ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 26 

புதன் சனவரி 09, 2019

 

கே.பியின் ஆட்களைக் கடத்திச் சென்ற சி.ஐ.ஏ - கலாநிதி சேரமான்

 

தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளரான கே.பி.ரெஜி என்றழைக்கப்படும் காந்தலிங்கம் பிறேமரெஜியை நெடியவனிடம் இருந்து பிரித்தெடுத்து அவரைத் தனது அணிக்கு கொண்டு வருவதற்கு விநாயகம் அல்லது அறிவழகன் என்றழைக்கப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தியின் உதவியுடன் தான் எடுத்த முயற்சி வெற்றியீட்டிய மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த கே.பி அவர்களுக்கு, தனது பிடியில் சிக்கியிருந்தவருடன் சில நிமிடங்களுக்கு முன்னர் தான் நடத்திய காரசாரமான வாக்குவாதம் மறந்து போயிருந்தது.

 

அவரைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள், படையணிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புக்களைத் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கு இரண்டு வாரங்களாகத் தான் எடுத்த முயற்சிகள் வெற்றிப் பாதையில் வீறுநடை போட்ட வண்ணம் இருந்தன.

KP

‘இயக்கத்தை விட்டு உங்களை விலக்கி வைத்த பிறகு, உங்களிட்டை எந்த விதமான உதவிகளை இயக்கம் பெற்றுக் கொண்டது?’இப்படி தனது பிடியில் இருந்தவர் திடீரென்று கேட்டதும் மீண்டும் கே.பி வழமைக்குத் திரும்பினார். அவரது முகத்தில் ஈயாடவில்லை. கே.பி பேசத் தொடங்கினார்: ‘என்னை இயக்கம் விலக்கி வைக்கவில்லை. என்னிடம் இருந்த கொள்வனவுப் பொறுப்புக்களை மட்டும் தான் இயக்கம் எடுத்தது. என்ரை பொறுப்பில் இயக்கத்தின் பிசினஸ் (வாணிபங்கள்) இருந்தது.’

 

அதற்கு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கூறினார்: ‘உங்களிட்டை இயக்கத்தின்ரை பிசினஸ் இருந்தது உண்மை தான். ஆனால் அதெல்லாம் உங்களின்ரை சொந்த பிசினஸ் என்று எல்லோ நீங்கள் தலைவருக்குச் சொல்லி இருந்தீங்கள்? அதனால் தான் கம்போடியாவிலையும், தாய்லாந்திலையும் இருக்கிற உங்கடை பண்ணைகளிலையும், பக்டரீசிலும் (தொழிற்சாலைகள்) கை வைக்க வேண்டாம் என்று தமிழேந்திஅப்பாவிட்டையும், கஸ்ரோவிட்டையும் தலைவர் உத்தரவு பிறப்பித்தவர்.’

 

இவ்வாறு கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் கூறியதும், கே.பி வெடித்தெழுந்து பேசத் தொடங்கினார்: ‘ஆனந்தராஜவின்ரை கதையைக் கேட்டு என்னைப் பற்றித் தலைவரிட்டை தமிழேந்தியும், கஸ்ரோவும் தான் போட்டுக் கொடுத்தவையள். அதுக்கு உடந்தையாக பொட்டம்மான் அனுப்பின பொடியன் ஒருத்தனும் இருந்தவன். அதுக்குப் பிறகு தான் உண்மையை விளங்கப்படுத்தி நான் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினனான். நடந்தது எல்லாம் குமாரவேலுக்கும் நல்லாகத் தெரியும். வன்னிக்கு என்னை எடுக்கிறதுக்கு தான் ஏற்பாடு செய்யும் வரையும் என்னை ஒதுங்கி இருக்கச் சொல்லித் தலைவர் சொன்னவர். ஆனால் 2005 ஆம் ஆண்டு வான்புலிகளுக்கு உதவி தேவைப்பட்ட போது என்னோடை கதைக்கிறதுக்குத் தலைவர் அனுமதி கொடுத்தவர்.’

 

ஆனால் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரோ விடவில்லை. கே.பியைத் திணறடிப்பதற்கான தனது அடுத்த கேள்விக் கணையைத் தொடுத்தார்.

 

‘உங்கடை ஆட்கள் சில பேரை சி.ஐ.ஏ கடத்திச் சென்றதாக ஏற்கனவே வன்னியில் கதை அடிபட்டது. அவையள் கொடுத்த தகவலை வைச்சுத் தான் உங்களோடு சி.ஐ.ஏ தொடர்பு எடுத்து டீல் போட்டதாக கதைச்சவையள். அதை இல்லை என்று நீங்கள் மறுக்கிறீங்களா?’

 

கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவர் தொடுத்த கேள்வி, கே.பியின் மூளையத்தில் பிரம்மாஸ்திரத்தை ஏவியது போல் அவருக்கு இருந்தது. தனது எதிரில் இருந்தவரையும், இன்பத்தையும் மாறி மாறி கே.பி பார்த்தார்.

..........

 

தயாபரன் அல்லது சங்கீதன் என்றழைக்கப்படும் அன்ரனி வெலிங்டன் சமாதான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையில் விநாயகம் அல்லது அறிவழகன் அவர்களின் கீழ் பணிபுரிந்த போராளி.

 

Sangeethan
சங்கீதன் அல்லது தயாபரன் (அன்ரனி வெலிங்டன்)

 

வவுனியா செட்டிக்குளத்தை இவர் பின்னணியாகக் கொண்டிருந்தது, வவுனியா -மன்னார் மாவட்டங்களில் இவரது பின்புலத்துடன் சில நடவடிக்கைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினர் மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தயாபரன் அல்லது சங்கீதன் பற்றிய இன்னொரு பின்னணி தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவினராலும், படையப் புலனாய்வுப் பிரிவினராலும் கண்டறியப்பட்டு தேசிய புலனாய்வுத்துறையின் பகுப்பாய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபொழுது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

 

அதற்குக் காரணம் தயாபரன் அல்லது சங்கீதன் என்பவரின் தந்தை. அவர் சிறீலங்கா படையப் புலனாய்வுத்துறையின் முகவராகச் செயற்பட்டு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய புலனாய்வுத்துறையின் இரட்டை முகவராக இயங்கிய ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுப் பிரிவினரிடம் மாட்டிக் கொள்ள, அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவினர், சிறீலங்கா படையப் புலனாய்வுத்துறையின் முகவராக தயாபரன் அல்லது சங்கீதனின் தந்தை செயற்படுவதை இனம் கண்டு கொண்டனர்.

 

இதனையடுத்து தயாபரன் அல்லது சங்கீதனின் தந்தை வன்னிக்கு அழைத்து வரப்பட்டு, விசாரணைகளின் பின்னர் தேசத்துரோகம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தேசத்துரோகிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தினரின் விடயத்தில் ஒரு நடைமுறையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடிப்பதுண்டு.

 

தேசத்துரோகத்திற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தால், அவர் ஏழாண்டு கால சேவைக்காலம் நிறைவேறுவதற்கு முன்னரே எவ்வித தண்டனையோ, நிபந்தனையோ இன்றி இயக்கத்தை விட்டு விலகிச் செல்லலாம். அத்தோடு, அவர் விரும்பினால்வெளிநாடு செல்வதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி உதவி செய்வார்கள்.

 

இது தான் தயாபரன் அல்லது சங்கீதன் என்பவரின் விடயத்திலும் நடந்தது. அவரது தந்தைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவர் இயக்கத்தை விட்டு விலகிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதோடு, அவரைத் தமது செலவில் குடும்பமாக இந்தியாவிற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுப்பி வைத்தார்கள்.

 

அங்கு பறங்கிமலை எனும் இடத்தில் சில காலம் தங்கியிருந்த அவருடன் றோ நிறுவன உளவாளிகள் தொடர்பை ஏற்படுத்தினார்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக, வன்னிப் போர் முடிவடைந்ததும், விநாயகம் அவர்களுடன் தயாபரன் அல்லது சங்கீதன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள, ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையில் இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் முகவராக பிரித்தானியாவிற்குப் புறப்படுவதற்கு சங்கீதன் தயாராகினார்.

 

Thamilarasan
தமிழரசன்

 

இவரோடு இன்னுமொருவரை விநாயகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் இந்தியாவில் இருந்து பிரான்சுக்கு அனுப்புவதற்கு றோ தயாராகியது. அவரது பெயர் தமிழரசன். தமிழீழ விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கேணல் சார்ள்ஸ் (அருள்வேந்தன்) அவர்களின் வீரச்சாவு நிகழ்ந்த சில மாதங்களில் இரட்டை முகவர் என்ற சந்தேகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்.

..........

 

கே.பியின் முகம் கறுத்துப் போனது. சில விநாடிகள் மெளனத்திற்குப் பின்னர் கே.பி பேசத் தொடங்கினார்: ‘என்ரை ஆட்கள் சில பேரை சி.ஐ.ஏ தூக்கினது உண்மை தான். ஆனால் என்னட்டை சி.ஐ.ஏ நெருங்கவில்லை. அதை விட இயக்கத்தின்ரை கப்பல்கள் தாண்டதுக்கும் (மூழ்கடிக்கப்பட்டதற்கு) என்ரை ஆட்களை சி.ஐ.ஏ தூக்கினதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.’இவ்வாறு கே.பி கூறி முடித்ததும் அவரது முகத்தில் ஒரு விதமான இறுக்கம் தென்பட்டது.

 

ஆனால் கே.பியின் பிடியில் சிக்கியிருந்தவரோ விடவில்லை: ‘நீங்கள் இப்பிடிச் சொல்கிறீங்கள். ஆனால் வன்னியில் அப்படித் தான் தளபதிமார் சிலர் பேர் கதைச்சவையள். கருணாவின்ரை பிளவு கூட றோவும், சி.ஐ.ஏயும் செய்த கூட்டு நடவடிக்கை என்று இயக்கத்துக்கு சந்தேகம் இருந்தது. கடைசியில் கருணா பெங்களூரில் தானே பத்திரமாக இருந்தார்.’

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய தகவல்களை 2003ஆம் ஆண்டில் இருந்து சிறீலங்கா அரசுக்கு அமெரிக்க வெளியகப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ (மத்திய புலனாய்வு முகவரகம்) வழங்கியதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி 2006ஆம் ஆண்டு முதல் பல்வேறு கைது நடவடிக்கைகளை அமெரிக்க உள்ளகப் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ (இணைப்பாட்சி புலனாய்வுப் பணியகம்) மேற்கொண்டதும் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தான்.

 

ஆனால் இவற்றுக்கு முன்னோடியாக 2003ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து கே.பியின் ஆட்களை வெவ்வேறு நாடுகளில் வைத்து சி.ஐ.ஏ கடத்திச் சென்று, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோக வலையமைப்புப் பற்றிய தகவல்களைத் திரட்டியது பலர் அறியாதது.

 

Sarve
கே.பியின் நிதிப் பொறுப்பாளர் சர்வே (நோர்வே)

 

இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் சிலர் கனடிய குடியுரிமை பெற்றவர்கள். இன்னும் சிலர் அவுஸ்திரேலியா, நோர்வே ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள். இவர்களை அவர்கள் வசித்து வரும் நாடுகளில் வைத்துக் கடத்துவது அந்தந்த நாடுகளின் மனித உரிமைச் சட்டங்களையும், நீதித்துறையின் நியாயாதிக்கத்தையும் மீறும் செயலாக அமையும் என்பதால், ஆசிய நாடுகளில் வைத்தே இவர்களை சி.ஐ.ஏ கடத்தியது.

 

இதில் பெரும்பாலான கடத்தல்கள் கே.பி தங்கியிருந்த தாய்லாந்திலேயே நடந்தேறின. சிலர் கே.பியை சந்திக்கச் சென்ற பொழுது பாங்க்கொக் விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.ஏ புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டார்கள். இன்னும் சிலர் குடும்பத்தோடு மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் சென்ற பொழுது அங்கு வைத்துக் கடத்தப்பட்டார்கள்.

 

இவ்வாறு கடத்தப்பட்டவர்களிடம் இரண்டு தெரிவுகளை சி.ஐ.ஏ முன்வைத்தது. ஒன்றில் குவான்ரனோமோ தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்று அல்கைடா இயக்க சந்தேக நபர்களுடன் எவ்வித நீதிமன்ற விசாரணைகளும் இன்றிக் காலவரையறையின்றி தடுத்து வைப்பது: அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்புக்கள் பற்றிய தகவல்களை வழங்கி ஒத்துழைத்தால், அவர்களைத் தாம் குடியுரிமை கொண்டுள்ள நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு அனுமதிப்பது.

 

இதில் இரண்டாவது தெரிவையே சி.ஐ.ஏயால் கடத்தப்பட்ட கே.பியின் ஆட்கள் எல்லோரும் தேர்ந்தெடுத்தார்கள். இது பற்றிக் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஊடாகவும், தாய்லாந்திற்கு அனுப்பப்பட்ட போராளிகள் சிலர் ஊடாகவும் வன்னிக்குத் தகவல்கள் கசிய, இவர்கள் உடனடியாக வன்னிக்கு வருமாறு பணிக்கப்பட்டனர்.

 

ஆனால் இவர்கள் யாருமே வன்னிக்குச் செல்லவில்லை. ஒன்றில் சாக்குப் போக்குகள் கூறி வன்னி செல்வதைத் தவிர்த்தார்கள்: அல்லது வன்னியுடனான தொடர்புகள் அனைத்தையும் முற்றாகத் துண்டித்தார்கள்.

 

இதில் வேடிக்கை என்னவெனில், தாய்லாந்தில் வைத்து கே.பியின் ஆட்களைக் கடத்திய சி.ஐ.ஏ, தன்னிடம் நெருங்கவில்லை என்று தனது பிடியில் சிக்கியிருந்தவரிடம் கே.பி கூறியதுதான். இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது சிறுகுழந்தைக்கும் ஏற்படக் கூடிய கேள்விதான்.

 

இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். தாம் கடத்திச் சென்று விசாரணை செய்த கே.பியின் ஆட்கள் வழங்கிய தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்கு சிங்களப் புலனாய்வுத்துறையின் ஆலோசகரான பேராசிரியர் றோகான் குணரத்தினவின் உதவியையும் சி.ஐ.ஏ பெற்றுக் கொண்டது. இதற்குப் பிரதியுபகாரமாக குவான்ர னோமோவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்கைடா இயக்க சந்தேக நபர்களை சந்தித்து, அவர்களுடன் நேர்காணல்களை மேற்கொண்டு, இன்சைட் அல்கைடா (அல்கைடாவிற்கு உள்ளே) என்ற நூலை அவர் எழுதுவதற்கு சி.ஐ.ஏ நிறுவனத்தின் புலனாய்வாளர்கள் அனுமதி வழங்கியிருந்தார்கள்.

 

Rohan Gunaratne
றோகான் குணரத்தின

இந்த றோகான் குணரட்ண தான் பின்நாட்களில் கே.பியையும், முன்னாள் போராளிகள் சிலரையும் பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ச முன்னெடுத்த ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கைக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு (08.01.2019)

 

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25