டு மருத்துவர் அருட்குமார் மேலும் கூறினார்: ‘உந்தக் கப்பல் வன்னிக்குப் போகப் போறதில்லை. சும்மா நடுக்கடலில் நிண்டு போட்டு வர வேண்டியதுதான்.’

இது மருத்துவர் அருட்குமாரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த எக்ஸ் என்ற ஊடகவியலாளருக்கு அதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் எந்த சலனத்தையும் காண்பிக்காது அவர் கூறினார்: ‘என்னை வன்னிக்கு வந்து அங்கத்தையே நிலவரத்தை வெளியில் கொண்டு வரச் சொல்லித் தான் கேட்டிருக்கீனம். வன்னியில் இருந்து அப்படித் தான் சொன்னவையள்.’

இப்பொழுது தனது புருவத்தை உயர்த்தியவாறே மருத்துவர் அருட்குமார் கேட்டார்: ‘வன்னிக்கு கப்பல் போகுமா? அப்படி எனக்கு ரெஜி சொல்லவில்லை. கப்பல் இலங்கைக்குக் கிட்டைப் போய் கொஞ்ச நாள் சர்வதேசக் கடலில் நிற்கும். அவ்வளவு தான். பிறகு கப்பல் திரும்பி வந்துவிடும். அதுதான் பிளான் (திட்டம்) என்று எனக்கு ரெஜி சொன்னவர்.’

இப்பொழுது இறுக்கமான தொனியில் எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கூறினார்: ‘நான் வணங்கா மண் கப்பலில் போறதுக்கும், ரெஜிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நான் போறது வேற ஒரு செற்றப் (ஒழுங்கமைப்பு). என்னை வன்னிக்கு வரச் சொல்லித் தான் அவை சொன்னவையள். ஆனால் திரும்பி இதே கப்பலில் வர முடியாது. சென்னையில் அல்லது சிங்கப்பூரில் எங்களைக் கொண்டு போய் இறக்குவீனம். அங்கையிருந்து பிளைட் (விமானம்) எடுத்து இலண்டன் திரும்புவது தான் திட்டம்.’

அதன் பின் எக்ஸ் என்ற ஊடகவியலாளருக்கும், மருத்துவர் அருட்குமாருக்கும் இடையிலான உரையாடல் வேறு விடயங்களைத் தொட்டது. கைரோ விமான நிலையத்தில் இருவருமே ஒன்றாக இறங்கினார்கள். குடிவரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவை அவர்கள் சென்றடைந்த பொழுது அங்கு ரெஜி கூறியது போல் எந்த விசா கெடுபிடிகளுமே இருக்கவில்லை. அந்த காலப்பகுதியில் எகிப்தில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வந்ததால், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த அனைத்துப் பயணிகளும் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதுவும் மிகவும் கண்ணியமான முறையில் நடந்தது. எந்தத் துன்புறுத்தலும் நிகழவில்லை. ‘யூ ஆர் மோஸ்ட் வெல்கம் இன் ஈஜிப்ற் (You are most welcom in Egypt) (நீங்கள் எகிப்து வருவதை முழுமனதோடு வரவேற்கிறோம்)’ என்று கூறி இருவரையும் எகிப்திய குடிவரவு அதிகாரிகள் வரவேற்றார்கள்.

எக்ஸ் என்ற ஊடகவியலாளரைப் பொறுத்தவரை, நோர்வேயில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கைரோவை சென்றடைந்த வை (Y) என்று நாம் விளித்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் அங்கிருந்த சபீர் ஹொட்டேல் (Safir Hotel) என்ற விடுதியில் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்ததால், வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அவ் விடுதிக்கு செல்வது தான் அவர் செய்ய வேண்டிய அடுத்த காரியமாக இருந்தது. ஆனால் மருத்துவர் அருட்குமார் அவர்களைப் பொறுத்த வரை நிலைமை அப்படி இருக்கவில்லை.

பொறுமை இழந்தவராக மறுமுனையில் காத்திருந்த ரெஜி அவர்களிடம் மருத்துவர் அருட்குமார் கேட்டார்: ‘ரெஜி, இப்ப நான் என்ன செய்யிறது?’

‘பொறுங்கோ, நான் எங்கடை ஆட்களோடை கதைச்சுப் போட்டு உங்களுக்கு எடுக்கிறன்.’ இப்படி மருத்துவர் அருட்குமார் அவர்களிடம் கூறி விட்டுத் தொலைபேசி அழைப்பை ரெஜி அவர்கள் துண்டித்தார்.

..........

 

‘உங்கடை திட்டம் தலைவருக்குத் தெரியுமா? ஹெலிக்கொப்டரில் (உலங்குவானூர்தியில்) முள்ளிவாய்க்காலுக்குப் போய் தலைவரை மீட்டுக் கொண்டு வாறது பற்றின உங்கடை திட்டத்திற்கு தலைவர் சம்மதம் சொன்னவரா?’ இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டார்.

அப்பொழுது கே.பி கூறினார்: ‘தலைவரோடு இதைப்பற்றி நான் கதைக்கவில்லை. சார்ள்ஸ் அன்ரனியோடை தான் கதைச்சனான். பெரும்பாலும் இந்தத் திட்டத்திற்கு அப்பா இணங்கா மாட்டார் என்று தான் சார்ள்ஸ் சொன்னவர். அப்படி என்றால் தலைவரையும், தளபதிகளையும் மணலாறு காட்டுக்குள் இறக்கிப் போட்டு, தலைவரின் குடும்பத்தை மட்டும் ஹெலிக்கொப்டரில் கப்பலுக்கு கொண்டு வாறதாக நான் பி பிளான் (B Plan) (மாற்றுத் திட்டம்) போட்டனான். எல்லாத்தையும் நெடியவனும், கஸ்ரோவும் சேர்ந்து திட்டம் போட்டுக் காசைத் தராமல் குழப்பிப் போட்டாங்கள்.’

கே.பியின் அருகில் இருந்த தயாமோகன் உடனே கூறினார்: ‘ஓம், தலைவர் மணலாறுக்கு வந்தால், அவரைக் கூட்டிக் கொண்டு பத்திரமாக கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு போறதுக்கு ராம் அண்ணையும், நகுலனும் ரெடியாக (தயாராக) நின்றவையள். இது பற்றி திருகோணமலையில் நின்ற எங்கடை போராளிகளோடையும் ராம் அண்ணை கதைச்சிருந்தவர்.’

தயாமோகனின் பேச்சு, கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. ஏனென்றால், முதல் நாள் தான் அவருடன் உரையாடிய நகுலன், தம்மால் இனி தென்தமிழீழத்தில் தங்கியிருப்பது பாதுகாப்பில்லை என்றும், தாங்கள் யாழ்ப்பாணம் செல்லப் போவதாகவும் கூறியிருந்தார். அப்படியிருக்க, மணலாறு காட்டுக்குள் தமிழீழ தேசியத் தலைவரை உலங்குவானூர்தியில் கே.பி கொண்டு சென்று இறக்கியதும், அவரை அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கு ராம் அழைத்துச் செல்ல இருந்தார் என்று தயாமோகன் கூறியது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு சிரிப்பதா? அழுவதா? என்ற நிலையை ஏற்படுத்தியது.

ஒருவாறு தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவாறே கே.பியிடம் அவர் கேட்டார்: ‘உங்கடை திட்டத்துக்கு ஒரு ஹெலிக்கொப்டர் போதாதே? குறைஞ்சது இரண்டு மூன்று ஹெலியாவது தேவை. அதுக்குத் தேவையான அளவு வான்புலிப் பைலட்மார் (வானோடிகள்) வெளியில் இருந்தவையா?’

இந்தக் கேள்வி கே.பி அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அப்பொழுது இன்பத்தையும், தயாமோகனையும், சுகியையும் (சுபன்) கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் நோட்டம் விட்டார். அவர்கள் எவரின் முகத்திலும் ஈயாடவில்லை.

இன்பம் மட்டும் நெளிந்தவாறு அமர்ந்திருந்தார்.

ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டே கே.பி கூறினார்: ‘வான்புலிகளை மட்டும் நம்பி இந்த ஒப்ரேசனை (நடவடிக்கையை) நான் பிளான் (திட்டம்) பண்ணவில்லை. உக்ரெய்ன் மேர்சனரி பைலட்மாரையும் (mercenary pilots) (கூலிப்படை வானோடிகள்) இதில் இறக்கிறதுக்கு நான் என்னோடை கொன்ராக்ஸோடை (contacts) (தொடர்பாளர்களுடன்) கதைச்சிருந்தனான்.’

கே.பியின் அம்புலிமாமா கதையின் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டிருந்தது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு நன்கு புரிந்தது.

..........

ரெஜியிடம் இருந்து தனக்கு அழைப்பு வரும், தன்னை அழைத்துச் செல்வதற்கு ரெஜி அனுப்பும் ஆட்கள் வருவார்கள் என்று காத்திருந்த மருத்துவர் அருட்குமார் அவர்களுக்கு நேரம் செல்லச் செல்ல உண்மை புரியத் தொடங்கியது. தன்னை அழைத்துச் செல்வதற்கு ரெஜியின் ஆட்கள் எவருமே வரப்போவதில்லை என்பதும், தான் எகிப்து செல்லப் போவதில்லை என்று நம்பியே ஓமான் செல்லுமாறும், பின்னர் எகிப்து செல்லுமாறும் தன்னை ரெஜி அலைக்கழித்தார் என்பதும் மருத்துவர் அருட்குமாருக்குப் புரியத் தொடங்கியது. ஐந்து நிமிடம். பத்து நிமிடம் என்று ரெஜியின் அழைப்பிற்காகக் காத்திருந்தவர் பொறுமையிழக்கத் தொடங்கினார். அப்பொழுது எக்ஸ் என்ற ஊடகவியலாளர் நெடியவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.

அதற்கு நெடியவன் கூறினார்: ‘எப்படியோ, டொக்டரும் வன்னிக்குத் தான் போகப் போறார். அவர் ரெஜியின் ஒழுங்கில் வந்தாலும், எங்கடை சனத்துக்காகத் தான் ஆள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். அதுவும் ஆள் தன்ரை சொந்தக் காசில் தான் உங்கை வந்திருப்பார். நீங்கள் அவருக்குச் சொல்லுங்கோ, அவரைக் கூட்டிக் கொண்டு போறதுக்கு ரெஜியின் ஆட்கள் ஒருத்தரும் இல்லை என்றால், அவருக்கு விரும்பினால் உங்களோடை வரலாம் என்று. எங்களுக்கு அதில் பிரச்சினையில்லை.’  

தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டு மருத்துவர் அருட்குமாரிடம் எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கூறினார்: ‘நான் வந்த செற்றப்பைச் (ஒழுங்கமைப்பை) சேர்ந்த இன்னொரு ஆள் இஞ்சை கைரோவில் தான் நிற்கிறார். எனக்கும் சேர்த்துத் தான் ஆள் ஹொட்டேல் புக் (ஏற்பாடு) பண்ணியிருக்கிறார். வேண்டும் என்றால் நீங்கள் என்னோடு வரலாம்.’

ஏறத்தாள பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ரெஜியிடமிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், எக்ஸ் என்ற ஊடகவியலாளருடன் சொற்படி நடப்பதே இப்பொழுது மருத்துவர் அருட்குமாருக்கு ஒரேயொரு தெரிவாக இருந்தது. தனது மனதிற்குள் விம்மி வெடித்துக் கொண்டிருந்த கோபத்தை அடக்கியவாறே ரெஜிக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மருத்துவர் அருட்குமார் மீண்டும் நிதானமாக பேசத் தொடங்கினார்: ‘ரெஜி, இஞ்சை எக்ஸ் (உண்மைப் பெயர் மீண்டும் தவிர்க்கப்படுகிறது) வந்து நிற்கிறார். அவர் வேறை செற்றப்பில் (ஒழுங்கமைப்பில்) வந்தவராம். தன்ரை ஆட்கள் ஏற்கனவே இங்கை வந்து நிற்கீனமாம். விருப்பம் என்றால் தன்னோடை நானும் வரலாம் என்று ஆள் சொல்கிறார். என்ன செய்ய?’

உடனே எந்தத் தயக்கமும் இன்றி ரெஜி கூறினார்: ‘அப்பிடியோ! அப்ப நீங்கள் அவரோடை போங்கோ. மிச்ச விசயத்தைப் பிறகு கதைப்பம்.’  

(மடையுடைப்புத் தொடரும்)

 

பிற்குறிப்பு: முன்னைய இரு தொடர்களிலும், வணங்கா மண் கப்பலில் ஏறி வன்னிக்கு வருமாறு 11.05.2009 அன்று மதியம் எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கேட்கப்பட்டிருந்தார் என்றும், அன்று இரவு ரெஜியுடன் அவர் உரையாடினார் என்று குறிப்பிட்டிருந்தோம். இவ்விரு சம்பவங்களும் 12.05.2009 செவ்வாய்க்கிழமை மதியமும், இரவும் நிகழ்ந்தன: 11.05.2009 திங்கட்கிழமை அல்ல. திகதியில் ஏற்பட்ட தவறுதலுக்கு வருந்துகின்றோம்.

நன்றி: ஈழமுரசு (18.09.2018)

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17