ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 24

வெள்ளி டிசம்பர் 21, 2018

பேசச் சென்ற தலைவர் பிரபாகரனை கொல்ல உத்தரவிட்ட ராஜீவ் காந்தி
- கலாநிதி சேரமான்

 

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் வியந்து பார்க்கும் வகையிலும், வல்லாதிக்க சக்திகள் திகைத்து நிற்கும் விதத்திலும் ஈழத்தீவில் தேச சுதந்திரப் போராட்டத்தை நடத்திய வீரம்செறிந்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும். 1983 கறுப்பு ஆடி இனவழிப்பிற்குப்; பின்னர் சிறிது காலத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்தியா உதவி புரிந்தாலும், அதுவொரு மட்டுப்படுத்தப்பட்ட உதவியாகவே அமைந்தது. அதுவும் இந்திய – புலிகள் யுத்தத்தோடு முற்றுப்பெற, ஏறத்தாள இருபத்திரண்டு ஆண்டுகளாக எந்தவொரு நாட்டினதும் உதவியுமின்றித் தனது சொந்த மக்களின் உதவியுடன் மட்டும் ஆயுதப் போர் புரிந்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும்.

 

1978ஆம் ஆண்டு முதல் ஏறத்தாள இருபத்தெட்டு ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராகவும், அரசியல் ஆலோசகராகவும், தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் திகழ்ந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் போரும் சமாதானமும் என்ற தனது நூலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றை பின்வருமாறு பதிவு செய்கிறார்:

 

‘விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம். தமிழரது சுயநிர்ணயப் போராட்டத்திற்கு உயிர் மூச்சாகவும் உந்து சக்தியாகவும் அது செயற்பட்டு வருகிறது. ஒரு தேச விடுதலை இயக்கம் என்ற ரீதியில், ஒரு அரசியல் சக்தியாகவும், அதேவேளை ஒரு வலுமிக்க போரியல் சக்தியாகவும், புலிகள் இயக்கம் விடுதலைப் போரை முன்னெடுத்து வருகிறது. ஒரு உறுதியான, கட்டுப்பாடு மிக்க தலைமை, ஒரு தெளிவான, நீதியான அரசியல் இலட்சியம், நீண்ட கால வளர்ச்சியில் முதிர்ச்சி பெற்ற போராட்ட வரலாற்று அனுபவம், பரந்துபட்ட பொது சனத்தின் பலம் மிக்க ஆதரவு - இத்தனை பண்புகளையும் உடைய எமது விடுதலை இயக்கம், தமிழர் தாயகத்தின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அங்கு ஒரு நிழல் அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறது.

 

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு நீண்டதுÉ தனித்துவமானதுÉ புரட்சிகரமானது. முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீட்சிபெற்ற படிநிலை வளர்ச்சியைக் கொண்;டது. எழுபதுகளின் ஆரம்பத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களால் ஒரு தலைமறைவு கெரில்லா அணியாக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம், காலப் போக்கில் படிப்படியாக வளர்ச்சி பெற்று, வலுவடைந்து, விரிவடைந்து, தமிழ் மக்களின் நல்லாதரவு பெற்று, ஒரு தேசிய விடுதலை இயக்கமாக உருவாக்கம் எடுத்தது. இந்த நீண்ட பரிணாம வளர்ச்சிப் போக்கில், விடுதலைப் புலிகள் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டனர். தமிழின அழிப்பை நோக்காகக் கொண்ட எதிரியை ஒரு புறத்திலும், தமிழரின் சுதந்திர எழுச்சியை நசுக்கிவிட முனைந்த வல்லாதிக்க சக்திகளை மறுபுறத்திலும், தமிழினத்தின் விடுதலைப் போருக்கு வஞ்சகம் புரிந்த துரோகிகளை இன்னொரு புறத்திலுமாக, எமது இயக்கம் பல முனைகளில் பல சக்திகளுக்கு எதிராகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது. இப் போராட்டங்கள் பெரும் சமர்களாகவும் வெடித்தன. வன்முறைப் புயல்களாக எழுந்து ரண களங்களை ஏற்படுத்தின. இந்த நெருப்பு நதிகளை எல்லாம் எமது இயக்கம் நெஞ்சுறுதியுடன் நீந்திக் கடந்தது.’

 

தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது எப்படியான அமைப்பு என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த மேற்கோள் போதுமானது. அப்படிப்பட்ட ஒரு வீரம்செறிந்த தேச சுதந்திர இயக்கத்தை, வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடும் ஒரு காகிதப்புலி அமைப்பாக மாற்றியமைப்பதுதான் 2009 வைகாசி 18இற்குப் பின்னரான சூழமைவில் சிங்கள - இந்திய ஆட்சியாளர்களின் நிகழ்ச்சித் திட்டமாக இருந்தது: இப்பொழுதும் உள்ளது.

 

இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியாகவே ஒப்ரேசன் டபிள் எட்ஜ் என்ற எதிர்ப்புரட்சி நடவடிக்கையை 18.09.2009 அன்று தமிழீழ தாயகத்தை ஆக்கிரமித்ததும் சிங்கள பாதுகாப்புத்துறைச் செயலராக விளங்கிய கோத்தபாய ராஜபக்ச தொடங்கி வைத்தார்.

 

அக்காலப் பகுதியில் புலம்பெயர் தேசங்களில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்குள் இருந்த அதிருப்தியாளர்களை இனம்கண்டு அக்கட்டமைப்புக்களுக்குள் குழப்பம் விளைவித்தல், இறுதி யுத்தத்தில் சரணடைந்து சக போராளிகளைக் காட்டிக் கொடுத்த முன்னாள் போராளிகளைப் புலம்பெயர் தேசங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களின் மூலம் அக்கட்டமைப்புக்களுக்குள் ஆழ ஊடுருவல்களை மேற்கொள்ளுதல் அல்லது அக்கட்டமைப்புக்களுக்குள் உள்ள அதிருப்தியாளர்களைக் கவர்ந்திழுந்து போட்டிக் கட்டமைப்புக்களை உருவாக்குதல், தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்களை உருவாக்கி, அவற்றின் சிலந்தி வலைக்குள் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை சிக்க வைத்தல், வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை இனம்கண்டு அவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல், தாயகத்தில் அல்லது வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கக் கூடிய போர்க்குணம் மிக்க போராளிகளையும், ஆதரவாளர்களையும் இனம்கண்டு அவர்களைக் கொல்லுதல் அல்லது சிறைப்பிடித்தல் என்று அப்பொழுது சிங்களம் வகுத்த மூலோபாயங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

 

சிங்களத்தின் மூளையத்தில் உதித்த இந்த மூலோபாயங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தவர்களில் அக்காலப் பகுதியில் முதன்மையானவராகத் திகழ்ந்தவர் கே.பி அவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் 21.07.2009 அன்று மலேசியாவில் வைத்து காகிதப்புலிக் கட்டமைப்பை கே.பி உருவாக்கினார். இக் காகிதப்புலிக் கட்டமைப்பை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் இருவர்: ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தென்தமிழீழத் தளபதியாகத் திகழ்ந்த ராம் என்றழைக்கப்படும் எதிர்மன்னசிங்கம் ஹரிச்சந்திரன். மற்றையவர் சுரேஸ் அல்லது அமுதன்.

 

கே.பியைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிமுகம் செய்து வைத்து ராம் அறிக்கை வெளியிட்ட பொழுது அவர் பொலனறுவை மாவட்டம் மின்னேரியா பகுதியில் இயங்கிய சிங்களப் படைகளின் வனப்பாசறை ஒன்றில் தங்கியிருந்தார். சிங்களப் படையப் புலனாய்வுத்துறையின் கீழ் ராம் அவர்கள் இயங்கியதால், அவரது இணைப்பாளராக சில மைல்கள் தொலைவில் உள்ள கிரிதல வனப்பகுதியில் இயங்கிய போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாமின் மேலாளரான லெப்.கேணல் சாமி கருணாரட்ண என்ற சிங்களப் படையப் புலனாய்வுத்துறை அதிகாரியே விளங்கினார். இச் சிங்களப் படை அதிகாரியின் கட்டுப்பாட்டிலேயே சிறிது காலம் தவேந்திரன் எனப்படும் சுமதிபால சுரேஸ்குமார் என்ற முன்னாள் போராளியும் இயங்கினார்.

 

Ram
ராம்

 

ராம் அவர்களுடன் இணைந்து அவ் அறிக்கையை வெளியிட்ட சுரேஸ் என்றழைக்கப்படும் அமுதன் அவர்கள் அப்பொழுது தங்கியிருந்தது சென்னையில். அதாவது இந்தியாவின் கியூ பிரிவு காவல்துறையினர் தன்னைக் தேடிக்கொண்டிருப்பதாக அயலில் உள்ளவர்கள் எல்லோரும் கேட்கும் வகையில் தொலைபேசியில் கூறிக் கொண்டு, சென்னையில் சுதந்திரமாக நடமாடியவர் இந்த சுரேஸ் என்றழைக்கப்படும் அமுதன் அவர்கள். அதாவது, எவ்வாறு சிங்களப் படையப் புலனாய்வுதுறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தவாறு கே.பியைத் தலைவராகக் கொண்ட காகிதப் புலிக் கட்டமைப்பை ராம் அறிமுகம் செய்து வைத்தாரோ, அவ்வாறே இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவாறே அதே நாடகத்தை அமுதனும் அரங்கேற்றினார்.

 

Suresh
சுரேஸ் (அமுதன்)

 

இப்பொழுது வாசகர்களுக்கு ஓர் உண்மை பட்டவர்த்தனமாகியிருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் கே.பியைத் தலைவராகக் கொண்ட காகிதப்புலிக் கட்டமைப்பை உருவாக்கியது இந்திய – சிங்கள புலனாய்வு நிறுவனங்களே.

 

கே.பி, ராம், விநாயகம், சுரேஸ் (அமுதன்), சுபன் என்று இக்காகிதப்புலிக் கட்டமைப்புக்களின் தலைவர்கள் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மாறி உள்ளார்களே தவிர இவர்களை இயக்கும் அரூப கரங்கள் மாறவில்லை.

 

..........

 

ராஜீவ் காந்தியைப் புனிதராக்கித் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில் கடந்த 01.12.2018 அன்று சுவிற்சர்லாந்தில் இருந்து காகிதப்புலிக் குழுவொன்றால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இவ் அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் இரண்டு பேர். ஒருவரது பெயர் லதன் சுந்தரலிங்கம். மற்றையவரின் பெயர் குருபரன் குருசாமி. முதலாவது நபர் தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டத்துறைப் பிரதிநிதி என்றும், இரண்டாவது நபர் தன்னைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பிரதிநிதி என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

 

Lathan-Guru
குருபரன் குருசாமி மற்றும் லதன் சுந்தரலிங்கம்

 

இவர்கள் இருவருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இல்லை. ஆனாலும் இரண்டு பேருமே தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்கள். இவர்களில் லதன் சுந்தரலிங்கம் என்பவர் 1988ஆம் ஆண்டிலேயே சுவிற்சர்லாந்துக்கு வந்து விட்டார். குருபரன் குருசாமி அவர்கள் பிறந்ததோ 1990ஆம் ஆண்டு. அதாவது குண்டுவெடிப்பொன்றில் 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பொழுது குருபரனுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை.

 

சரி, இவர்களின் தனிப்பட்ட வாழ்வுப் பின்னணி ஒருபுறம் இருக்கட்டும்.

 

அப்படியே ராஜீவ் காந்தியை யார் கொன்றார்கள் என்ற ஆராய்ச்சிகளையும் விட்டு விடுவோம். அது பற்றிக் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாகப் பலர், பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து, பல்வேறு கதைகளைக் கிளப்பி வரும் நிலையில், நாமும் எமது பங்கிற்குக் குட்டையைக் கிளறத் தேவையில்லை.

 

ஆனால் ராஜீவ் காந்தியைப் புனிதராக்கும் வகையில் தமது காகித அறிக்கையில் இவர்கள் இணைத்திருக்கும் சொல்லாடல் பற்றிய எமது விமர்சனத்தை இங்கு நாம் பதிவு செய்ய வேண்டியது அவசியமானது.

 

Rajiv-Pirapaharan

 

தமது காகித அறிக்கையில் ராஜீவ் காந்தியின் பெயரைக் குறிப்பிடும் பொழுது ‘மாண்புமிகு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி’ என்று இவர்கள் விளித்துள்ளார்கள். இந்தியப் படைகளை ஏவி விட்டுப் பத்தாயிரம் தமிழ் உயிர்களை நரபலி வேட்டையாடியவர் ராஜீவ் காந்தி. இந்தியப் படைகளை ஏவி விட்டுப் பல்லாயிரம் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவரும் இதே ராஜீவ் காந்திதான். பட்டினிப்போர் புரிந்த ஈகச்சுடர் லெப்.கேணல் திலீபன் துடிதுடித்துச் சாக இடமளித்தவரும் ராஜீவ் காந்தி தான். அது மட்டுமா? ஈகச்சுடர் திலீபனின் பட்டினிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது, இது பற்ற பலாலி படைத்தளத்திற்கு ஜே.என்.டிக்சிட் அவர்களுடன் பேசச் சென்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைக் கொன்று விடுமாறு இந்தியப் படைகளுக்குக் கட்டளை பிறப்பித்தவரும் ராஜீவ் காந்தி தான்!

 

Harkrit Singh

 

இது பற்றி ‘இலங்கையில் தலையீடு: இந்திய அமைதிப் படைகளின் அனுபவங்களை மீளப்பதிவு செய்தல்’ (Intervention in Sri Lanka: the IPKF Experience Retold) என்ற தலைப்பின் கீழ் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலில், அப்பொழுது இலங்கைக்கான இந்தியப் படைகளின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் ஹாக்கிரட் சிங் விரிவாக பதிவு செய்துள்ளார். 15.09.1987 அன்று ஈகச்சுடர் லெப்.கேணல் திலீபன் பட்டினிப்போரில் குதித்ததை அடுத்து அது பற்றி அன்று பிற்பகல் அப்போதைய இந்தியத் தூதுவராக விளங்கிய ஜே.என்.டிக்சிட் அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் பலாலி வான்படைத் தளத்தில் அமைந்திருந்த இந்தியப் படைகளின் தலைமையகத்திற்கு மறுநாள் இரவு பேச வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அங்கு சென்ற தலைவர் பிரபாகரன் அவர்களைக் கொன்று விடுமாறு ஜே.என்.டிக்சிட் ஊடாக அன்று இரவு ராஜீவ் காந்தி பணித்ததாகவும், ஆனாலும் அப் பணிப்பு முறையான பொறிமுறைகள் ஊடாக வராததால் தான் அதை நிறைவேற்றவில்லை என்றும் மேஜர் ஜெனரல் ஹாக்கிரட் சிங் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்:

 

‘இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்சிட் தலைமையில் 1987 புரட்டாசி 16-17 அன்று பலாலியில் உள்ள எனது தலைமையகத்தில் சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியது. 1987 புரட்டாசி 14-15 இரவு என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட டிக்சிட், சந்திப்பிற்கு வரும் பிரபாகரனைக் கைது செய்யுமாறு அல்லது சுட்டுக் கொல்லுமாறு கட்டளையிட்டார். எனது மேலாளரான எனது கட்டளைத் தளபதியுடன் பேசி விட்டு இது பற்றிப் பதில் தெரிவிப்பதாகக் கூறினேன். ஒரு மரபு இராணுவம் என்ற வகையில் நாம் ஒரு பொழுதும் வெள்ளைக் கொடியுடன் பேச வருபவர்களை முதுகில் சுட்டுக் கொல்வதில்லை என்று டிக்சிட்டிடம் கூறுமாறு அப்பொழுது எமது கட்டளைத் தளபதியாக விளங்கிய லெப்.ஜெனரல் தீபெந்தர் சிங் என்னிடம் பணித்தார். அதன் பின்னர் டிக்சிட்டுடன் நான் தொடர்பு கொண்டு அவரது பணிப்புரையை நிறைவேற்றப் போவதில்லை என்பதைத் தெரியப்படுத்தினேன். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திப்பிற்காக இந்திய அமைதிப் படையினர் அழைத்துள்ளார்கள் என்பதையும் நான் டிக்சிட்டிடம் சுட்டிக் காட்டினேன். அதற்கு டிக்சிட் கூறினார், “அவர் (ராஜீவ் காந்தி) என்னிடம் இந்தக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார். நான் சொல்கின்ற படி இராணுவம் கேட்க வேண்டும். நீர் அக்கட்டளையை நிறைவேற்றப் பொறுப்பேற்க வேண்டும்.” இந்தக் கட்டளை உண்மையில் எமது இராணுவக் கட்டளைச் சங்கிலித் தொடர் ஊடாக வந்திருந்து, அது நிறைவேற்றப்பட்டிருந்தால் வரலாறு வேறாக இருக்கும்.’

 

இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவரை முதுகில் சுட்டுக் கொன்று விடுமாறு கட்டளையிட்ட ராஜீவ் காந்தியை மாண்புமிக்கவராக விளிக்கும் சுவிற்சர்லாந்துக் காகிதப்புலிகள், தமது காகித அறிக்கையின் ஓரிடத்தில் மட்டும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்’ என்று விளிக்கின்றார்கள். தமது காகித அறிக்கையின் ஏனைய இடங்களில் தமிழீழ தேசியத் தேசியத் தலைவரை மொட்டையாகப் ‘பிரபாகரன்’ என்று மட்டும் விளிக்கின்றார்கள். இவர்களின் காகித அறிக்கையின் ஓரிடத்தில் கூடத் தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழீழத் தேசியத் தலைவர் என்று இவர்கள் குறிப்பிடவேயில்லை.

 

இதன் மூலம் இவர்களின் மட்டி அரசியலும், இவர்களை இயக்குவோரின் அரூப கரங்களும் மட்டும் அம்மணமாகி விடவில்லை. ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன் சிங்களம் தொடங்கிய ஒப்ரேசன் டபிள் எட்ஜ் எனும் எதிர்ப்புரட்சி நடவடிக்கையில் இந்தியாவின் பங்கும் பட்டவர்த்தனமாகின்றது.

 

..........

 

ராஜீவ் காந்தி ஒரு புனிதர் அல்ல என்பதற்கு, இந்தியப் படைகளை அனுப்பிப் பத்தாயிரம் தமிழ் உயிர்களை அவர் நரபலி வேட்டையாடியதும், அவரது படைகளால் பல ஆயிரம் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதும் மட்டும் சான்றுகள் அல்ல. தனது மெய் பாதுகாவலர்களால் இந்திரா காந்தி அம்மையார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மூவாயிரத்திற்கும் அதிகமான அப்பாவி சீக்கியர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கும், சீக்கியப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதற்கும் காரணமாக விளங்கியவரும் ராஜீவ் காந்தி தான்.

 

Rajiv

 

சீக்கியர்கள் மீதான இனப்படுகொலையில் முன்னணிப் பாத்திரம் வகித்த ஜெக்தீஸ் ரைற்லர் என்பவர் ராஜீவ் காந்தியின் நண்பர். இந்திரா காந்தி கொல்லப்பட்டதும், ராஜீவ் காந்தியை வாகனம் ஒன்றில் இவர் அழைத்துச் சென்ற இடங்களில் எல்லாம் பெரும் தொகையில் சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இவ்வாறு நூறு வரையான சீக்கியர்களைத் தான் மட்டும் கொன்றதாக ஜெக்தீஸ் ரைற்லரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Jagdish
ஜெக்தீஸ் ரைற்லர்

 

சீக்கியர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நானாவதி ஆணையம், ஜெக்தீஸ் ரைற்லரின் வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையையும் பின்னாளில் உறுதி செய்தது.

 

இது மட்டுமல்ல. இன்றும் சீக்கியர்களின் இதயங்களில் ஆறாத ரணமாக விளங்குவது இவ் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தி அன்று ராஜீவ் காந்தி பேசிய பேச்சுத்தான். சீக்கியர்கள் மீதான இனப்படுகொலைகள் ஓய்ந்ததும் பொதுமேடை ஒன்றில் ராஜீவ் காந்தி அலட்சியமாகக் கூறினார்: ‘ஆலமரம் விழும் பொழுது அருகில் உள்ள நிலம் அதிர்வது இயல்புதான்.’

 

ஆக இரண்டு இனங்களை அழித்த ராஜீவ் காந்தியை புனிதராக்குவதற்காக காகிதப்புலிகள் குத்திமுறிவதில் இருந்தே இவர்கள் எவ்விதமான நிகழ்ச்சித் திட்டத்துடன் இயங்குகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு (11.12.2018)

 

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23