ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 21

வெள்ளி நவம்பர் 02, 2018

ஆனந்தகுமாரசுவாமி முகாமில் காத்திருந்த அதிர்ச்சி
- கலாநிதி சேரமான்

 

யார் அந்த சிரஞ்சீவி மாஸ்டர்?

 

2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து புலம்பெயர் தேசங்களில் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அரசியல் நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் சிங்களத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய நாடுகடந்த அரசாங்கம் என்ற மாயமான் கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை தயாமோகன், இன்பம், சுபன் (சுகி) ஆகியோரின் துணையுடன் மலேசியாவில் இருந்து கே.பி முன்னெடுக்க, அவற்றுக்குச் சமாந்தரமாக வெளிநாடுகளில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் குறிவைத்து கிரிதல காட்டுப்புறத்தில் இயங்கிய போலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறையில் இருந்து தவேந்திரேன், நகுலன், ராம் ஆகியோர் செயற்பட்டமை பற்றி கடந்த தொடர்களில் குறிப்பிட்டிருந்தோம்.

Thavendran
தவேந்திரன்

 

இவ்வாறான பின்புலத்தில் தான் 02.06.2009 அன்று வவுனியா ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமில் இருந்து சிரஞ்சீவி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஜீவகுமார் ஜீவரத்தினம் அவர்கள் பனாகொட படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு ஆசிய நாடுகளை மையப்படுத்தி அவர் மேற்கொள்ள வேண்டிய எதிர்ப்புரட்சி நடவடிக்கை பற்றி அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டரை, கிரமமாக மலேசியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறையின் அதிபர் மேஜர் ஜெனரல் காமினி கபில கெந்தவிதாரண மேற்கொண்டார்.

Suban
இராமு.சுபன் (சுகி)

 

சிரஞ்சீவி மாஸ்டர் ஒரு சாதாரண பொதுமகன் அல்ல. கிரிதலவில் போலித் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமை நடாத்திய தவேந்திரனைப் போல் அவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளியாக விளங்கியவர். அவர் மட்டுமல்ல: அவரது துணைவியாரும் ஒரு போராளி. இருவருமே கனகபுரம் பகுதியில் இயங்கிய ஒக்ஸ்பாம் (Oxfam) நிறுவனத்தின் பணிமனைக்கு முன்பாக அமைக்கப்பட்ட வீடொன்றில் வசித்து வந்தவர்கள்.

 

முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளிடம் சிரஞ்சீவி மாஸ்டர் சரணடைவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறையில் பணியாற்றியிருந்தார். அவரது தந்தை கொழும்பில் பிறந்தவர் என்ற வகையிலும், பல தசாப்த கொழும்புப் பின்னணியைக் கொண்டவர் என்பதாலும், சிரஞ்சீவி மாஸ்டரின் தொடர்புகளைப் பயன்படுத்தி ஆரம்பத்தில் தென்னிலங்கையிலும், மலையகத்திலும் சில நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டிருந்தார்கள். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டர், முதலில் கேணல் சார்ள்ஸின் கீழும், பின்னர் இரட்ணம் மாஸ்ரரின் கீழும் பணிபுரிந்தார்.

 

இக் கால கட்டத்தில் ஒரு நடவடிக்கையின் நிமித்தம் தென்னிலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டரின் துணைவியார், சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தனது துணைவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறையில் பணிபுரிகின்றார் என்ற உண்மையை விசாரணைகளின் பொழுது அவர் ஒப்புக் கொண்டார்.

 

முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளிடம் சரணடைந்ததும், மக்களோடு மக்களாக சிரஞ்சீவி மாஸ்டர் இருந்திருப்பாராயின் கதை வேறு. ஆனால் 17.05.2009 அன்று மாலை இரட்டைவாய்க்கால் ஊடாக சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் செய்கோள் தொலைபேசி மூலம் நோர்வேயில் இருந்த கமல் என்றழைக்கப்படும் கமலசிங்கம் அருணகுலசிங்கம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறை முகவருடன் தொடர்பு கொண்ட சிரஞ்சீவி மாஸ்டர், தான் மக்களோடு மக்களாக வவுனியாவிற்கு செல்லப் போவதாகவும், தன்னை அங்கிருந்து வெளியில் எடுப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கேட்டிருந்தார். அதற்கு முன்னர் தனது குடும்ப ஆவணங்கள் சிலவற்றை நோர்வேயில் உள்ள கமலுக்கு சிரஞ்சீவி மாஸ்டர் அனுப்பினார்.

 

இவைதான் சிரஞ்சீவி மாஸ்டரை ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமில் வைத்து இலகுவாக சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறையினரும், படையப் புலனாய்வுத்துறையினரும் அடையாளம் காண்பதற்கும், எவ்வித சிரமமும் இன்றி அவரைத் தமது வழிக்குக் கொண்டு வருவதற்கும் வழிவகுத்தன.

 

இவை பற்றி விபரிப்பதற்கு முன்னர், நோர்வே கமல் அவர்களின் பின்னணி பற்றிய சில தகவல்களை இங்கு நாம் பதிவு செய்வது அவசியமாகின்றது.

 

..........

 

‘நீங்கள் சொல்கின்ற திட்டங்கள் எல்லாம் டில்லி அசோகா விடுதியில் தலைவரை சூழ்நிலைக் கைதியாக வைத்திருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தி கையொப்பம் இட்டது போல் அல்லவா இருக்கின்றன?’

 

இவ்வாறு தனது பிடியில் சிக்கியிருந்தவர் கேட்டதும், கே.பியின் முகம் மீண்டும் கறுத்தது. சில விநாடிகள் எதுவும் பேசாதிருந்து விட்டுக் கூறினார்: ‘இதை விட இயக்கத்தையும், தலைவரையும் காப்பாற்றுவதற்கு எனக்கு வேறை வழி தெரியவில்லை. ஆனால் எல்லாத்தையும் நெடியவனும், கஸ்ரோவும் சேர்ந்து குழப்பிப் போட்டாங்கள். இதுக்கு வெளிநாட்டில் வான்புலிகளுக்குப் பொறுப்பாக இருந்தவரும் தான் காரணம்.’

KP

தனது தவறுகளை மறைத்து, மற்றவர்களின் மீது பழிபோடும் கே.பியின் பாங்கை அவரது பிடியில் மாட்டிக் கொண்ட இரண்டு நாட்களிலேயே அவரின் எதிரில் இருந்தவர் நன்கு புரிந்து கொண்டார். எது எப்படியோ, ரியூன் ஹொட்டேலுக்கு (Tune Hotel) சென்று, அங்கிருந்து விரைவாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றால் போதும் என்பதாக அவரது மனநிலை இருந்தது.

 

..........

 

தேட்டம் என்ற செயற்திட்டத்தின் கீழ் புலம்பெயர் தேசங்களில் திரட்டப்பட்ட பல நூறு மில்லியன் டொலர் நிதியில் ஏறத்தாள பத்து மில்லியன் பவுண்களைத் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை முதலீடு செய்ய வைத்து, பின்னர் அம் முதலீடு நட்டத்தில் முடிந்ததாகத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிப்பாளரான கே.பி.ரெஜின கபட நாடகமாடியமை பற்றி இப்பத்தியின் பதினாறாவது தொடரில் நாம் குறிப்பிட்டமை வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

Regi

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் நிதிப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில், கே.பி.ரெஜி நட்டக் கணக்குக் காட்டிய தொகையில் கணிசமானவற்றை அவர் கையகப்படுத்தினார் என்றே குற்றம் சுமத்தியிருந்தார். இக் குற்றச்சாட்டு உண்மையா? அல்லது அது ஒரு ஊகமா? என்பதை உறுதி செய்வதற்கான வளங்கள் எம்மிடம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் தற்பொழுது பிரித்தானியாவில் பல்வேறு பெயர்களில் வணிக நிறுவனங்களை கே.பி.ரெஜி நடத்தி வருவதை உறுதி செய்யும் அதிகாரபூர்வ ஆவணங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

 

உதாரணமாக கிழக்கு இலண்டன் இல்போர்ட் பகுதியில் 311 லே ஸ்ரிறீற் (311 Ley Street) எனும் முகவரியில் பிறென்கோ லிமிட்டட் (Brenco Ltd) என்ற பெயரில் உடுபுடவை விற்பனை நிலையம் ஒன்றை கே.பி.ரெஜி பதிவு செய்துள்ளார். தற்பொழுது கே.பி.ரெஜியின் பெயரில் இயங்கும் இந் நிறுவனம் முன்னர் அவரது உறவினரான அலன் பிறேமரெஜி என்பவரின் பெயரில் இயங்கியது.

Brenco

Brenco1

இதே முகவரியில் அட்சியா சில்க் என்ற பெயரில் ஈழத்து, இந்திய உடுபுடவைகள் மற்றும் துணி வகைகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகின்றது. இது பற்றி புலன் விசாரணை செய்யச் சென்ற எமது தொடர்பாளருக்கு, அட்சியா சில்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்ற தகவலை அங்கு பணிபுரிந்தவர்கள் வழங்க மறுத்ததோடு, அதனைத் தொடர்ந்து அவருக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் மிரட்டல்களும், துன்புறுத்தல்களும் விடுக்கப்பட்டன.

Adshiya Silk

இது போன்று இதே லே ஸ்ரிறீற் (Ley Street) என்ற முகவரியில் 117ஏ (117A) என்ற இலக்கத்தில் மேபெயார் குளோப் லிமிட்டட் (Mayfair Global Ltd) என்ற பெயரில் கே.பி.ரெஜியைப் பணிப்பாளராகக் கொண்டு இன்னுமொரு நிறுவனம் உள்ளது. நிதி முகாமைத்துவப் பணிகளின் ஈடுபடும் இந் நிறுவனம் இயங்கும் அதே கட்டிடத் தொகுதியில் எசெக்ஸ் பேர்சனல் றிகுறூற்மென்ற் (Essex Personnel Recruitment) என்ற பெயரில் இன்னுமொரு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனமும் இயங்கி வருகின்றது. இந் நிறுவனம் கே.பி.ரெஜியின் பெயரில் இல்லை: ஆனால் கே.பி.ரெஜியின் பெயரில் பதிவாகியுள்ள மேபெயார் குளோப் லிமிட்டட் நிறுவனத்தின் கட்டிடத்தில் அது இயங்குகின்றது.

Mayfair

இவ்விரு நிறுவனங்களும் கே.பி.ரெஜியின் முழுப் பெயரான காந்தலிங்கம் பிறேமரெஜி என்ற பெயரில் இயங்குகின்றன. ஆனால் இன்னும் நான்கு நிறுவனங்கள் காத்தலிங்கம் பிறேமரெஜி என்ற பெயரில், இதே இரண்டு முகவரிகளிலும் இயங்கி வருகின்றமை அடுத்த அதிர்ச்சித் தகவலாகும் (முதற்பெயரை கூர்ந்து கவனிக்கவும். காந்தலிங்கம் அல்ல: காத்தலிங்கம்).

Oxford

இதில் 311 லே ஸ்ரிறீற் (311 Ley Street) என்ற முகவரியில் இயங்கும் ஒக்ஸ்போர்ட் காசில்ஸ் இன்வெஸ்ற்மென்ற் லிமிட்டட் (Oxford Castles Investment Ltd) என்பது சாதாரண ஒரு நிறுவனம் அல்ல. காணிகளையும், கட்டிடங்களையும் வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் அது. அதன் முதலாவது பணிப்பாளராக மகேஸ் பாபு என்பவரும், இரண்டாவது பணிப்பாளராக கதிரித்தம்பி சத்தியமூர்த்தி என்பவரும், இறுதிப் பணிப்பாளராக கே.பி.ரெஜியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Oxford1

இதனை விட 117ஏ லே ஸ்ரிறீற் (117A Ley Street) என்ற முகவரியில் பி.ஆர். எக்கௌண்டிங்க் அன்ட் ரக்ஸ் லிமிட்டட் (P.R.Accounting and Tax Ltd), ரெக்னோ சொப்ற் லிமிட்டட் (Techknowsoft) Ltd, ஒறியன் பேயீ அம்பிறெலா லிமிட்டட் (Orion Payee Umbrella Ltd) ஆகிய பெயர்களில் மூன்று நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் ஒரு நிறுவனத்தின் பணிப்பாளராக கே.பி.ரெஜிக்கு முன்னர் மகேஸ்பாபு கணபதிப்பிள்ளை என்ற ஒருவர் இருந்துள்ளார். ஒக்ஸ்போர்ட் காசில்ஸ் இன்வெஸ்ட்மென்ற் லிமிட்டட்டின் முதலாவது பணிப்பாளராக விளங்கிய மகேஸ் பாபு இவராக இருக்கலாம்.

PR

PR1

Orion Payee

Techknowsoft

இவற்றை விட இன்னுமொரு அதிர்ச்சித் தகவலும் உள்ளது. சிங்கள அதிபராக 2015ஆம் ஆண்டு சிறீசேன பதவியேற்றதும், தனது பினாமி ஒருவரைப் பயன்படுத்தி இலண்டனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றை கே.பி.ரெஜி தொடங்கியது தான் அது.

 

..........

 

கமல் என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட கமலசிங்கம் அருணகுலசிங்கம் என்ற நோர்வேயில் வசிக்கும் நபர் முன்பொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளராக விளங்கியவர். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நிதியுதவி கேட்டு அக்காலப் பகுதியில் சென்ற செயற்பாட்டாளர்களை கடுமையாகத் திட்டித் தீர்த்து விரட்டியவர்.

 

ஆனால் 2007ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறையுடன் இணைந்து செயற்பட்ட அனைத்துலகத் தொடர்பகப் போராளியான வேல்மாறன் என்பவர், நோர்வேயில் பணிபுரிந்த செயற்பாட்டாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு இயக்கப் பணத்தில் ஒரு தொகுதியை கமல் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு கூறியிருக்கின்றார். இதனால் குறித்த செயற்பாட்டாளர் அதிர்ந்து போக, அவரிடம் வேல்மாறன் கூறினாராம், ‘கமல் எங்கடை ஆள் தான். நீர்கொழும்பில் அவரை வைச்சு சில நடவடிக்கைகளை செய்யப் போகிறோம். நீங்கள் அவரிட்டை நான் சொல்லும் பணத்தை கொடுங்கோ.’  
 

இதனைத் தொடர்ந்து 06.04.2008 அன்று கம்பஹா மாவட்டம் வெலிவெரியா பகுதியில் இடம்பெற்ற மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரான ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொல்லப்பட்ட பொழுது, இது கமலின் ஒழுங்கமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று சில செயற்பாட்டாளர்களிடம் வேல்மாறன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளேயின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் பின்னர் கைது செய்யப்பட்ட சேரமான், மொறிஸ் ஆகிய இரு சந்தேக நபர்கள் சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், பெர்னான்டோப்புள்ளே மீதான மனிதவெடிகுண்டுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய புலனாய்வுத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்று கூறிருந்தனர். அதாவது வேல்மாறன் கூறியது போன்று இத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறையினர் தொடர்புபடவில்லை. இது பற்றிய விலாவாரியான தகவல்களை 26.04.2016 அன்று வெளிவந்த ‘த ஐலண்ட்’ (The Island) என்ற ஆங்கிலமொழி சிங்களப் பத்திரிகையில் சமிந்திர பேர்டினான்டோ என்ற சிங்களப் பத்தி எழுத்தாளர் வெளியிட்டிருந்தார் (இவர் தான் கருணாவையும், பின்னர் கே.பியையும் முதன் முதலில் செவ்வி கண்டவர்). இதில் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீதான மனிதவெடிகுண்டுத் தாக்குதலுக்கு சிறீலங்கா காவல்துறையில் ஏ.எஸ்.பியாக பதவி வகித்த லக்ஸ்மன் கூரே என்பவரே தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய புலனாய்வுத்துறையினரிடம் பணம் பெற்று உதவினார் என்று சமிந்திர பேர்டினான்டோ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

 

இன்று நீர்கொழும்பில் பல வணிக நிறுவனங்களை கமல் என்பவர் இயக்கி வருகின்றார் என்பதும், மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த பொழுது அவர் இலங்கை சென்று வந்த ஒவ்வொரு தடவையும் விமான நிலையத்திற்கு வாகனம் அனுப்பி அவரை துரோகி கருணா அழைத்துச் சென்றார் என்பதும் இன்று நோர்வேயில் பரகசியமான ஒன்று. இவற்றையெல்லாம் நாம் பார்க்கும் பொழுது, கமல் என்பவர் இறுதி யுத்தத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறைக்கு விசுவாசமான முகவராக செயற்படாது, சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறையினருக்கு விசுவாசமான இரட்டை முகவராக செயற்பட்டார் என்றே கருத வேண்டியுள்ளது என்று நோர்வேயில் வசிக்கும் இதுவிடயத்தில் தொடர்புடைய செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

ஆக 17.05.2009 அன்று மாலை முள்ளிவாய்க்காலில் மக்களோடு மக்களாக சிங்களப் படைகளிடம் சரணடைவதற்கு முன்னர், இப்படிப்பட்ட இரட்டை முகவரான கமல் என்பவரை நம்பி அவரிடம் தனது முழு விபரங்களையும் சிரஞ்சீவி மாஸ்டர் கையளித்தது தான், ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமில் சிங்கள தேசிய புலனாய்வுத்துறையினரிடமும், படையப் புலனாய்வுத்துறையினரிடமும் அவர் மாட்டிக் கொள்வதற்கு வழிவகுத்தது.

 

அத்தோடு, சிரஞ்சீவி மாஸ்டர் மீதான தமது பிடியை இறுக்குவதற்குத் தமது தடுப்புக் காவலில் இருந்த அவரது துணைவியாரையும் துருப்புச் சீட்டாக சிங்களப் புலனாய்வாளர்கள் கையாண்டார்கள். அதாவது, எவ்வாறு விநாயகம் அவர்களின் துணைவியாரையும், பிள்ளைகளையும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து வெளிநாடுகளில் அவரையும், ஏனைய முன்னாள் போராளிகளையும் சிங்களப் புலனாய்வாளர்கள் கையாண்டார்களோ, அவ்வாறே சிரஞ்சீவி மாஸ்டரையும் கையாண்டார்கள்.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு (30.10.2018)

 

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20