ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 27

வெள்ளி பெப்ரவரி 01, 2019

தனது தளபதியை கொல்ல கே.பியின் முகவரைக் கையாண்ட கோத்தபாய
- கலாநிதி சேரமான்

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக கடல்வழி மற்றும் ஆயுதக் கொள்வனவு வலையமைப்புப் பற்றிய தகவல்களை சி.ஐ.ஏயிற்கு வழங்கியதோடு மட்டும் கே.பியின் கையாட்கள் நின்று விடவில்லை. கே.பியின் கையாட்களில் சிலர் சிங்கள பாதுகாப்புத்துறைச் செயலரான கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை முகவர்களாகவும் விளங்கினார்கள்.

 

இவ்வாறு கோத்தபாயவின் இரட்டை முகவராக விளங்கிய கே.பியின் கையாட்களில் முக்கியமானவர் இன்றும் அவரது பிரித்தானிய நிதி விவகார இணைப்பாளராக விளங்கும் கரன் என்றழைக்கப்படும் சொக்கலிங்கம் சிறீகரன். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் கிடையாது. 1999ஆம் ஆண்டின் இறுதியில் தென்னிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினர் நிகழ்த்திய தாக்குதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட மறைமுகக் கரும்புலிக்கு செல்பேசி அட்டை வாங்கிக் கொடுத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பின்னர் குற்றவாளி அல்ல என சிறீலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார்.

 

பொதுவாக இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள். ஆனால் சிலர் முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் முகவர்களாக இருந்து பின்னர் சிறையில் வைத்து சிங்களப் புலனாய்வுத்துறையின் முகவர்களாக மாற்றப்பட்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறானவர்களைத் தமது முகவர்களாக சிங்களப் புலனாய்வுத்துறையினர் மாற்றியதும் இவர்களுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஆதாரங்கள் எவையும் இல்லை என்று நீதிமன்றத்தில் சிறீலங்கா சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிக்கும்.

 

இதனையடுத்து நீதிமன்றத்தால் எவ்வித நிபந்தனையும் இன்றி இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் கரன் என்பவர். விடுதலை செய்யப்பட்ட சில வாரங்களிலேயே சிறீலங்கா கடவுச்சீட்டுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து, பின்னர் கல்வி கற்பதற்கான நுழைவனுமதிக்கு (விசா) பிரித்தானிய தூதரகத்தில் பதிவு செய்து இவர் இலண்டனை சென்றடைந்தார். அங்கிருந்தவாறு வன்னியில் தமிழீழ புலனாய்வுத்துறையின் வெளிக்களப் பொறுப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் அல்லது ஞானம்மான் என்பவருடன் தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கே.பியுடன் சிறிது காலம் கம்போடியாவில் பணிபுரிந்த ஞானம்மானின் போராளி ஒருவர் ஊடாக தொடர்பை ஏற்படுத்திய இவர், பின்னர் கே.பியின் கையாளாக மாறினார்.

 

இலண்டனில் வாழ்ந்தாலும், போர் ஓய்வுக் காலப் பகுதியில் அடிக்கடி கொழும்புக்கும், வன்னிக்கும், மட்டக்களப்பிற்கும் சென்று வந்த இவர், தன்னை ஒரு உள் ஊர்வாசி போன்று காண்பித்து இலங்கை தேசிய அடையாள அட்டையிலேயே பயணங்களை மேற்கொண்டார். இவ்வாறு 2005ஆம் ஆண்டு இவர் கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பொழுது, நந்தவனத்தில் வைத்து இவரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்பொழுது தான் ஞானம்மானின் ஆள் என்று இவர் கூறியதோடு, இதனை அப்பொழுது மட்டக்களப்பில் நின்ற ஞானம்மானின் தொடர்பாளர் ஒருவர் உறுதி செய்ய, இவர் விடுதலை செய்யப்பட்டார்.

 

இதன் பின்னர் மீண்டும் இவர் இலண்டன் திரும்பியதும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசுக்கும் இடையிலான நிழல் யுத்தம் உக்கிரமடைய, வன்னியில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிக்களப் புலனாய்வுக் கட்டளைப் பீடத்திற்கும், தென்னிலங்கையில் இயங்கிய தமிழீழ தேசிய புலனாய்வுத்துறையின் நடவடிக்கை அணியொன்றுக்கும் இடையிலான திரிகோணமுறைத் தொலைபேசிப் பரிவர்த்தனைத் தொடர்பாளராகப் பணிபுரியும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்ட பொழுது, கே.பியின் கையாளாகவும் இவர் திகழ்வதைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய புலனாய்வுத்துறையினர் அறிந்திருக்கவில்லை.

 

Ramanan

 

இச் சந்தர்ப்பத்தில் தான் 21.05.2006 அன்று மட்டக்களப்பு வவுணதீவு முன்னரங்க நிலைகளைக் கண்காணிக்கச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத் துணைத் தளபதி கேணல் ரமணன் அவர்கள் மீது சிறீலங்கா படையினர் குறிசூட்டுத் தாக்குதல் (சினைப்பர்) நிகழ்த்தினர். இதில் கேணல் ரமணன் வீரச்சாவைத் தழுவிக் கொள்ள, இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்தனர். கேணல் ரமணன் அவர்கள் வெறுமனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத் துணை தளபதி மட்டுமல்ல.

 

போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட படையப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 1997ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வன்னிக்கும் தென்னிலங்கைக்கும் இடையிலான தரை மற்றும் கடல்வழிப் பாதைகளை சிங்களப் படைகள் முடக்கியதை அடுத்து கொழும்பு, கண்டி என தென்னிலங்கையில் தமிழீழ தேசிய புலனாய்வுத்துறையினர் நிகழ்த்திய உரிமைகோரப்படாத பல தாக்குதல்களுக்கான அணிகளை மட்டக்களப்பின் ஊடாக நகர்த்திய பெருமை கேணல் ரமணன் அவர்களையே சாரும்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து சென்ற பொழுது, கருணாவைத் தூக்கியெறிந்து விட்டு வன்னி சென்று தமிழீழ தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக செயற்பட்டவர் கேணல் ரமணன்.

Ramanan1

 

கேணல் ரமணனின் வீரச்சாவிற்கு பதிலடி கொடுப்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்த பொழுது, ஒரு முக்கிய தகவல் வன்னியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய புலனாய்வுத்துறையின் வெளிக்களக் கட்டளைப் பீடத்தைச் சென்றடைந்தது.
 

சிறீலங்கா தரைப்படையின் மூன்றாம் நிலைத் தளபதியான மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க தகுந்த பாதுகாப்பின்றி நாள்தோறும் கொழும்புக்கும், பனாகொடவிற்கும் இடையில் பயணிக்கின்றார் என்பதே அது. அதாவது படைத்துறை அகராதியில் இலகுவான இலக்கு என்பார்கள். ஆக கேணல் ரமணனின் வீரச்சாவிற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் பதிலடி கொடுப்பதற்கு ஏற்ற இலகுவான இலக்காகவே பரமி குலதுங்க திகழ்ந்தார்.

 

..........

 

கூட்டு நடவடிக்கையாக இந்திய – சிங்களப் புலனாய்வு நிறுவனங்கள் பிரான்சிற்கு அனுப்பி வைத்த தமிழரசன் என்ற இரட்டை முகவர் தொடர்பான தகவல்களை நாம் பார்ப்பதற்கு முன்னர், பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சங்கீதன் அல்லது தயாபரன் என்றழைக்கப்படும் அன்ரனி வெலிங்டன் தொடர்பான மேலும் சில தகவல்களைப் பார்ப்போம்.

 

Sangeethan
சங்கீதன் அல்லது தயாபரன்

 

தலைமைச் செயலகம் என்ற பெயரில் பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் காட்டுப்புறப் பண்ணையொன்றை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இவர், மதுபானக் கடத்தல், பயண ஆட்கடத்தல் போன்ற பல சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு வருபவர். சில காலத்திற்கு முன்னர் பிரித்தானியாவின் மத்திய பகுதியில் உள்ள கொவன்ரி எனும் இடத்தில் தமிழ் ரேஸ்ற் ஒவ் ஏசியா (Tamil Taste of Asia) அல்லது சுவையூற்று என்ற பெயரில் உணவகம் ஒன்றையும் இவர் நடத்தி வந்தார். இதற்கு இவருக்கு உதவி செய்தவரின் பெயரைக் குறிப்பிட்டால் வாசகர்கள் அதிர்ந்து போவார்கள்.

 

Taste1

 

Taste

 

அவர் ஒரு சிங்களவர். அவரது பெயர் சிராந்த பெர்னான்டோ. நீர்கொழும்பைச் சேர்ந்த இவர், நோர்வேயில் வசிக்கும் சிறீலங்கா தேசியப் புலனாய்வுத்துறையின் முகவரான கமல் என்றழைக்கப்படும் கமலசிங்கம் அருணகுலசிங்கம் என்பவரின் நெருங்கிய நண்பரும் கூட. ஆசிய நாடுகளில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் - முகவர்களை இனம்கண்டு அவர்களைத் தமது வலையில் வீழ்த்துவதற்காக சிறீலங்கா தேசிய புலனாய்வுத்துறை மலேசியாவிற்கு அனுப்பி வைத்த சிரஞ்சீவி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஜீவகுமார் ஜீவரத்தினம் அவர்கள் கோலாலம்பூரில் தங்குவதற்கான ஏற்பாடுகளை நோர்வே கமல் மேற்கொண்டமை பற்றி இப்பத்தியின் இருபத்திரண்டாவது தொடரில் நாம் குறிப்பிட்டமை வாசகர்களுக்கு நினைவில் இருக்கக் கூடும். இந்த நோர்வே கமலின் நண்பரான சிராந்த பெர்னான்டோ தான் பிரித்தானியாவில் சங்கீதன் அல்லது தயாபரன் அவர்களுக்கான உதவிகளை ஆரம்பத்தில் புரிந்தார்.

 

Yaal Cafe

Shirantha

Shirantha

பின்னர் செந்தில் விஜய் என்ற புகைப்படப் பிடிப்பாளர் ஒருவரின் உதவியுடன் இலண்டனுக்கு சங்கீதன் அல்லது தயாபரன் இடம்மாறினாலும், சிராந்த பெர்னான்டோவுடன் நெருங்கிய தொடர்பை அவர் பேணினார்.

 

Vijay
சிங்களக் கைக்கூலி சங்கீதனின் சகா விஜய்

இந்த சிராந்த பெர்னான்டோ என்ற சிங்களவர் கொவன்ரி பகுதியில் நடாத்தி வந்த யாழ் கபே (Yaal Cafe) (தேனீரகம்) என்ற உணவகம் (கவனிக்கவும்: யாழ்ப்பாணத்தின் பெயரில் ஒரு சிங்களவர் தமிழ் உணவகத்தை பிரித்தானியாவில் நடத்தினார்) பின்னர் சங்கீதன் அல்லது தயாபரனின் கைக்கு மாறி தமிழ் ரேஸ்ற் ஒப் ஏசியா அல்லது சுவையூற்றாக மாறியது.

..........

 

மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க 1971ஆம் ஆண்டு சிறீலங்கா தரைப்படையில் 2ஆம் லெப்ரினன்ட் ஆக இணைந்து கொண்டவர். பின்நாட்களில் கேணல் தர படைத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற இவர், ஒப்ரேசன் லிபரேசன், பலவேகய, வலம்புரி, யாழ்தேவி ஆகிய நடவடிக்கைகளில் முக்கிய பாத்திரத்தை வகித்தவர். சந்திரிகா குமாரதுங்கவின் மாமனாரான ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் (முன்னர் கேணல்) நண்பரான இவர், சிறீலங்கா பாதுகாப்புத்துறைப் பிரதி அமைச்சராக 1994ஆம் ஆண்டு அனுருத்த ரத்வத்த பதவி ஏற்ற சில மாதங்களில் திருமலை மாவட்டத்திற்கான பிரிகேடியர் தர தளபதியாகவும், பின்னர் 2000ஆம் ஆண்டு மேஜர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றவர்.

Parami

 

இவரை விட ஓராண்டுக்கு முன்னர் சிறீலங்கா தரைப்படையில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இணைந்து கொண்டாலும், இருவருமே சில மாத இடைவெளியிலேயே 2ஆம் லெப்ரினன்ட், லெப்ரினன்ட், கப்டன் ஆகிய பதவி நிலைகளுக்கு உயர்ந்தார்கள். இருவருக்கும் இடையில் நிகழ்ந்த சில மாத கால பதவி உயர்வுப் போட்டிகளில் கடைசியில் சரத் பொன்சேகாவே வெற்றி பெற்றார். ஆம், மேஜர் ஜெனரலாக பரமி குலதுங்க நியமிக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அப் பதவியை சரத் பொன்சேகா தட்டிக் கொண்டார். ஆனாலும் சந்திரிகா அம்மையாரின் விசுவாசி என்ற வகையில், தொடர்ந்து உயர் பதவி வகித்த பரமி குலதுங்கவின் அந்திமக் காலம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தொடங்கியது. அப்பொழுது மகிந்தரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும், பொன்சேகாவும் (அப்பொழுது லெப்.ஜெனரல்) நண்பர்கள்.

Parami1

 

சிங்கள அதிபராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றதும் செய்த முதல் வேலை, யுத்தம் முடியும் வரை தரைப்படைத் தளபதி பொறுப்பில் சரத் பொன்சேகாவை வைத்திருக்கும் தீர்மானத்தை எடுத்தது தான். இது ஏனைய படைத் தளபதிகளுக்குத் தித்திப்பான செய்தியாக இருக்கவில்லை. காரணம், சேவைக்கால மூப்பின் அடிப்படையில் தமக்குத் தரைப்படைத் தளபதி பதவி கிட்டும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, காலவரையறையின்றி தரைப்படைத் தளபதியாக பொன்சேகா இருக்கப் போகின்றார் என்பது அதிர்ச்சியை அளித்தது. இவ்வாறு பொன்சேகாவின் நியமனத்தில் அதிருப்தியடைந்தவர்களில் மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க முதன்மையானவர். அடுத்தவர் மேஜர் ஜெனரல் பராக்கிரமபாகு பன்னிப்பிட்டிய. இவர்கள் இருவரையுமே பொன்சேகாவிற்குப் பிடிக்காது.

 

தவிர இவர்களுக்கு இருவருக்கும் கோத்தபாய ராஜபக்சவைப் பிடிக்காது. காரணம் சிறீலங்கா தரைப்படையை விட்டு விலகி அமெரிக்காவிற்கு கோத்தபாய ராஜபக்ச சென்ற பொழுது அவர் வெறும் லெப்.கேணல் பதவியே வகித்தார். அவ்வாறு வெறும் லெப்.கேணல் பதவியில் இருந்த ஒருவர், அதுவும் யுத்தம் உக்கிரமடைந்த பொழுது இராணுவத்தை விட்டு விலகி அமெரிக்கா சென்ற தமது கீழ்நிலை அதிகாரி, திடீரென தனது சகோதரன் அதிபராகியதும் நாடு திரும்பித் தமக்குக் கட்டளை பிறப்பிக்கும் பாதுகாப்புத்துறைச் செயலராக மாறியதை இவர்களால் ஏற்க இயவில்லை.

 

தம்மைப் பற்றிப் படைத்துறை உள்வாட்டாரங்களிலும் பரமி குலதுங்க, பராக்கிரமபாகு பன்னிப்பிட்டிய ஆகியோர் முணுமுணுப்பது பொன்சேகா, கோத்தபாய ஆகியோரின் காதுக்குச் செல்ல, இருவருக்கும் பதவி உயர்வு கொடுத்து பன்னிப்பிட்டியவை மட்டக்களப்பிற்கும், பரமி குலதுங்கவை கொழும்பில் உள்ள படைத்துறை தலைமையத்திற்கு பொன்சேகாவும், கோத்தபாயவும் மாற்றினார்கள். இங்கு தான் இருவரின் உயிருக்கும் உலை வைக்க பொன்சேகாவும், கோத்தபாயவும் வியூகம் வகுத்தார்கள் எனலாம்.

 

ஏனென்றால் மட்டக்களப்பு அப்பொழுது கொதிநிலையில் இருந்த ஒரு மாவட்டம். அங்கு பராக்கிரமபாகு பன்னிப்பிட்டியவை எந்த நேரமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலக்கு வைக்கலாம் என்ற நிலை காணப்பட்டது.

 

மறுபுறத்தில் கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்திருக்கும் படைத்துறைத் தலைமையகத்திற்கு பரமி குலதுங்க மாற்றப்பட்ட பொழுதும், அங்குள்ள படையதிகாரிகளின் வதிவிடத் தொகுதியில் அவர் வசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக தரைப்படைத் தலைமையகத்தில் இருந்து 28 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பனாகொட படை முகாமில் அமைந்திருந்த படையதிகாரிகளின் தங்ககத்தில் இருந்து நாள்தோறும் பணிக்கு வந்து செல்லுமாறு அவருக்கு கோத்தபாய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார். அத்தோடு அவருக்கான மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையையும் கோத்தபாய குறைத்தார்.

 

25.04.2006 அன்று சரத் பொன்சேகா மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய பொழுது, அதில் காயங்களுடன் அவர் தப்பித்துக் கொண்டதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவருக்கு வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை. அதாவது கொம்பனித் தெருவில் உள்ள படைத்துறை மருத்துவமனையை பொன்சேகாவின் வாகனம் நெருங்கிய பொழுது அதனை நோக்கி மறைமுகப் பெண் கரும்புலி ஒருவர் பாய, அவரை பொன்சேகாவின் வாகனத்திற்குப் பக்கவாட்டாக உந்துருளியில் சென்று கொண்டிருந்த சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் எட்டி உதைத்து வீழ்த்தினார். அத்தோடு அந்த மறைமுகக் கரும்புலி நிலைகுலைந்து தனது வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைக்க, குறுகிய இடைவெளியில் ஆனால் காயங்களுடன் பொன்சேகா உயிர் தப்பினார்.

 

இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடு பரமி குலதுங்கவிற்கு வழங்கப்படவில்லை. அதாவது பொன்சேகா மீதான தாக்குதல் நடாத்தப்பட்ட பொழுது அவரது வாகனத்திற்கு முன்புறத்தில் பிக் அப் ரக வாகனம் ஒன்றிலும், பின்புறத்தில் இன்னொரு பிக் அப் ரக வாகனத்திலும் படையினர் பாதுகாப்பு வழங்க, பக்கவாட்டாக உந்துருளிப் படையினர் பயணித்தனர். ஆனால் நாள்தோறும் பனாகொடவிற்கும், கொம்பனித் தெருவிற்கும் இடையில் பேர்ஜோ ரக மகிழுந்தில் பயணித்த பரமி குலதுங்கவின் பாதுகாப்பிற்கு அவரது பின்புறமாக பிக் அப் ரக வாகனம் ஒன்று மட்டும் அனுப்பப்பட்டது. தவிர அவரது வாகனம் குண்டுதுளைக்காத கவசங்கள் பொருத்தப்பட்ட வாகனமும் அல்ல. சுருங்கக் கூறினால், தமிழீழ விடுதலைப் புலிகள் இலக்கு வைப்பதற்கு ஏதுவான இலகுவான இலக்காகவே பரமி குலதுங்கவை கோத்தபாய ராஜபக்ச மாற்றியிருந்தார்.

 

இவ்வாறான பின்புலத்தில் தென்னிலங்கையில் இரகசியமாக இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் போராளி ஒருவருக்கு இலண்டனில் இருந்து கரன் என்பவர் தொடர்பு கொள்கிறார்: ‘வன்னியில் இருந்து கரும்புலி ஒருவர் வந்திருக்கிறார். அவரை சந்தித்து, அவருக்கான மோர்ட்டர் பைக்கையும், வெடிமருந்தையும் கொடுத்து பரமி குலதுங்க மீதான தாக்குதலுக்கு ஒழுங்கு செய்யுங்கோ.’ இதுதான் குறித்த புலனாய்வுத்துறைப் போராளிக்கு, கே.பியின் முகவரும், ஞானம்மானின் திரிகோணமுறைத் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைத் தொடர்பாளராக விளங்கிய கரன் பிறப்பித்த கட்டளை. இந்தக் கட்டளையை ஏற்று, குறித்த மறைமுகக் கரும்புலியை அழைத்துச் சென்று பரமி குலதுங்க மீதான தாக்குதலை அந்தப் போராளியும் கச்சிதமாக செய்து முடிக்கிறார்.

 

அதாவது காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாக, கேணல் ரமணனின் வீரச்சாவிற்குப் பதிலடி கொடுப்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகிக் கொண்டிருக்க, பரமி குலதுங்கவின் பாதுகாப்பைக் குறைத்து அவரைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிப்பதற்கு கே.பியின் முகவர் ஊடாக கோத்தபாய ராஜபக்ச வழிவகை செய்து கொடுத்தார்.

 

இவ்விடத்தில் இரண்டு முக்கிய விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று பரமி குலதுங்க மீதான தாக்குதலை நடத்தும் முன், ஏறத்தாள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அவரை உந்துருளியில் பின்தொடர்ந்து சென்றே அவரது மகிழுந்து மீது குறித்த மறைமுகக் கரும்புலி மோதி வெடித்தார். இதனை பரமி குலதுங்கவின் பின்புறத்தில் பாதுகாப்பிற்கு பிக் அப் வாகனத்தில் பயணித்த படையினர் தடுத்து நிறுத்தவில்லை. தமது வாகனத்தை உந்துருளி ஒன்று பின்தொடர்கின்றது என்று படைத்துறைத் தலைமையகத்திற்கு அவர்கள் அறிவிக்கவுமில்லை.

Parami2

 

அடுத்தது கொழும்பு மருதானையில் இயங்கும் தேசிய மருத்துவமனைக்கு சென்ற தொலைபேசி அழைப்பு. பரமி குலதுங்க கொல்லப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் இலண்டனில் இருந்து செல்பேசி ஒன்றின் மூலம் தேசிய மருத்துவமனையின் சவச்சாலைக்குத் தொடர்பெடுத்த ஒருவர், ‘இன்னும் ஒரு மணிநேரத்தில் இராணுவத் தளபதி ஒருவரின் சடலம் வர இருக்கிறது. அதைக் கையேற்பதற்கு உங்கள் மருத்துவமனையின் சவக்கிடங்கைத் தயார்படுத்துங்கள்’ என்று அரைகுறைச் சிங்களத்தில் கூறியிருக்கின்றார். இந்த அழைப்பை மேற்கொண்டவர் வேறு யாருமல்ல. கே.பியின் பிரித்தானிய நிதி விவகார இணைப்பாளரான கரன் அவர்களே இத் தொலைபேசி அழைப்பை மருத்துவமனைக்கு மேற்கொண்டிருந்தார்.

 

பரமி குலதுங்க கொல்லப்பட்டமைக்கு அவருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று, அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தினார்கள். இவர்களையும், பரமி குலதுங்கவின் விசுவாசிகளை ஆசுவாசப்படுத்தவும் அவரது மரணத்தின் பின் அவருக்கு லெப்.ஜெனரல் பதவியை மகிந்த ராஜபக்ச வழங்கியதோடு, அவரது மரண வீட்டிற்கு சென்று இரு கைகளையும் கூப்பி அவரது சடலத்தை வணங்கினார் (இப்படித் தான் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களை சிங்களப் புலனாய்வாளர்கள் படுகொலை செய்ததும், அவரது மரண வீட்டில் மகிந்தர் நடந்து கொண்டார் என்பதை இவ்விடத்தில் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்).

Parami3

 

இப்பொழுது வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் இன்னொரு தகவலையும் தருகிறோம். பரமி குலதுங்க மீதான தாக்குதலை வழிநடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி, வன்னிப் போர் முடிவடைந்ததும், தென்னிலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தாக மாறியதால், அங்கிருந்து வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்று அகதி வாழ்வு வாழ்கின்றார்.

 

ஆனால் பரமி குலதுங்க மீதான தாக்குதலை நடாத்துவதற்கான திரிகோணமுறை தகவல் பரிவர்த்தனையை மேற்கொண்ட கரன் என்பவரோ, பிரித்தானியாவில் கே.பியின் நிதி விவகார இணைப்பாளராகத் திகழ்வதோடு, குளிர் காலத்தில் கொழும்பில் தங்குவதும், கோடை காலத்தில் பிரித்தானியாவில் தங்குவதுமாக உல்லாச வாழ்வு வாழ்கின்றார்.

 

அத்தோடு கே.பியின் கைது நாடகத்தின் பின்னர் தனக்கும் சிங்களப் புலனாய்வுத்துறையினருக்கும், அதுவும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது புலனாய்வுத்துறை அதிபர் மேஜர் ஜெனரல் கபில காமினி கெந்தவிதாரண ஆகியோருடன் தனக்கு இருந்த நெருங்கிய உறவை பெருமையுடன் கூறுவதற்குக் கரன் தயங்குவதில்லை.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

நன்றி: ஈழமுரசு (22.01.2019)

 

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26