ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 25

திங்கள் சனவரி 07, 2019

நேர்கோட்டில் சந்தித்த இந்திய உளவு நிறுவனங்கள்
- கலாநிதி சேரமான்

 

‘இயக்கத்தின் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதில் உங்கடை பங்கு என்ன?’

 

இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் திடீரென்று கேட்ட கேள்வி, கே.பியை ஆட்டம் காண வைத்திருக்க வேண்டும். முகம் சிவந்த நிலையில் சில வினாடிகள் தனது எதிரில் இருந்தவரை உற்றுப் பார்த்தார்.

 

முக்கோண வடிவில் போடப்பட்டிருந்த மூன்று ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்திருந்த இன்பம், கைகளைப் பிசைந்த வண்ணம் கே.பியையும், பின்னர் அவரது பிடியில் சிக்கியிருந்தவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

 

சில வினாடிகள் நிசப்தத்தின் பின் கே.பி பேசத் தொடங்கினார். அவரது குரலில் ஒரு விதமான பதற்றம் தென்பட்டது. அதனை மறைக்கும் வகையில் செயற்கையான கோபத்தை வரவழைத்தவாறே கே.பி பேசினார்:

 

‘கஸ்ரோவும், நெடியவனும் பரப்பின பொய்களை எல்லாம் நம்பி நீங்கள் என்னோடை விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்கிறியள்.’ இவ்வாறு கூறிவிட்டு திடீரென தனது பிடியில் இருந்தவரிடம் கே.பி கேட்டார்: ‘உங்களுக்கு பிரான்சில் இருக்கின்ற எங்கடை மனோவை தெரியுமோ?’

 

‘கேள்விப்பட்டிருக்கிறன்.’

 

இப்படி தனது பிடியில் சிக்கியிருந்தவர் தெரிவித்ததும் கே.பி கூறினார்: ‘உண்மை ஊரைச் சுற்றி வருவதற்குள் பொய் உலகத்தைச் சுற்றி வந்து விடும் என்று மனோ என்னோடு கதைக்கும் போது சொல்லுவான். அது வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக. ஆனால் நீங்கள் என்னட்டை கேட்ட கேள்வி அவன் சொல்கிறதைத் தான் எனக்கு இப்ப ஞாபகப்படுத்துகிறது.’

 

Mano

மனோ (வேலும்மயிலும் மனோகரன்)

 

ஆனால் கே.பியின் பிடியில் இருந்தவரோ விடுவதாக இல்லை.

 

‘உங்களை வன்னிக்கு வரச் சொல்லி 2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தலைவர் கேட்டவர். தாய்லாந்தை விட்டு வெளிக்கிட்டால் சி.ஐ.ஏ இன் ஆட்கள் தூக்குவாங்கள் என்று சொல்லி நீங்கள் போகவில்லை. வன்னிக்கு வர இருக்கிற கப்பலில் உங்களை வரச்சொன்னவர். பாதுகாப்பில்லை என்று சொன்னியள். கப்பலில் நீங்கள் ஏறவில்லை. ஆனால் உங்களை ஏற்றிக் கொண்டு வன்னிக்குப் போக இருந்த கடற்புலிகளின் கப்பல், உங்களை ஏற்றாமல் வன்னிக்குப் போகும் வழியில் மூழ்கடிக்கப்பட்டது. உங்கள் மேல் அதுக்குப் பிறகு தான் இயக்கத்துக்கு சந்தேகமே ஏற்பட்டது என்று வன்னியில் என்னை சந்தித்த தளபதிமார் சொன்னவையள்.’

 

LTTE Shipt

 

இப்பொழுது உரையாடல் காரசாரமான கட்டத்தை எட்டியிருந்தது. எள்ளும் கொள்ளும் வெடிக்க கே.பி பொரிந்து தள்ளத் தொடங்கினார்: ‘இதெல்லாம் அந்த நேரத்தில் ஆனந்தராஜா பரப்பின விசர்க் கதையள். நான் ஆனந்தராஜாவை நம்பியிருந்தனான். ஆனால் அவன் எனக்குத் தகடு வைச்சவன். பதவி ஆசையில் ஆனந்தராஜா பரப்பின கதைகள் இவை.’

 

‘நீங்கள் ஐயாவின் (ஆனந்தராஜாவின் இன்னொரு பெயர் ஐயா என்பதாகும். ஆனந்தராஜா அல்லது ஐயா என்றழைக்கப்படுபவர் முன்னர் கே.பியின் கீழ் பணிபுரிந்த ஒருவர்) மேல் பழி சொல்கிறியள். ஆனால் நடந்த சம்பவங்கள் எல்லாம் உங்களின் மேல் இயக்கம் சந்தேகப்படுகின்ற மாதிரித் தான் இருந்தது. உங்களுக்குக் கீழை இருந்த முழு நெற்வேர்க்கையும் (வலையமைப்பு) தலைவர் டிஸ்மன்ரில் (கலைத்தல்) பண்ணினவர். உங்களை பொறுப்பில் இருந்து விலக்கின பிறகு 2003 மே மாதம் அளவில் வெளிக்கிட்ட இன்னொரு கப்பலும் நேவியால் மூழ்கடிக்கப்பட்டது.’

 

உடனே குறுக்கிட்ட இன்பம் கூறினார்: ‘உங்களுக்குத் தெரியுமோ 2003ஆம் ஆண்டு பொறுப்பில் இருந்து விலகின பிறகும் கே.பி அண்ணையிட்டை இயக்கம் சில உதவிகள் கேட்டது என்று? கே.பி அண்ணையில் சந்தேகம் இருந்தால் ஏன் அவரிட்டை இயக்கம் உதவி கேட்க வேண்டும்?’

 

ஆனால் அடுத்தடுத்து இன்பம் கேட்ட இரண்டு கேள்விகளும் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரை நிலைகுலைய வைக்கவில்லை. சிரித்துக் கொண்டே அவர் கூறினார்: ‘நான் அறிஞ்ச அளவில் 2003ஆம் ஆண்டு இரண்டு ஆயுதக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்ட பிறகு உங்களிட்டை எந்த உதவியும் பெற வேண்டாம் என்று தலைவர் சொன்னவர். உங்கடை தொடர்பாளர்கள் ஊடாக வரும் எவரோடையும் கொள்வனவு விசயத்தில் தொடர்பே வைக்க வேண்டாம் என்று அண்ணை (தேசியத் தலைவர்) தன்னிடம் சொன்னவர் என்று கஸ்ரோவே என்னட்டை சொல்லியிருக்கிறார்.’

 

ஆப்பிழுத்த குரங்கின் கதையாக, நெற்றியில் வடிந்த வியர்வைத் துளிகளைத் துடைத்தவாறே கே.பி கூறினார்: ‘இதே கதையைத் தான் டொக்டர் முருகர் குணசிங்கத்திட்டையும் நெடியவன் சொன்னவன். இதே கேள்வியைத் தான் என்னோடை கதைக்கேக்குள்ளை அவரும் கேட்டவர். நான் அவருக்கு உண்மை என்ன எண்டதை விளங்கப்படுத்தினான். அதைப் புரிஞ்சு கொண்டு தான் இப்ப ஆள் வெளிக்கிட்டு இஞ்சை மலேசியாவுக்கு வருகிறார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கிறதில் முக்கியமான பொறுப்பை நாங்கள் அவருக்குக் கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறம்.’

 

அப்பொழுது கே.பியின் கைத்தொலைபேசி அலறியது.

 

..........

 

ஆசிய நாடுகளில் தங்கியிருந்த போர்க்குணம் மிக்க போராளிகள் மற்றும் தமிழின உணர்வாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தந்திரமாக வலையில் வீழ்த்திக் கொழும்புக்கு கொண்டு செல்வதற்காக மலேசியாவில் எவ்வாறு சிரஞ்சீவி மாஸ்டர் அவர்களை கோத்தபாய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் மேஜர் ஜெனரல் கபில காமினி ஹெந்தவிதாரண அனுப்பி வைத்தாரோ, அவ்வாறே இந்தியாவில் தங்கியிருந்த முன்னாள் போராளிகள் சிலரைத் தமது முகவர்களாக மாற்றி மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான முனைப்புக்களில் இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான ‘றோ’ நிறுவனம் மும்முரமாக இறங்கியிருந்தது. ஆனால் இது தன்னிச்சையாக ‘றோ’ மேற்கொண்ட நடவடிக்கை என்று கூற முடியாது.

 

சிங்களப் புலனாய்வு அமைப்புக்களான சிறீலங்கா தேசிய புலனாய்வுப் பணியகம், படையப் புலனாய்வுத்துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்தே இந் நடவடிக்கைகளை ‘றோ’ நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

 

இதில் இன்னுமொரு பக்கமும் இருந்தது. பொதுவாக ‘றோ’ நிறுவனமும், இந்திய உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி. (இன்ரெலிஜென்ற்ஸ் பீரோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புலனாய்வுப் பணியகம்) நிறுவனமும் பொதுவாக புலனாய்வு நடவடிக்கைகளில் அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்வதுண்டு. இந்தியப் பிரதம மந்திரியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் அமைப்பு என்ற வகையில், ஐ.பி நிறுவனத்தை விடக் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை விவகாரங்களில் அதிக செல்வாக்கை ‘றோ’ கொண்டிருந்தது இதற்கு ஒரு காரணம் எனலாம்.

 

ஆனால் சிங்களம் முன்னெடுத்த ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கைக்கு ஒத்திசைவாக இந்தியாவில் தங்கியிருந்த முன்னாள் போராளிகளை மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான முனைப்புக்களில் ‘றோ’ இறங்கிய பொழுது, அதற்கு ஐ.பி நிறுவனத்தின் முழு ஒத்துழைப்பும் கிடைத்தது. இதற்குக் காரணமும் ஐ.பி நிறுவனத்தின் முன்னாள் அதிபராகத் திகழ்ந்த எம்.கே.நாராயணன், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளையும், புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களையும் சிதைப்பதற்குப் பச்சைக் கொடி காட்டியிருந்தது தான். இந்தியப் பிரதமரின் கீழ் இயங்கும் அமைச்சர் அல்லாத ஆனால் அமைச்சருக்குரிய அதிகாரத்தைக் கொண்டவராக எம்.கே.நாராயணன் விளங்கியதும் இது விடயத்தில் அவரது சொல்லுக்கு ஐ.பி நிறுவனமும், ‘றோ’ நிறுவனமும் கட்டுப்பட்டமைக்கு இன்னொரு காரணம் எனலாம்.

 

அதாவது எமது முன்னைய தொடர்களிலும், தந்திரிகளின் மறுமுகம் (ஈழமுரசுலீக்ஸ்) என்ற தொடரிலும் நாம் ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்ந்தது போன்று எம்.கே.நாராயணனுடனும், ஐ.பி நிறுவனத்தின் முகவர்களுடனும் ஏலவே கே.பி மற்றும் விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் தொடர்புகளைப் பேணி வந்திருந்தனர். இந் நிலையில் தான் சிங்களப் புலனாய்வு அமைப்புக்களுடன் கூட்டிசைவாகப் புலம்பெயர் தேசங்களில் முன்னாள் போராளிகளைக் களமிறக்குவதற்கு இந்தியப் புலனாய்வு நிறுவனங்கள் ஆயத்தமாகிய பொழுது, அடுத்து நடக்கப் போவதைக் கட்டியம் கூறும் வகையில் ஈழமுரசு நிறுவனத்திற்கும், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் ஒரு பகிரங்க எச்சரிக்கையை கே.பியின் இன்னொரு வலதுகரம் என்று அறியப்பட்டவரான மனோ எனப்படும் வேலும்மயிலும் மனோகரன் என்பவர் மேற்கொண்டார். ‘நீங்கள் ஆடுங்கோ. கெதியில் அவங்கள் வருவாங்கள். அப்ப உங்களுக்கு இருக்குது’ என்று 2009 வைகாசி – ஆனி மாதங்களில் மனோ எச்சரித்தார்.

 

இவ்வாறு மனோ எச்சரிக்கை செய்து சில வாரங்களில் கே.பியைத் தலைவராகப் பிரகடனம் செய்து தலைமைச் செயலகம் என்ற காகிதப்புலிக் கட்டமைப்பை மின்னேரியாவில் சிங்களப் படைகளின் வனப்பாசறை ஒன்றில் தங்கியிருந்த ராம் என்றழைக்கப்படும் எதிர்மன்னசிங்கம் ஹரிச்சந்திரன் அவர்களும், இந்தியாவில் தங்கியிருந்த சுரேஸ் என்றழைக்கப்படும் அமுதன் என்பவரும் அறிமுகம் செய்தனர். இதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கே.பியின் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று விநாயகம் அல்லது அறிவழகன் என்றழைக்கப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி மேற்கொண்டார் (எவ்வாறு இவரது துணைவியாரைப் பணயக் கைதியாகப் பயன்படுத்தி இவரின் ஊடாகப் பல்வேறு குழப்பங்களை சிங்களப் புலனாய்வாளர்கள் முன்னெடுத்தார்கள் என்பதைக் கடந்த தொடர்களில் நாம் வெளிக்கொணர்ந்தமை வாசகர்களுக்கு நினைவில் இருக்கக்கூடும்).

 

இப்பொழுது மேற்குலக நாடுகளுக்கு இந்தியப் புலனாய்வாளர்களால் அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இருவரின் பக்கம் கவனத்தைத் திருப்புவோம். ஒருவர் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட சுரேஸ் என்றழைக்கப்படும் அமுதன். இவர் இந்தியாவில் இருந்து முதலில் பிரான்சுக்கும், பின்னர் அங்கிருந்து பிரித்தானியாவிற்கும் அனுப்பப்பட்டார்.

Sangethan
சங்கீதன் அல்லது தயாபரன் (அன்ரனி வெலிங்டன்)

 

அடுத்தவரது பெயர் சங்கீதன் அல்லது தயாபரன் என்றழைக்கப்படும் அன்ரனி வெலிங்டன். இவரது பின்னணி பலரை திடுக்கிட வைக்கக்கூடியது.

..........

 

தொலைபேசியில் உரையாடி விட்டுக் கே.பி திரும்பி வந்த பொழுது அவரது முகம் மலர்ந்த நிலையில் காணப்பட்டது. தனது துரோகச் செயல்கள் குறித்துத் தனது பிடியில் சிக்கியிருந்தவர் சற்று முன்னர் கேட்ட காரசாரமான கேள்விகளால் ஆடிப் போயிருந்த பழைய கே.பியாக அவர் தென்படவில்லை. உற்சாகமாக இன்பத்திடம் கே.பி கூறினார்:

Regi
கே.பி ரெஜி (காந்தலிங்கம் பிறேமரெஜி)

 

‘ரி.ஆர்.ஓ ரெஜி (தமிழர் புனர்வாழ்வுக் கழகம்) எங்களோடை சேர்ந்து இயங்க ஓம் என்று சொல்லியிருக்கிறாராம். விநாயகத்தின்ரை பெடியன் திரு இப்பத்தான் இலண்டனில் இருந்து போன் (தொலைபேசி) எடுத்துக் கதைச்சவன். விநாயகமும் கதைச்சதாம். தானும் கதைச்சதாம். ஆள் நெடியவன் குறுப்பை (குழு) விட்டு விலகி வருவதற்கு ஓம் என்றிட்டாராம்.’

 

இவ்வாறு இன்பத்திடம் கே.பி கூறினாலும், அது தனது காதிலும் விழ வேண்டும் என்பதில் கே.பி அவர்கள் குறியாக இருந்ததையும் அவரது பிடியில் சிக்கியிருந்தரால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு (25.12.2018)

 

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24