ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 20

செவ்வாய் அக்டோபர் 23, 2018

தலைவரை சூழ்நிலைக் கைதியாக்க கே.பி. வகுத்த திட்டம்
- கலாநிதி சேரமான்

16.05.2009 காலை 8:00 மணி.

எகிப்தின் போர்ட் சயீட் (Port Said) துறைமுகத்தில் அமைந்திருக்கு ரெஸ்ரா போர்ட் சயீட் (Resta Port Said) விடுதியின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மூன்று ஈழத்தமிழர்களின் செல்பேசிகளில் இருந்து, மாறி மாறி இலண்டனுக்கும், நோர்வேயிற்கும் இடையில் அலைபேசி அழைப்புக்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.

Resto Port Said

‘முள்ளிவாய்க்கால் கடற்கரையை ஆமிக்காரன் பிடிச்சிட்டான். இனி வணங்கா மண் கப்பல் வன்னிக்குப் போகாது. கப்பலில் ஏறி எந்தப் பிரயோசனமும் இல்லை. நான் இது பற்றி ஏற்கனவே நேற்று வன்னிக்குக் கதைச்சனான். நோர்வேயில் நெடியவனோடும் கதைச்சனான். என்னை என்ரை சொந்த முடிவை எடுக்கச் சொல்லிப் போட்டீனம். நான் இலண்டனுக்கு திரும்பிப் போகிறேன். நீங்கள் என்ன செய்யப் போகிறியள்?’

இவ்வாறு எக்ஸ் (X) என்று நாம் விளிக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் கூறியதும், எதுவும் பேசாது நோர்வேயில் இருந்து வந்திருந்த வை (Y) என்று நாம் விளிக்கும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் அமர்ந்திருந்தார்.

அப்பொழுது மருத்துவர் அருட்குமார் பேசத் தொடங்கினார்: ‘நான் இதைப் பற்றி ரெஜியோடை கதைச்சுப் போட்டுத் தான் முடிவு எடுக்கப் போகிறேன்.’

Arudkumar

இவ்வாறு மருத்துவர் அருட்குமார் கூறியதும் எக்ஸ் என்ற ஊடகவியலாளர் அவரை எள்ளிநகையாடியவாறே கூறினார்: ‘மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்று சொல்லுவீனம். நீங்கள் ரெஜி என்ற மண்குதிரையை நம்பிக் கடலில் இறங்கப் போகிறீங்களா? உங்களை இவ்வளவு நாளும் பேய்க்காட்டிய ரெஜி கடைசியில் உங்களை கொழும்புக்கு அனுப்பி ராஜபக்சவின் சிறையில் அடைக்கப் போகிறார்.’

Regi

இதற்கு எதுவும் பேசாது மௌனமாக சில விநாடிகள் இருந்த மருத்துவர் அருட்குமார், தனது செல்பேசியை கையில் எடுத்தவாறு ரெஜியுடன் தனிமையில் உரையாடுவதற்காக அங்கிருந்து மெதுவாக அகன்றார்.

அப்பொழுது எக்ஸ் என்ற ஊடகவியலாளரின் செல்பேசி அலறியது. மறுமுனையில் நெடியவன். அவரிடம் எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கூறினார்: ‘அண்ணை, நான் அமைப்பை நம்பித் தான் வெளிக்கிட்டு வந்தனான். என்ரை நோக்கம் வன்னிக்குப் போய் உண்மையை வெளியுலகிற்குக் கொண்டு வாறது. ஆனால் இப்ப இருக்கும் நிலையில் கடற்கரை போய்விட்டது. வன்னிக்குத் தொடர்பு எடுக்கிறதே கஸ்ரமாக இருக்குது. ரெஜியை நம்பி நான் ஒரு நாளும் கப்பலில் ஏற மாட்டேன்.’

அதற்கு நெடியவன் கூறினார்: ‘நீங்கள் சொல்லுவது உண்மை. கப்பல் இனி வன்னிக்குப் போகாது. ஆனால் சனத்துக்கு என்று சேர்த்த பொருட்களை வவுனியாவில் உள்ள முகாம்களுக்காவது கொண்டு போய் கொடுக்க வேண்டும். கப்பல் திருகோணமலைக்கு அல்லது கொழும்புக்குத் தான் இனிப் போகும். அது தான் இனிமேல் நடக்கப் போகின்றது.’

உடனே எக்ஸ் என்ற ஊடகவியலாளர் சொன்னார்: ‘கப்பல் திருகோணமலைக்கோ அல்லாவிடின் கொழும்புக்கோ போனால் எங்களை ராஜபக்ச என்ன செய்வான் என்று தெரியும். உடனே சிறையில் அடைப்பாங்கள். வன்னிக்குப் போகிறேன் என்று வெளிக்கிட்டு கொழும்பில் போய் ஆமியின் சிறையில் இருக்க நான் ரெடி இல்லை (தயார் இல்லை).’

இதனை நெடியவன் மறுக்கவில்லை. அப்பொழுது வை என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரின் முடிவு பற்றி நெடியவன் வினவினார். அவருக்கோ இரண்டு மனம். ஒரு வேளை களநிலவரத்தில் திடீரென பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற நப்பாசையுடன் இருந்த அவர் கூறினார்: ‘நான் கப்பலில் ஏறுகிறேன். கப்பலுக்கான ஒழுங்குகளை நானும் சேர்ந்து தான் செய்தனான். என்ற படியால் நான் நோர்வேயிற்குத் திரும்பிப் போகவில்லை. நடக்கிறது நடக்கட்டும், நான் கப்பலில் ஏறுகிறேன்.’

இவ்வாறு கூறிவிட்டு நெடியவனின் தொலைபேசி அழைப்பை அவர்கள் துண்டித்ததும் அங்கு வந்த மருத்துவர் அருட்குமார், முகத்தில் எந்தச் சலனத்தையும் காண்பிக்காதவாறு கூறினார்: ‘நானும் கப்பலில் ஏறுகிறேன்.’

ரெஜி என்ற மண்குதிரையை நம்பி சிங்களப் படைகளிடம் இவர்கள் இருவரும் சிக்குவது மட்டும் அக்கணத்தில் உறுதியாயிற்று. அப்பொழுது எக்ஸ் என்ற ஊடகவியலாளர் கூறினார்: ‘சரி, நீங்கள் கொழும்புக்குப் போய் ஆமியிட்டை மாட்டுப்படுங்கோ. நான் இலண்டனுக்குப் போகிறேன்.’

..........

வான்புலிகளின் பலம், பலவீனம் பற்றியெல்லாம் தனக்குத் தெரியாதது எதுவுமில்லை என்ற இறுமாப்பில் பேசிக் கொண்டிருந்த கே.பியின் பேச்சு இப்பொழுது மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவரை வன்னியில் இருந்து மீட்டுச் செல்வது பற்றிய தனது அம்புலிமாமா கதைப் பக்கம் திரும்பியது.

கே.பி பேசத் தொடங்கினார்: ‘ஹெலிக்கொப்டரில் (உலங்குவானூர்தியில்) தலைவரையும், அவரது குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு கப்பலுக்கு வந்ததும், அவரை அங்கிருந்த பாதுகாப்பான ஒரு நாட்டுக்குக் கொண்டு போய் அங்கு அவரது தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கிறது தான் என்ரை திட்டமாக இருந்தது. ஆனால் என்ரை திட்டத்தை உந்த நெடியவனும், கஸ்ரோவும் குழப்பிப் போட்டாங்கள்.’

Castro

நெடியவன் பற்றியும், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்கள் பற்றியும் கே.பி புரணி பாடியதைப் பற்றி அலட்டிக் கொள்ளாது அவரது பிடியில் இருந்தவர் கேட்டார்:

‘தலைவரை நீங்கள் எந்த நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவதாக இருந்தனீங்கள்? அதுக்கு அந்த நாட்டு அரசாங்கம் இணங்கியதா?’

மீண்டும் கே.பி பேசத் தொடங்கினார்: ‘நான் அவுஸ்திரேலியாவில் இருக்கிற ஜோய் மகேஸ்வரனோடை இதைப் பற்றிக் கதைச்சனான். அவர் ஈஸ்ட் (கிழக்கு) தீமோர் அரசாங்கத்தோடை கதைச்சவர். அவையளும் தலைவருக்கும், அவரின்ரை குடும்பத்துக்கும் அரசியல் அடைக்கலம் குடுக்கிறதுக்கு இணங்கினவையள். அங்கை தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையகத்தை உருவாக்கிறதுக்கு யோசிச்சிருந்தனான்.’

Joy Maheswaran

‘கிழக்குத் தீமோரா? அது அவுஸ்திரேலியன் அரசாங்கத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ள நாடாயிற்றே? அவுஸ்திரேலியாக்காரங்களுக்கு இயக்கத்தைக் கண்ணிலை காட்டாதே? பிறகெப்படி தலைவருக்கு கிழக்குத் தீமோர் அரசாங்கம் அரசியல் அடைக்கலம் கொடுக்கும். அது தலைவரை அமெரிக்கனிட்டையும், இந்தியாவிட்டையும் பிடிச்சுக் கொடுக்கிற வேலையாக அல்லவா முடியும்?’ இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டதும், கே.பியின் முகம் கறுத்துப் போனது.

..........

எகிப்தின் ரெஸ்டா போர்ட் சயீட் விடுதியின் வரவேற்பறையில் சில விநாடிகளுக்கு ஒரு விதமான நிசப்தம் நிலவியது. அந்த காலைப் பொழுதின் அமைதியைக் கலைத்தவாறே எக்ஸ் என்ற தமிழ்த் தேசிய ஊடகவியலாளரிடம் மருத்துவர் அருட்குமார் கேட்டார்: ‘நீங்கள் எங்களோடு ரெட் சீ போர்ட் (Red Sea Port) வரைக்கும் வாகனத்தில் வந்து எங்கள் இரண்டு பேரையும் கப்பலில் ஏத்திப் போட்டு இலண்டனுக்குத் திரும்பிப் போகலாமே?’

மருத்துவர் அருட்குமாரின் வேண்டுகையை நிராகரிக்க மனமில்லாமல் அவர்களுடன் ரெட் சீ போர்ட் வரை எக்ஸ் என்ற ஊடகவியலாளர் சென்றார். மகிழுந்தில் இருந்து துறைமுகத்தில் அவர்கள் இறங்கும் பொழுது கூட அவர்களிடம் எக்ஸ் என்ற ஊடகவியலாளர் வேண்டினார்: ‘ரெஜியை நம்பி ஏன் வீணாக கொழும்புக்குப் போய் ஆமியிடம் மாட்டுப்பட வேண்டும் என்று விரும்புகிறியள்? டொக்டர், நீங்கள் என்னோடு இலண்டனுக்கு வாங்கோ. மற்றவர் நோர்வேயுக்குத் திரும்பிப் போகட்டும்.’

ஆனால் அதனை இருவரும் ஏற்கவில்லை. அவர்களை கப்பலில் ஏற்றி விட்டு அன்றிரவு எகிப்துத் தலைநகர் கைரோ திரும்பி, அங்கிருந்து மறுநாள் 17.05.2009 மாலை புறப்பட்டு இலண்டனை எக்ஸ் என்ற ஊடகவியலாளர் சென்றடைந்தார். மறுநாள் 18.05.2009 அன்றும், அதற்கு அடுத்த நாள் 19.05.2009 காலையும் கப்பலில் இருந்தவாறு செய்கோள் தொலைபேசி மூலம் அவருடன் வை என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் உரையாடினார். வன்னிக் களநிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டார். அந்த உரையாடல் தான் திருப்புமுனையாக அமைந்தது.

அப்பொழுது தான் வை என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருக்கும், மருத்துவர் அருட்குமாருக்கும் ஒரு உண்மை உறைத்தது. வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் கே.பி.ரெஜியை நம்பித் தாம் கொழும்பு செல்வது எவ்வளவு ஆபத்தானது என்ற உண்மைதான் அது. அதன் படி அவர்கள் இருவரும் தாம் வாழும் நாடுகளான பிரித்தானியா, நோர்வே ஆகியவற்றுக்கு திரும்பிச் செல்வது என்று முடிவெடுத்தார்கள். அக்கணத்தில் ஆகூழ் (அதிர்ஸ்டம்) அவர்களின் பக்கம் இருந்தது. ஏனெனில் 19.05.2009 அன்று மதியம் ஆகியும் கூட எகிப்தை விட்டு வணங்கா மண் கப்பல் புறப்படவில்லை.

19.05.2009 மதியம் வணங்கா மண் கப்பலில் இருந்து இருவரும் இறங்கிக் கைரோ சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தத்தமது நாடுகளை சென்றடைந்தார்கள். இலண்டனில் இருந்து பிரான்சை வந்தடைந்து, அங்கிருந்து வணங்கா மண் கப்பலில் ஏறிய உதயணன் என்ற தமிழின உணர்வாளர் மட்டும், எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற திடத்துடன் கப்பலில் பயணித்தார். அவ்வாறு அவர் நடந்து கொண்டதற்குக் கே.பி.ரெஜி மீது அப்பொழுது அவர் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக இருக்கலாம்.

Uthayanan

இதற்கிடையே, பிரான்சில் இருந்து வணங்கா மண் கப்பலில் சென்ற தமிழ்ப் பொறியியலாளரும் ரெட் சீ போர்ட் துறைமுகத்தில் இறங்கிவிட்டார்.

மறுபுறத்தில் எகிப்தில் இருந்து புறப்பட்ட வணங்கா மண் கப்பல் ஈழத்துக் கடற்பரப்பை நெருங்கியதும், எக்ஸ் என்ற ஊடகவியலாளர் எதிர்வுகூறியபடி சிங்களக் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டுச் சிறைப்பிடிக்கப்பட்டது. உதயணனும் கைது செய்யப்பட்டு தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவரது விடுதலைக்கான தகுந்த நடவடிக்கைகளை ரெஜி எடுக்கவில்லை. மாறாக இது விடயத்தில் சில தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் எடுத்த முயற்சியின் விளைவாகவும், உதயணன் அவர்களின் குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தின் பெறுபேறாகவும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஊடகங்களும் இதில் தலையிட ஈற்றில் உதயணன் விடுதலையானார்.

மறுபுறத்தில் வணங்கா மண் கப்பலில் கொண்டு செல்;லப்பட்ட பொருட்கள், சென்னைக்கும், கொழும்புக்கும் இடையில் பந்து போல் பல நாட்கள் அல்லாடின. இறுதியில் வவுனியா முகாம்களை அவை சென்றடைந்த பொழுது, அவற்றில் பல பாவனைக்கு உதவாதவையாக மாறியிருந்தன.

..........

‘நான் ஈஸ்ட் தீமோர் அரசாங்கத்தோடு மட்டும் கதைக்கவில்லை. சவுத் அப்ரிக்கன் (தென்னாபிரிக்கா) கவன்மன்ரோடையும் (அரசாங்கத்தோடும்) இதைப் பற்றிக் கதைச்சனான். தலைவருக்கு அரசியல் தஞ்சம் கொடுக்கிறது பற்றி பிறெசிடன்ற் (அதிபர்) ஜேக்கொப் சூமாவோடு என்ரை ஆட்கள் கதைச்சவையள். ஆயுதப் போராட்டத்தைத் தலைவர் கைவிடுவார் என்றால், அவருக்கு அரசியல் தஞ்சம் கொடுக்கிறதுக்குத் தான் தயாராக இருக்கிறன் என்று அப்பவே என்ரை ஆட்களிட்டை சூமா சொன்னவர்.’

Zuma

கே.பியின் இந்தக் கூற்று அவரது பிடியில் சிக்கியிருந்தவருக்கு ஒரு உண்மையை நிதர்சனமாக்கியது. நெல்சன் மண்டேலா, அப்துல்லா ஒசலானோ போன்றோரை சிறையில் அடைத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அவர்களை தென்னாபிரிக்காவின் வெள்ளையின ஆட்சியாளர்களும், துருக்கிய அரசாங்கமும் தமது வழிக்குக் கொண்டு வந்தது போன்று, இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழீழ தேசியத் தலைவரை வழிப்படுத்துவதற்கு அமெரிக்கா வகுத்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒப்பான திட்டத்தைக் கே.பி கொண்டிந்தார் என்பதுதான் அது.

Ocalan

அமெரிக்காவின் திட்டம் இதுதான்: தமிழீழ தேசியத் தலைவர் இணங்கினால், அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கப்பல் படை அணி ஒன்று முள்ளிவாய்க்கால் கடலில் நங்கூரமிடும். அதிலிருந்து தரையிறங்கும் அமெரிக்க கடற்படையினரிடம் தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல உறுப்பினர்களும் சரணடைவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் கொள்கலன்களில் அடைக்கப்படும். சாதாரண போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள். தமிழீழ தேசியத் தலைவர், பொட்டு அம்மான் மற்றும் மூத்த தளபதிகள் - பொறுப்பாளர்கள் இந்திய – மேற்குலக கண்காணிப்பின் கீழ் தென்னிலங்கைச் சிறைகளில் அடைக்கப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும். தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் மட்டும் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை எதிராளிகளாக நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சமநேரத்தில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் கண்காணிப்பின் கீழ் சிறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நிகழும். பேச்சுவார்த்தைகளின் முடிவில் இந்தியாவினதும், மேற்குலகினதும் அங்கீகாரம் பெற்ற அரசியல் தீர்வு ஒன்றுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை இணங்க வேண்டும்.

Blake

இதுதான் அமெரிக்காவின் திட்டம். இந்தத் திட்டம் இரண்டு வழிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. முதலாவதாக உருத்திரகுமாரன் மற்றும் அப்பொழுது அவரது உதவியாளராக விளங்கிய பரந்தாமன் என்றழைக்கப்படும் வழுதி (பொபி) ஆகியோர் ஏற்படுத்திக் கொடுத்த தொடர்பின் ஊடாக ஜேம்ஸ் கிளேட் (James Clade) என்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சரால் தொலைபேசி மூலம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களிடம் இத் திட்டம் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவதாக அப்பொழுது கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவராக விளங்கிய ரொபேட் ஓ பிளேக் (Robert O'Blake) அவர்களால் அப்போதைய நோர்வே தூதுவர் ரொறெ ஹற்ரெம் (Tore Hattrem) அவர்களின் ஊடாக கோலாலம்பூரில் வைத்து கே.பியிடம் இத்திட்டம் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் அடியோடு நிராகரிக்கப்பட்டதோடு, இப்படியான மட்டமான திட்டங்களைக் கைவிட்டு, வன்னி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளுக்குப் பங்கம் விளைவிக்காத விதத்திலுமான நிரந்தர போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்குலக இராசதந்திரிகளுடன் மேற்கொள்ளுமாறு கே.பி அவர்களுக்கும், அவரது ஆலோசகரான விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களுக்கும் வன்னியில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இது பற்றிக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஈழமுரசுலீக்ஸ்: தந்திரிகளின் மறுமுகம்’ என்ற தொடரில் ஏலவே நாம் குறிப்பிட்டிருந்தோம்.

Rudra

அமெரிக்காவின் இத்திட்டம் பற்றி கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் ஏற்கனவே அறிந்திருந்ததால், தலைவரை மீட்பது பற்றிய கே.பியின் அம்புலிமாமா கதைக்கும், அமெரிக்காவின் திட்டத்திற்கும் இடையில் காணப்பட்ட ஒற்றுமையை அவரால் துல்லியமாக இனம் காண முடிந்தது.

..........

சிங்களத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பகீரத பிரயத்தனங்களில் மலேசியாவில் இருந்தவாறு கே.பி, தயாமோகன், இராமு.சுபன் (சுகி), இன்பம் போன்றோர் ஈடுபட்டிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் சொத்துக்களை இலக்கு வைத்து கிரிதல காட்டுப் புறத்தில் இயங்கிய போலித் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் இருந்தவாறு தவேந்திரன், நகுலன், ராம் ஆகியோர் காய்களை நகர்த்த, மேற்குலக நாடுகளில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளையும், தமிழ்த் தேசிய அமைப்புக்களையும், ஆசிய நாடுகளில் தங்கியிருந்த போராளிகளையும் குறிவைத்து பனாகொட முகாமில் இருந்து இன்னொரு வியூகம் சிங்களப் படையப் புலனாய்வுத்துறையால் வகுக்கப்பட்டது.

இவ் வியூகத்தின் நடுநாயகங்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவரது பெயர் கமல் என்றழைக்கப்படும் கமலசிங்கம் அருணகுலசிங்கம். நோர்வேயில் வசிப்பவர். யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறையில் இரட்டை முகவராகப் பணிபுரிந்தவர். மற்றையவர் சிரஞ்சீவி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஜீவகுமார் ஜீவரத்தினம். தற்பொழுது மலேசியாவில் வசித்து வருவதாகக் கருதப்படுபவர். இவர்களை நடுநாயகங்களாகக் கொண்டு பனாகொட முகாமில் சிங்களப் படையப் புலனாய்வுத்துறையினரால் வியூகம் வகுக்கப்பட்ட பொழுது சிரஞ்சீவி மாஸ்டர் வவுனியா ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமில் தங்கியிருந்தார்.

எனினும் வியூகம் இறுதிசெய்யப்பட்டதும் 02.06.2009 அன்று ஆனந்தகுமாரசுவாமி முகாமில் இருந்து சிரஞ்சீவி மாஸ்டர் விடுதலை செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஒரு வாரத்தில் அவர் மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகள் சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறையின் அதிபர் மேஜர் ஜெனரல் கபில காமின கெந்தவிதாரண அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன.

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு (16.10.2018)

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19