ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 22

வெள்ளி நவம்பர் 16, 2018

மறையாத சூரியனும், அணையாத விடுதலைத் தீயும்!
- கலாநிதி சேரமான்

 

‘தலைவரை மீட்பதற்கு நீங்கள் போட்ட திட்டத்தை கஸ்ரோவும், நெடியவனும் குழப்பிப் போட்டீனம் என்கிறீங்கள். அதேநேரத்தில் உங்கள் திட்டத்தைப் பற்றித் தலைவரிட்டை நீங்கள் சொல்லவில்லை என்றும் சொல்கிறீங்கள். சிலவேளை வன்னியை விட்டு வெளியேறுவதற்குத் தலைவரிட்டை வேறு திட்டம் இருந்திருக்கலாம். அதனால் கஸ்ரோவும், நெடியவனும் உங்களுக்கு உதவப் பின்னடித்திருக்கலாம் அல்லவா?’

 

தனது பிடியில் சிக்கியிருந்தவர் கேட்ட இக் கேள்வி கே.பியை நிலைகுலைய வைத்திருக்க வேண்டும். சிறிது யோசித்து விட்டுப் பேசத் தொடங்கினார். அவரது பேச்சில் நிதானம் இருந்தது. ஆனால் பேசும் தொனியில் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுவது தென்பட்டது.

 

கே.பி கூறினார்: ‘நீங்கள் என்னை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை.’

KP
கே.பி

 

‘இல்லை, நீங்கள் தான் தலைவரை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. நான் அறிஞ்ச அளவில் தலைவர் என்ன சிந்திக்கிறார் என்பதை அவரது அருகில் நிற்போரால் கூட எடை போட முடியாது. நான் வன்னியில் நின்ற காலத்தில் பெரும்பாலும் எல்லாத் தளபதிமாரையும் சந்திச்சிருக்கிறன். எல்லாம் முடியப் போகுது, இனி எதுவும் சாத்தியமில்லை என்று எல்லோருமே நினைச்சிருந்த நேரங்களில் நினைச்சுப் பார்க்க முடியாத பல்வேறு விடயங்களை எல்லாம் தலைவர் செய்து காட்டியிருக்கிறார்.’

 

இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கூறியதும், கே.பி சீறிப் பாய்ந்தார்: ‘எனக்கு உங்களை விடத் தலைவரை நல்லாகத் தெரியும். உங்களுக்குச் சமாதான காலத்தில் தான் தலைவரைத் தெரியும். ஆனால் எனக்குத் தலைவரைக் கிட்டத்தட்ட முப்பது வருசமாகத் தெரியும். உங்களை மாதிரி ஆட்கள் தான் அவரைக் கடவுளாக்கி வைத்திருக்கீனம். ஆனால் அவர் என்னையும், உங்களையும் போல ஒரு சாதாரண மனிதர்.’

 

கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரோ சற்றும் நிதானம் இழக்காது கூறினார்: ‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். என்னைப் பொறுத்த வரையில் தலைவர் ஒரு கடவுள் இல்லை: மனிதன் தான். ஆனால் அவர் ஒரு சாதாரண மனிதர் இல்லை. அவரைக் கணிப்பது அவ்வளவு சாதாரண விடயம் இல்லை. ஏன் 2003ஆம் ஆண்டு உங்களை இயக்க வேலைகளில் இருந்து தலைவர் நீக்கப் போகிறார் என்று உங்களால் கணிக்க முடிந்ததா? இல்லை தானே! அப்படியிருக்க எப்படி வன்னியை விட்டு தலைவர் வெளியேறப் போகிறார் என்று உங்களால் கணிக்க முடியும்?’

 

உரையாடல் இப்பொழுது சூடான கட்டத்தை எட்டியிருந்தது. தமிழீழ தேசியத் தலைவரை மீட்பதற்குத் தான் போட்ட அம்புலிமாமா திட்டம் செயல்வடிவம் பெறத் தவறியதைப் பூதாகரப்படுத்தி, அதன் மூலம் தலைவரின் இருப்பை மறுதலிப்பதற்கும், அதனைத் தன்னிடம் சிக்கியிருந்தவரை ஏற்க வைப்பதற்கும் தான் எடுத்த முயற்சி மண்கவ்விக் கொண்டிருந்ததை கே.பியால் ஐயம்திரிபறப் புரிந்து கொள்ள முடிந்தது.  

 

..........

சிரஞ்சீவி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஜீவகுமார் ஜீவரத்தினம் அவர்களின் தேசிய அடையாள அட்டையில் அவரது பிறப்பிடம் யாழ்ப்பாணம் என்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரது நிரந்தர முகவரியாக கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் எதிர்ப்புறத்தில் இருந்த வீடே பதிவு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக சிறீலங்கா குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தால் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஆகக்குறைந்தது பதினான்கு நாட்களாவது எடுப்பதுண்டு. ஆனால் வன்னியை நிரந்தர முகவரியாகக் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் கடுமையான விசாரணைகளுக்குப் பின்னரே ஏற்றுக் கொள்ளப்படும். அதிலும் யுத்தம் நிறைவடைந்த இறுதி நாட்களில் வன்னியை விட்டு வெளியேறி ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்த ஒருவரது கடவுச்சீட்டு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுவது என்பது சாதாரண விடயம் அல்ல. ஆனால் சிரஞ்சீவி மாஸ்டரின் விடயத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

 

ஏனென்றால் சிரஞ்சீவி மாஸ்டரின் கடவுச்சீட்டு விண்ணப்பத்தைக் கையாண்டவர் சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறையின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில காமினி ஹெந்தவிதாரண. 02.06.2009 அன்று ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமில் இருந்து பனாகொட படையப் புலனாய்வுத்துறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டரிடம் அவருக்கான கடவுச்சீட்டு 09.06.2009 அன்றே சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் கையளிக்கப்பட்டது. அதாவது அவரது கடவுச்சீட்டு ஒரு வாரத்திற்குள் அவரது கைகளில் தவழ்ந்தது.

 

N2347394 என்ற எண்ணுடைய கடவுச்சீட்டில் 09.06.2009 அன்று நள்ளிரவு பண்டாரநாயக்கா (கட்டுநாயக்கா) பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா நோக்கிப் புறப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டர், மறுநாள் காலை கோலாலம்பூரை சென்றடைந்த பொழுது, அங்குள்ள ஜலான் கிளாங்க் லாமா (Jalan Klang Lama) எனும் பகுதியில் அமைந்திருக்கும் பேர்ள் பொயின்ற் கொண்டோ (Pearl Point Condo) என்ற கட்டிடத் தொகுதியில் அவர் தங்குவதற்கு சிறீலங்கா தேசியப் புலனாய்வுத்துறையின் முகவரான நோர்வேயில் வசிக்கும் கமல் என்றழைக்கப்படும் கமலசிங்கம் அருணகுலசிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.

 

அங்கிருந்து தான் வெளிநாடுகளில் தங்கியிருந்த போராளிகள், செயற்பாட்டாளர்களுடன் சிரஞ்சீவி மாஸ்டர் தொடர்பை ஏற்படுத்தினார்.

..........

 

பிரித்தானியாவில் தனது சொந்தப் பெயரிலும், பினாமிகளின் பெயர்களிலும் பல்வேறு வணிக நிறுவனங்களை நடாத்தி வரும் கே.பி.ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிறேமரெஜி, தனது பினாமிகளில் ஒருவரைப் பயன்படுத்தி 2015ஆம் ஆண்டு தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம் (பெயரைக் கூர்ந்து கவனிக்கவும்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அல்ல. தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம்) என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்தார் என்று கடந்த தொடரில் குறிப்பிட்டிருந்தோம். இது சிங்கள அதிபராக மைத்திரிபால சிறீசேன பதவியேற்ற பின்னர் நடந்த ஒன்று. 2009 வைகாசி 18இற்குப் பின்னர் தமிழீழ தாயகத்தில் எவ்வித மனிதநேயப் பணிகளையும் முன்னெடுக்காத தமிழர் புனர்வாழ்வுக் கழகம், திடீரென 14.07.2015 அன்று சிறு பெயர் மாற்றத்துடன் பிரித்தானியாவில் ஏன் வணிக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது என்ற கேள்வி வாசகர்களிடையே எழலாம். இதற்கான பதில் அதிர்ச்சிகரமானது. ஆனால் அதற்கு முன்னர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரையும், அதன் உப அமைப்பான வெண்புறா நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தி எவ்வாறான தில்லு முள்ளுகளை பிரித்தானியாவில் கே.பி.ரெஜி அவர்கள் புரிந்தார் என்பதை நாம் இங்கு பதிவு செய்வது அவசியமாகின்றது.  

TRO

கே.பி.ரெஜி அவர்கள் பிரித்தானியாவிற்கு முதன் முதலில் வருகை தந்தது 2004ஆம் ஆண்டின் நடுப்பகுதியில். அப்பொழுது பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறக்கட்டளை அமைப்பாக செயற்பட முடியாத வகையில் அதன் மீது பிரித்தானிய அறக்கட்டளை ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மறுமுக அமைப்பாக வெண்புறா நிறுவனமே பிரித்தானியாவில் இயங்கி வந்தது.

 

பிரித்தானியாவை கே.பி.ரெஜி சென்றடைந்ததும் செய்த முதல் வேலை வெண்புறா நிறுவனத்தின் பெயரில் இலண்டன் ரூட்டிங்க், மிற்சம் ஆகிய பகுதிகளில் கட்டிடங்கள் சிலவற்றை வாங்கியது தான். இவை அனைத்தும் 2009 வைகாசி 18இற்குப் பின்னர் கே.பி.ரெஜியால் விற்பனை செய்யப்பட்டன. அவற்றின் விற்பனையால் கிடைக்கப்பெற்ற இலாபப் பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை எவருக்கும் தெரியாது.

Regi
கே.பி.ரெஜி

 

இதேபோன்று கிளிநொச்சி முறிகண்டிப் பகுதியில் மிலேனியம் சிற்றி (புத்தாயிரம் நகர்) உருவாக்கப்பட இருப்பதாகவும், அதில் பங்குதாரராக இணையுமாறும் பிரித்தானியாவில் உள்ள வணிகர்களுக்கு ஆசைவார்த்தை காட்டிப் பெரும் தொகைப் பணத்தை கே.பி.ரெஜி திரட்டினார். இப்பணத்திற்கு என்ன நடந்தது என்று இதுவரை எவருக்கும் தெரியாது.

 

அத்தோடு கே.பி.ரெஜி நின்று விடவில்லை. தனது பினாமிகளில் ஒருவரான மருத்துவர் புவியின் பெயரில் தமிழர் நலவாழ்வுக் கழகம் என்ற பெயரில் அறக்கட்டளை அமைப்பு ஒன்றைத் தொடங்கிப் பணம் திரட்டினார். அந்தப் பணத்திற்கும் என்ன நடந்தது என்று இதுவரை எவருக்கும் தெரியாது.

 

இவற்றின் உச்சகட்டமாக 2005ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 8ஆம் நாளன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றைக் கே.பி.ரெஜி பதிவு செய்தார். அந் நிறுவனத்தை வைத்து கே.பி.ரெஜி என்ன செய்தார் என்றோ, அதன் பெயரில் கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்றோ எவருக்கும் தெரியாது. ஆனால் அந் நிறுவனம் 2011ஆம் ஆண்டில் திடீரென இழுத்து மூடப்பட்டது. ஆனால் அதே நிறுவனத்தின் பெயரை ஒத்த, இரண்டு எழுத்து வித்தியாசங்களுடைய, தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம் என்ற நிறுவனத்தையே தனது பினாமி ஊடாக 14.07.2015 அன்று கே.பி.ரெஜி அவர்கள் பதிவு செய்துகொண்டார்.

..........

Ravi
சு.ரவி

 

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, அதனைத் தனது பிடியில் சிக்கியிருந்தவரை ஏற்க வைப்பதற்கு கே.பி செய்த பகீரத பிரயத்தனங்கள் அத்தோடு முடிந்து போய்விடவில்லை. இன்றும் கே.பியின் முயற்சிகளை அன்று கே.பியோடு மலேசியாவில் தங்கியிருந்தவரும், தற்பொழுது சுவிற்சர்லாந்தில் வசித்து வருபவரான தயாமோகன் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார். இவரது பின்புலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான பசீர் காக்கா, விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சு.ரவி ஆகியோர் இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றன்று. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு (13.11.2018)

 

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21