ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 19

வியாழன் அக்டோபர் 11, 2018

நீலப்புலி விருதின் அர்த்தபரிமாணம்
- கலாநிதி சேரமான்

உக்ரென்ய் வானோடிகளையும், வெளிநாடுகளில் தங்கியிருந்த வான்புலிகளின் வானோடிகளையும் கொண்ட அணி ஒன்றை உருவாக்கி, உலங்குவானூர்திகள் சகிதம் கப்பல் ஒன்றில் இந்துமா சமுத்திரத்தின் துறைமுகம் ஒன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்று, அங்கிருந்தவாறு தமிழீழ தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் முள்ளிவாய்க்காலில் இருந்து மீட்பதற்கு தான் திட்டமிட்டிருந்ததாக கே.பி கூறும் பொழுதே அவரது பேச்சில் ஒரு விதமான எக்காளம் தொனித்தது.

கே.பி பேசத் தொடங்கினார்: ‘வான்புலிகள் என்றால் எதிரியைக் கிடுகிடுக்க வைக்கும் ஒரு பிரிவு என்று தான் எங்கடை ஆட்களில் கன பேர் நினைச்சுக் கொண்டிருந்தவையள். ஆனால் வான்புலிகளின் பலம் என்ன, பலவீனம் என்ன எண்டது எனக்கு நல்லாத் தெரியும். வெளிநாட்டில் வான்புலிகளுக்கான வேலைகளில் ஈடுபட்ட ஆட்கள் ஒரு காலத்தில் எனக்குக் கீழை வேலை செய்தவையள். அவங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய இயலாது என்பது எனக்கு நல்லாத் தெரியும்.’

இவ்வாறு கே.பி கூறியது அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. வான்புலிகள் கட்டமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்று. நீண்ட காலத் தீர்க்கதரிசனப் பார்வையுடன் தலைவர் பிரபாகரன் அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட அக் கட்டமைப்பின் தோற்றுவாய் என்பது வெறுமனவே 27.11.1998 அன்று முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது வான்புலிகள் மலர் தூவியதோடு தொடங்கிய நிகழ்வு அல்ல. வான்புலிகளை உருவாக்கும் முயற்சி என்பது லெப்.கேணல் அப்பையா, கேணல் சங்கர் போன்றவர்களின் உதவியுடன் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 1980களின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட முயற்சியாகும். இக்கட்டமைப்பிற்கு தேவையான மைக்ரோ லைட் கிளைடர்களை (இலகு ரக வானுலாவூர்திகள்) அனுப்பி வைக்குமாறு கே.பி அவர்களிடம் 1993ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொழுதே தலைவர் அவர்கள் கோரியிருந்தார். இவற்றைக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய நாடுகளின் விபரங்கள் கூட யாழ்ப்பாணத்தில் இருந்து கே.பியிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் இது விடயத்தில் அப்பொழுது கே.பியின் ஆட்கள் இரகசியத்தன்மையை பேணத் தவறியதால், மைக்ரோ லைட் கிளைடர்களைக் (micro light gliders) கொள்வனவு செய்வதற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் முயற்சிகள் கசிந்து அவை சற்று பின்னடைவுக்கு ஆளாகின.

இதனால் அக்காலப் பகுதியில் கே.பியின் வலையமைப்பின் ஊடாக மட்டுமன்றி, மாற்று வழிகள் ஊடாகவும் வான்புலிகளுக்கான இலகு ரக வானுலாவூர்திகளையும், வானூர்திகளையும் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மேற்கொண்டார்.

2003ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்புக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து கே.பி நீக்கப்பட்ட பொழுது, ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர் காலத்தில் தான் அனுப்பிய பனைமர உயரத்திற்குப் பறக்கக்கூடிய ரொபின்சன் ரக உலங்குவானூர்தி ஒன்று மட்டுமே வான்புலிகளிடம் இருந்ததாக அவர் கருதினார். ஆனால் அவருக்குத் தெரியாமலேயே வான்புலிகளுக்கான வானுலாவூர்திகள், வானூர்திகள் போன்றவற்றைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் இறக்குமதி செய்திருந்ததோடு, இவற்றை வேவு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் மாற்றியிருந்தார்.

சிங்களப் படைகளுக்கு எதிரான வான்புலிகளின் முதலாவது நடவடிக்கை 26.03.2007 இடம்பெற்றதாகவே பொதுவாக அறியப்படுகின்ற பொழுதும், அதற்கு முன்னரே சிங்களப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வான்புலிகள் களமிறக்கப்பட்டிருந்தார்கள் என்பது தான் உண்மை.

ஆரம்பத்தில் இவை வான்வழி வேவு நடவடிக்கைகளாகவே அமைந்திருந்தன. உதாரணமாக 1998ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தின் 12ஆம், 13ஆம் மற்றும் 19ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்தின் வான்பரப்பில் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வான்புலிகளின் வானூர்திகள் சிங்கள வான்படையினரால் இனம் காணப்பட்டு, அவை பற்றிய தகவல்கள் அப்பொழுது சிங்கள ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் 19.11.1998 அன்று மயிலிட்டிக்கும், தொண்டைமானாற்றுக்கும் இடைப்பட்ட வான்பரப்பில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட வான்புலிகளின் வானூர்தி ஒன்றை நோக்கி சிங்களக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். எனினும் வானூர்தி எவ்வித சேதமும் இன்றித் தப்பிச் சென்றது.

பின்னர் 27.11.1998 அன்று முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது வான்புலிகளின் வானூர்திகள் மலர் தூவியதை தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக உரிமை கோரியதும், இவ் வானூர்திகள் பிஸ்ரன்கள் மூலம் இயக்கப்படுபவையாக இருக்கக்கூடும் என்று அக்காலப்பகுதியில் ‘த சண்டே ரைம்ஸ்’ (The Sunday Times) என்ற சிங்களப் பத்திரிகை ஊகம் வெளியிட்டிருந்தது.

இது மட்டுமன்றி 26.09.1998 அன்று கிளிநொச்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டெடுத்த ஓயாத அலைகள் - 2 நடவடிக்கைக்கு முன்னோடியாக இடம்பெற்ற வேவு நடவடிக்கைகளில் வான்புலிகளின் வானூர்திகள் பயன்படுத்தப்பட்டதாக ஓராண்டுக்குப் பின்னர் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்குப் பின்னர் 2001ஆம் ஆண்டு சித்திரை மாதம் நிகழ்ந்த தீச்சுவாலை நடவடிக்கைக்கு முன்னரும் யாழ்ப்பாணத்தின் முகமாலை முன்னரண்களை அண்டிய வான்பரப்பில் வான்வழி வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வான்புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் இவற்றை விட வான்புலிகளை மையப்படுத்திய இரண்டு சம்பவங்கள் 2005ஆம், 2006ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றிருந்தன.

முதலாவது சம்பவம் நிகழ்ந்தது 19.10.2005. அன்று வன்னி வான்பரப்பில் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிங்கள வான்படைக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் ஒன்று திடீரென விஞ்ஞானன்குளம் பகுதியை அண்டிய வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. சேர்ச்சர் மார்க்கர் - 2 (Searcher Marker - II) என்ற பெயரைக் கொண்ட இவ் ஆளில்லா வேவு விமானம் இஸ்ரேலிய தயாரிப்பு வானூர்தியாகும். இதன் விலை அப்பொழுது பதின்மூன்று இலட்சம் அமெரிக்கன் டொலர்கள். அதை விட மேலதிகமாக இவ் ஆளில்லா வேவு விமானத்தில் ஆறு இலட்சம் அமெரிக்கன் டொலர்கள் பெறுமதியான அதிநவீன ஒளிப்படக் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

தரையில் இருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்தவாறு வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவ் ஆளில்லா வேவு விமானத்தை சாதாரண விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்த முடியாது. அது போல் வெப்பத்தைத் தேடிச் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியும் இதனை சுட்டு வீழ்த்த முடியாது. ஏனென்றால் மின்கலன்கள் (பற்றரிகள்) மூலம் இயக்கப்படும் இவ் ஆளில்லா வேவு விமானத்தில் இருந்து கிளம்பும் வெப்பம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஈர்க்கும் அளவிற்குப் போதுமானது அல்ல. அதனால் இவ் ஆளில்லா வேவு விமானத்தை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள் சூரியன் ஒளிரும் திசையை நோக்கித் திசை திரும்பிச் சென்று விரயமாகி விடும்.

இப்படிப்பட்ட இஸ்ரேலிய தயாரிப்பு விமானம் தான் 19.10.2005 விஞ்ஞானன்குளம் பகுதியை அண்டிய வான்பரப்பில் வெடித்துச் சிதறியது.     

இவ் ஆளில்லா வேவு விமானத்தை விடத் தரம் குறைந்த இரண்டு ஆளில்லா வேவு விமானங்கள் 1997ஆம் ஆண்டு பூநகரியை அண்டிய வான்பரப்பிலும், 1998ஆம் ஆண்டு ஓமந்தையை அண்டிய வான்பரப்பிலும் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுது வீழ்ந்து நொருங்கியிருந்தன.

ஆனால் 19.10.2005 நிகழ்ந்த சம்பவம் முற்றிலும் வித்தியாசமானது. வீழ்ந்து நொருங்குவதற்குப் பதிலாக இவ் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் இவ்விமானத்தின் இயந்திரம், மின்பிறப்பாக்கி மற்றும் தொலைத்தொடர்புக் கருவி ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் செயலிழந்து போயின. இவை நிகழ்வதற்கு முன்னர் தரையில் இருந்து தாக்குதல்கள் எவையும் நிகழ்ந்தமைக்கான தடயங்கள் ஆளில்லா வேவு விமானத்தின் ஒளிப்படக் கருவியில் பதிவாகவில்லை. எனவே இவ் ஆளில்லா வேவு விமானம் வான்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவே சிங்கள வான்படையினர் சந்தேகப்பட்டனர்.

அதாவது ஆளில்லா வேவு விமானத்தின் ஒளிப்படக் கருவியில் சிக்காத பகுதி ஒன்றில் இருந்து புறப்பட்ட வான்புலிகளின் வானூர்தி ஒன்று, ஆளில்லா வேவு விமானத்திற்கு மேலால் பறந்து அதனை சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்றே சிங்கள வான்படையினர் ஐயமுற்றனர்.

இச் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் குறித்த ஆளில்லா வேவு விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்கச் சென்ற போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆளில்லா வேவு விமானத்தின் பாகங்களை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் மீட்டெடுத்தால், அவ் விமானம் வெடித்துச் சிதறியதன் சூட்சுமத்தைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும், சிங்கள வான்படையினரும் அறிந்து கொள்வார்கள் என்பதாலேயே அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் திருப்பி அனுப்பினார்கள் என்று அப்பொழுது சிங்கள ஊடகங்கள் தெரிவித்தன.

இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது 11.08.2006. அன்று முகமாலையிலும், தீவகம் அல்லைப்பிட்டியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகள் தொடுக்கப்பட்டன. சமநேரத்தில் பலாலியில் வெடியதிர்வுகள் ஏற்பட்டன. இது பற்றி முதலில் செய்தி வெளியிட்ட தமிழ்நெற் இணையம், வான்புலிகளின் விமானம் என்று சந்தேகிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத வானூர்தி ஒன்று பலாலி படைத் தளத்தில் உந்துகணைத் தாக்குதல்களை நிகழ்த்தியதாக செய்தி வெளியிட்டது. எனினும் இதனை மறுத்த அப்போதைய சிங்களத் தரைப்படைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க (தற்பொழுது மேஜர் ஜெனரல்), ‘பலாலியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பட்டம் கூடப் பறக்கவில்லை’ என்றார்.

ஆனால் இது பற்றி பி.பி.சி தமிழோசைக்கு மறுநாள் செவ்வி வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், மூலோபாயக் காரணங்களுக்காக பலாலியில் வான்புலிகளின் விமானம் தாக்குதல் நிகழ்த்தியதா, இல்லையா என்பதைப் பற்றித் தன்னால் தெரிவிக்க முடியாது என்றும், ஆனாலும் ‘பட்டம் கூடப் பறக்காமலா முகமாலையில் இருந்து ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்திற்குச் சிங்களப் படையினர் பின்வாங்கினார்கள்?’ என்றும் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை இச் சம்பவங்கள் நிகழ்ந்த மறுநாள் ஐ.பி.சி தமிழ் வானொலியின் (தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாகத்தின் கீழ் தமிழ்த் தேசிய ஊடகமாக அது இயங்கிய பொழுது) வன்னிச் செய்தியாளராக விளங்கிய முருகேசு விவேக் என்பவர் தனது செய்தி ஆசிரியரிடம் உரையாடும் பொழுது, கிளிநொச்சியில் 11.08.2006 அன்று இரவு நீண்ட நேரத்திற்கு வான்புலிகளின் வானூர்திகளின் இரைச்சலை தாம் செவிமடுத்ததாகவும், இவற்றின் இரைச்சல் இரணைமடுவை அண்டிய பகுதிகளிலேயே செவிமடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க கள நிலவரங்கள் பற்றி இரண்டு நாட்கள் கழித்து 13.08.2006 அன்று ‘த சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையில் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் எழுதிய கட்டுரையில், பலாலி சிங்கள படைத்துறைத் தலைமையகத்தின் மேலாகவும், முகமாலை முன்னரண்களின் மேலும் இரட்டை இறக்கை பொருத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் பறந்ததாக சிங்களப் படை அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தார். அத்துடன் பலாலி படைத்துறைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் சிங்களப் படையினரின் பெல் 212 (Bell 212) ரக உலங்குவானூர்தி ஒன்றும், விமானங்களுக்கான எரிபொருள் தாங்கி ஒன்று பலத்த சேதமடைந்ததாகவும் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டிருந்தார்.

இவை நிகழ்ந்து ஏறத்தாள இரண்டு வாரங்களின் பின்னர் செய்தி வெளியிட்ட புலிகளின் குரல் வானொலி, 11.08.2006 அன்று பலாலி படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் சிங்கள வான்படையின் உலங்குவானூர்தி ஒன்று அழிக்கப்பட்டதாக அறிவித்தது. சில மாதங்களின் பின்னர் இன்னொரு உரிமை கோரலையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டார்கள். சிங்களப் படைகளுக்கு எதிரான கொமாண்டே பாணியிலான வேவு நடவடிக்கைகள், தாக்குதல்கள் என பலதரப்பட்ட மயிர்கூச்செறியும் தாக்குதல்களை மேற்கொண்டு ஒவ்வொரு தடவையும் உயிருடன் மீண்ட கரும்புலி லெப்.கேணல் பூட்டோ அவர்கள் 11.08.2006 அன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய நடவடிக்கை ஒன்றில் வீரச்சாவைத் தழுவினார் என்பது தான் அது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகாது, வெளிப்படையான யுத்தத்தில் இறங்காது, சிங்களப் படைகளுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் என்பதால், 19.10.2005, 11.08.2006 ஆகிய நாட்களிலும் என்ன நடந்தது என்பது பற்றிய அதிகாரபூர்வ தகவல்களை இறுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிடவில்லை. ஆனால் சிங்களப் படைகளுக்கு எதிரான வான்புலிகளின் முதலாவது நடவடிக்கை 26.03.2007 இற்கு முன்னரே நிகழ்ந்தது என்பதை உறுதிசெய்யும் இன்னொரு செய்தி 01.11.2007 அன்று வெளியாகியிருந்தது.

01.11.2007 அன்று வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசிய பாசறை ஒன்றில் வான்புலிகள் மற்றும் வேவுப் புலிகளுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழீழ மறமாணி விருது, தமிழீழ மறவர் விருது, தமிழீழ ஒளிஞாயிறு விருது, தமிழீழ நீலப்புலி விருது ஆகியவையே இவ் விருதுகளாகும். இவ்விருதுகளில் சிங்களப் படைகளுக்கு எதிராகவும், அவர்களின் படைத்தளங்கள் மீதும் தொடர்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் ஐந்து தடவைகள் தாக்குதல்களை நிகழ்த்தியமைக்காக வான்புலிகளின் வானோடிகளுக்கு நீலப்புலி விருது வழங்கப்பட்டது. இவ் விருதைப் பெற்றவர்களில் வான்கரும்புலி கேணல் ரூபன் அவர்களும் ஒருவர்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், சிங்களப் படைகளுக்கு எதிரான வான்புலிகளின் உரிமை கோரப்பட்ட முதலாவது தாக்குதல் 26.03.2007 அன்று கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது நிகழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 24.04.2007 அன்று பலாலி – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த சிங்களப் படைகளின் ஆயுதக் கிடங்குகள் மீதும், 29.04.2007 அன்று கொழும்பு கொலன்னாவ, முத்துராஜவெல ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த சிங்கள அரசின் எண்ணெய்க் குதங்கள் மீதும், நீலப்புலி விருது வழங்கப்படுவதற்கு முன்னர் 22.10.2007 அன்று அனுராதபுரம் வான்படைத்தளம் மீதும் வான்புலிகளால் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. அதாவது கேணல் ரூபன் அவர்களுக்கும், ஏனைய வானோடிகளுக்கும் நீலப்புலி விருது வழங்கப்படுவதற்கு முன்னர் நான்கு உரிமை கோரப்பட்ட தாக்குதல்களையே வான்புலிகள் நிகழ்த்தியிருந்தார்கள். ஆனால் இவ் விருதானது தொடர்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் ஐந்து தாக்குதல்களை நிகழ்த்தியமைக்காகவே கேணல் ரூபன் அவர்களுக்கும், ஏனைய வானோடிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.     

ஆக, வான்புலிகளின் உண்மையான பலம் என்ன என்பதை அறிந்திராது, வான்புலிகளைப் பற்றித் தான்தோன்றித்தனமான முறையில் பேசி கே.பி அவர்கள் எள்ளி நகையாடிக் கொண்டிருந்தமை, அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு சினத்தை ஏற்படுத்தியது நியாயமானது தான்.

..........

எக்ஸ் (X) என்று நாம் விளித்த தமிழ்த் தேசிய ஊடகவியலாளருடன் சபீர் (Safir) விடுதியை மருத்துவர் அருட்குமார் அவர்கள் சென்றடைந்த பொழுது எகிப்தில் நேரம் அதிகாலை ஒன்றரை மணியைக் கடந்திருந்தது.

ஆனாலும் இருவரும் உறங்குவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. ஏனென்றால் அன்று அதிகாலை 4:00 மணியளவில் விடுதியை விட்டுப் புறப்பட்டு, தொடருந்து மூலம் போர்ட் சயீட் (Port Said) என்ற துறைமுகத்தை அவர்கள் சென்றடைய வேண்டும் என்ற தகவலை சபீர் விடுதியில் அவர்களுக்காக காத்திருந்த வை (Y) என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் தெரிவித்தார். போர்ட் சயீட் என்ற துறைமுகம் சுயஸ் (Suez) கால்வாயின் வாயிற் புறத்தை அண்டி அமைந்திருந்தது. அங்கு தான் வணங்கா மண் என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட கப்டன் அலி என்ற கப்பல் வருகை தர இருந்தது. அதனால் கிடைத்த இரண்டரை மணிநேர அவகாசத்திற்குள் உணவருந்தித் தயாராகி விட்டு கைரோவில் இருந்து மூவரும் புறப்பட்டார்கள். நண்பலுக்கு முன்னரே போர்ட் சயீட் துறைமுகத்தை மூவரும் சென்றடைந்து, அங்கு விடுதி ஒன்றில் தங்கி ஓய்வெடுத்தார்கள். ஆனால் அன்று மாலை 4:00 மணியாகியும் கப்பல் மட்டும் வரவில்லை.

திடீரென வை என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர, சிறிது நேரம் உரையாடி விட்டு ஏனைய இருவரிடமும் வந்த அவர் கூறினார்: ‘கப்பல் இன்றைக்கு நள்ளிரவு தான் வந்து சேருமாம். பெரும்பாலும் நாளைக்குத் தான் (15.05.2009) நாங்கள் ஏறலாம்.’

இது நிகழ்ந்த சில நிமிடங்களில் எக்ஸ் என்ற தமிழ்த் தேசிய ஊடகவியலாளருக்கு நோர்வேயில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் நெடியவன் பேசினார்: ‘நீங்கள் கப்பலில் ஏறி விட்டீங்களா?’ என்பது தான் அவர் கேட்ட முதற் கேள்வி. கப்பல் இன்னமும் வந்தடையவில்லை என்ற தகவலை எக்ஸ் என்ற ஊடகவியலாளர் தெரிவித்ததும் அவரிடம் நெடியவன் கூறினார், ‘நீங்கள் கப்பலில் ஏறும் முன் எனக்குச் சொல்லிப் போட்டு ஏறுங்கோ. அங்கை (முள்ளிவாய்க்காலில்) நிலைமை மோசம். கடைசிக் கட்டத்தில் எல்லாம் நிற்குது. நீங்கள் இனி அங்கை போய் எந்தப் பிரயோசனமும் இல்லை.’

இந்த அதிர்ச்சித் தகலைக் கேட்டதும் தனது வன்னித் தொடர்புகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கு குறித்த ஊடகவியலாளர் முற்பட்டார். கடும் முயற்சியின் பின்னர் ஒருவரது தொடர்பு மட்டும் கிடைத்தது. அவர் சிரித்துக் கொண்டே கூறினார்: ‘நீங்கள் இனி இஞ்சை வந்து ஒரு பிரயோசனமும் இல்லை. எல்லாம் முடியப் போகுது. ஏற்கனவே எங்களோடை நின்ற சில பேரை சனத்தோடு சனமாக வவுனியாவுக்குப் போகச் சொல்லிப் போட்டம். நாளைக்கு நாங்கள் உயிரோடை இருப்பமோ தெரியாது. நாங்கள் இல்லாத இடத்துக்கு நீங்கள் வந்து ஒரு பலனும் இல்லை. என்றபடியால் நீங்கள் நிலைமையைப் பார்த்து முடிவு எடுங்கோ.’

அன்று இரவு முழுவதையும் பதற்றத்துடனேயே மூவரும் கழித்தார்கள். ஊடகவியலாளர் எக்ஸ் அவர்களின் தொலைபேசி எண்ணிற்கும், மின்னஞ்சலுக்கும் இரவிரவாக களநிலவரங்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. வாழ்வா? சாவா? என்ற நிலையில் வன்னியில் இருந்த தொடர்பாளர்கள் இருந்ததால், இடையிடையே தான் முள்ளிவாய்க்காலில் இருந்து மின்னஞ்சல் மூலம் செய்திகள் வந்தன. ஆனால் சிங்கள அரச கட்டுப்பாட்டுப் பகுதி ஒன்றில் எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தங்கியிருந்த தென்தமிழீழத்தைச் சேர்ந்த மாறன் என்றழைக்கப்படும் நாகராஜா இளமாறன் (தற்பொழுது கனடாவில் வசிக்கிறார்) என்ற செய்தியாளரும், யாழ்ப்பாணத்தில் விதானையாராக பணிபுரிந்தவாறு, மறைமுக செய்தியாளராக இயங்கி வந்த நவம் என்றழைக்கப்படும் நவரட்ணராஜா அவர்களும் மட்டும் இரவிரவாக தமக்குக் கிடைத்த தகவல்களை குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்படும் செய்திகள் தொடக்கம், முள்ளிவாய்க்காலை சிங்களப் படைகள் ஆக்கிரமிக்கும் நிலையில் இருந்தமை வரையான இச்செய்திகளை எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கூறியதும் பொறுத்துக் கொள்ள முடியாத மருத்துவர் அருட்குமார், கே.பி ரெஜியின் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து: ‘அங்கை சனம் சாகுது: நீங்கள் நித்திரை கொள்ளுறியளோ?’ என்று திட்டினார்.

16.05.2009 காலை விடிந்த பொழுது முள்ளிவாய்க்காலின் கடற்கரை சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட செய்தி வந்திருந்தது. இனி வணங்கா மண் கப்பல் வன்னி செல்வதில் எந்தப் பயனும் இல்லை என்பது உறுதியாகியது. அப்பொழுது கப்பலின் கப்டனின் உதவியாளர் ஒருவர் எக்ஸ் என்ற ஊடகவியலாளருக்குத் தொலைபேசி மூலம் தொடர்பெடுத்து, கப்பல் நள்ளிரவுக்குப் பின்னரே சுயஸ் கால்வாய்க்கு வந்ததாகவும், ஆனால் அப்பொழுது போர்ட் சயீட் துறைமுகம் மூடப்பட்டிருந்ததால் கப்பல் அங்கிருந்து ரெட் சீ போர்ட் (Red Sea Port) என்ற துறைமுகத்திற்கு செல்ல நேர்ந்ததாகவும், அங்கு வந்து மூவரையும் கப்பலில் ஏறுமாறும் கூறினார்.
 
(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு (02.10.2018)