ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 23

வியாழன் டிசம்பர் 06, 2018

இரட்டை முகவர்களிடம் வாய்விட்டுச் சிரித்த கோத்தபாய
- கலாநிதி சேரமான்

 

கே.பியுடனான வாக்குவாதம் முற்றிக் கொண்டு செல்ல, அவரது பிடியில் சிக்கியிருந்தவர் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ரியூன் ஹொட்டேல் விடுதிக்கு தன்னை அழைத்துச் செல்வதற்கு வாகனம் வரும் என்று கே.பி குறிப்பிட்ட நேரம் கடந்திருந்தது. வாகனமும் வந்து சேர்வதாக இல்லை.

 

அப்பொழுது மீண்டும் கே.பி பேசத் தொடங்கினார்: ‘நீங்கள் ஒரு விசயத்தை விளங்கிக் கொள்ளுங்கோ. களத்தில் நிற்கிற போராளிகள் எல்லோரும் எனது தலைமையைத் தான் ஏற்று நிற்கீனம். ஆயுதப் போராட்டம் இனிச் சாத்தியமில்லை என்பது தான் அவையின்ரை நிலைப்பாடு. நாங்கள் இப்ப செய்ய வேண்டியது அரசாங்கத்திட்டை சரணடைந்த போராளிகளுக்கு விடுதலைப் பெற்றுக் கொடுத்து அவையளை குடும்பத்தோடு இணைக்கிறதும், காட்டுக்குள் நிற்கின்ற போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஒழுங்கு செய்கிறதும் தான். அரசியல் தீர்வு பற்றி நாங்கள் பிறகு உலக நாடுகளின் உதவியோடு பேசிக்கொள்ளலாம்.’
 

ஒட்டகம் கூடாரத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியில் வந்து கொண்டிருப்பதைக் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரால் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாக மழுங்கடிக்க வைப்பது தான் கே.பியின் நோக்கம் என்பது அக்கணத்தில் பட்டவர்த்தனமாகிக் கொண்டிருந்தது. கே.பி தொடர்ந்து பேசினார்:

 

‘தலைவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது பிரச்சினை இல்லை. கடைசிக் கட்டத்தில் தலைவர் எப்படியான திட்டங்களோடு இருந்தார் என்பது எல்லாம் எனக்கு முழுசாகத் தெரியாது என்று நீங்கள் சொல்கிறதும் உண்மை தான். ஆனால் என்னோடு நெருங்கின தொடர்பில் இருந்த போராளிகள் என்னிடம் உறுதிப்படுத்தினவையள். அதை விட தலைவர் பிரபாகரன் இல்லாத தமிழரின் அரசியலைத் தான் உலகம் விரும்புகின்றது. தலைவர் பிரபாகரன் இருக்கின்றார் என்று நான் தமிழ்நெற்றுக்கு 18ஆம் திகதி பேட்டி கொடுத்தது பிழை என்று என்னிடம் நோர்வே இராஜதந்திரிகள் சொன்னவையள். நான் அப்படிச் சொன்னால், அது எந்தப் பயனையும் தராது, புலிகளுக்குப் பின்னரான அரசியலைத் தான் இந்தியாவும், அமெரிக்காவும் விரும்புகின்றது என்று சொன்னவையள். இந்தச் செய்தி தான் எனக்கு எம்.கே.நாராயணனிடம் இருந்தும் வந்தது.’

 

KP

 

தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதில் ஏன் கே.பியும், அவரது கையாட்களான தயாமோகன், ராம், நகுலன் போன்றோர் தீவிரமாக இருக்கின்றார்கள் என்பது கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவருக்கு நன்கு புரிந்தது. தமிழீழத் தேசியத் தலைவருக்கு என்ன நடந்தது என்றோ, எப்படியான திட்டங்களோடு இறுதி யுத்தத்தில் தலைவர் அவர்கள் காய்களை நகர்த்தினார் என்றோ தெரியாமல், தாம் தொடர்பில் இருந்த வல்லாதிக்க நாடுகளின் இராஜதந்திரிகளையும், கொள்கை வகுப்பாளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே தலைவரின் இருப்பை கே.பியும், அவரது ஆட்களும் மறுதலிக்கின்றார்கள் என்பதை அவரது பிடியில் சிக்கியிருந்தவரால் ஐயம்திரிபறப் புரிந்து கொள்ள முடிந்தது.

 

..........

 

பிரித்தானியாவில் பல்வேறு பெயர்களில், பல்வேறு வணிக நிறுவனங்களைக் கே.பி.ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிறேமரெஜி அவர்கள் நடத்தி வருவது பற்றிய ஆதாரங்களை கடந்த தொடரில் வெளிக்கொணர்ந்திருந்தோம். அதிலும் 2015ஆம் ஆண்டு தை மாதம் சிங்கள அதிபராக மைத்திரிபால சிறீசேன பொறுப்பேற்றதும் தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் வணிக நிறுவனம் ஒன்றை கே.பி.ரெஜி பிரித்தானியாவில் பதிவு செய்திருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

 

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் சென்னையில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உருவாக்கப்பட்ட நாள் முதல் பிரித்தானியாவில் அது ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பாகவே இயங்கி வந்தது. எனினும் 2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அவ் அமைப்பிற்கு எதிராக பிரித்தானிய அறக்கட்டளை ஆணையத்திடம் பிரித்தானிய பிரபுக்கள் சபை உறுப்பினரான ஏவ்பரி என்பவர் முறைப்பாடுகளைப் பதிவு செய்ததை அடுத்து, அதன் மீதான விசாரணைகளைத் தொடங்கிய அறக்கட்டளை ஆணையம், இலண்டன் வோல்த்தம்ஸ்ரோ பகுதியில் இயங்கிய அதன் செயலகத்தை 26.10.2000 அன்று முற்றுகையிட்டு அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றியதோடு, வங்கிக் கணக்கையும் முடக்கியது.

 

மறைந்த ஏவ்பரி பிரபு அவர்கள் இலண்டனில் இயங்கும் சிறீலங்கா தூதரகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவர். அவர் வெள்ளையினத்தவராக விளங்கினாலும், பௌத்த மதத்தைத் தழுவியவர் என்பதால், அவருக்கு சிங்கள பௌத்தர்கள் மீது ஒரு பற்றுதல் இருந்தது.

 

சிறீலங்கா தூதரகத்தின் தூண்டுதலில், ஏவ்பரி பிரபு அவர்கள் மேற்கொண்ட முறைப்பாடு பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு சொந்தமான சில இலட்சம் பவுண்கள் பிரித்தானிய அறக்கட்டளை ஆணையகத்தால் கையகப்படுத்தப்படுவதற்கு வழிகோலியதோடு, அவ் அமைப்பு ஒரு அறக்கட்டளை அமைப்பாக இயங்க முடியாத சூழலையும் தோற்றுவித்தது. இதனையடுத்து அவ் அமைப்பின் செயற்பாடுகளை வெண்புறா என்ற இன்னுமொரு நிறுவனம் பொறுப்பேற்றது.

 

அப்படியிருந்த பொழுதும் 2004ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவிற்கு வருகை தந்ததும் கே.பி.ரெஜி செய்த வேலைகளில் முக்கியமானது மீளவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை பிரித்தானியாவில் ஒரு அறக்கட்டளை அமைப்பாக இயங்க வைப்பது தான். ஆனாலும் அது சாத்தியமாகாது போக, 08.11.2005 அன்று ஒரு வணிக நிறுவனமாகத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை கே.பி.ரெஜி பதிவு செய்து கொண்டார்.

 

இது ஏனைய மேற்குலக மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து தனது பினாமிகளின் கட்டுப்பாட்டில் பிரித்தானியாவில் இயங்கிய வங்கிக் கணக்கிற்குப் பெரும் தொகைப் பணத்தை கே.பி ரெஜி தருவிப்பதற்கு வழிகோலியது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்ததும் சிறிது காலத்திற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் இவ் வணிக நிறுவனத்தை இயக்கி வந்த கே.பி.ரெஜி, பின்னர் பிரித்தானியாவில் ஏற்படக் கூடிய வரியிறுப்பு அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு 2011ஆம் ஆண்டில் அந் நிறுவனத்தை இழுத்து மூடினார். அவ்வாறு மூடப்பட்ட நிறுவனத்தை 14.07.2015 தமிழர்கள் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் மீண்டும் கே.பி.ரெஜி திறந்ததற்குக் காரணம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரில் ஆங்காங்கே வெளிநாடுகளில் முடங்கிக் கிடந்த மேலும் ஒரு தொகை நிதியைப் பிரித்தானியாவிற்குத் தருவிப்பது தான்.

 

arjuna

 

தவிர சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த கே.பி.ரெஜியின் வலது கையான அர்ஜுனன் எதிர்வீரசிங்கம் என்பவர் வழங்கிய ஆலோசனை காரணமாகவும் இப் புதிய வணிக நிறுவனத்தைக் கே.பி.ரெஜி திறந்தார் என்றும், இவ் வணிக நிறுவனத்தின் ஊடாக இலங்கையில் முடங்கியிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களில் ஒரு தொகுதியை பிரித்தானியாவிற்குத் தருவிப்பது கே.பி.ரெஜியின் இன்னுமொரு நோக்கமாக இருந்தது என்றும் அவருக்கு நெருக்கமானவர்களால் பின்நாட்களில் தெரிவிக்கப்பட்டது.

 

..........

 

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் ஜலான் கிளாங் லாமா பகுதியில் தனது நடவடிக்கைத் தளத்தை அமைத்ததும் அங்கிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் தொடர்பை ஏற்படுத்தியது ஆசிய நாடுகளில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய புலனாய்வுத்துறையைச் போராளிகள் மற்றும் முகவர்களுடன். தனக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தித் தான் மலேசியாவிற்குத் தப்பி வந்து விட்டதாகவும், கொழும்பில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளைச் செய்வதற்குத் தனக்கு உதவி தேவைப்படுவதாகவும் கூறியே வெளிநாடுகளில் தங்கியிருந்த போராளிகள் மற்றும் முகவர்களுடன் சிரஞ்சீவி மாஸ்டர் அவர்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சிரஞ்சீவி மாஸ்டருடன் தொடர்பை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களாகத் தம்மை அடையாளம் காட்டியோரில் சிலர் சிங்கள ஊடகவியலாளர்கள். இன்னும் சிலர் தென்னிலங்கை ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்கள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமான முகவர்களாகத் தம்மைத் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அடையாளப்படுத்திச் செயற்பட்டாலும், இவர்கள் உண்மையில் சிறீலங்கா தேசியப் புலனாய்வுத்துறை மற்றும் படையப் புலனாய்வுத்துறைக்கு விசுவாசமான முகவர்கள். அதாவது புலனாய்வு உலகில் இரட்டை முகவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். இப்படியானவர்கள் எதிரெதிர் புலனாய்வு நிறுவனங்களின் முகவர்களாகப் பணிபுரிவார்கள். ஆனால் ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள்.  

 

இப்படியான இரட்டை முகவர்கள் ஊடாக, மலேசியாவில் சிரஞ்சீவி மாஸ்டர் தங்கியிருந்த செய்தி சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில காமின ஹெந்தவிதாரணவினதும், பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்சவினதும் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுது, இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்களாம்.

 

dbs
டி.பி.எஸ்.ஜெயராஜ்

 

ஆனால் அதற்குள் கனடாவில் வசிக்கும் டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற பத்தி எழுத்தாளரின் காதிற்கு விடயம் செல்ல, அவர் சிரஞ்சீவி மாஸ்டர் பற்றி கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகையில் புலனாய்வுக் கட்டுரை ஒன்றை எழுத முற்பட்டிருக்கின்றார். அந்தோ பாவம், அக்கட்டுரை வெளிவருவதற்கு முன்னர் அது சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட, அக்கட்டுரையில் சிரஞ்சீவி மாஸ்டர் பற்றிய தகவல்களை மட்டும் தணிக்கை செய்யுமாறு டெய்லி மிரர் ஆசிரியர் பீடத்திற்கு உடனடியாகவே பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.  

 

இதனை டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களும் சரி, டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் பீடமும் அவ்வேளையில் எதிர்பார்க்கவில்லை என்ற கூறவேண்டும்.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு (27.11.2018)

 

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22