ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 3

புதன் பெப்ரவரி 21, 2018

காட்டுக்குள் அலறிய தொலைக்காட்சிப் பெட்டி
- கலாநிதி சேரமான்

யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு கந்தசுவாமி கோவிலை அண்டிய பகுதி அது. யுத்தத்தில் சிங்களப் படைகள் வெற்றி பெற்று முழுத் தமிழீழத் தாயகமும் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் உட்படுத்தப்பட்டிருந்த அந்தக் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய சிப்பாய்களும், சிவில் உடை அணிந்த படைப் புலனாய்வாளர்களும் நீர்வேலியில் நடமாடுவதென்பது புதியதொரு விடயம் அல்ல. ஆனாலும்கூட ஒன்றரை வாரத்திற்கு மேலாக நீர்வேலி தெற்கு கந்தசுவாமி கோவிலை அண்டிய பகுதியில் சிவில் உடையில் படைப் புலனாய்வாளர்கள் நடமாடிக் கொண்டிருந்தது அப்பகுதி மக்களிடையே இனம்புரியாத அச்சவுணர்வைத் தோற்றுவித்திருந்தது.

அதிலும் அப்பகுதியில் உள்ள ‘சிறீமூர்த்தி அகம்’ என்ற இல்லத்தின் சுற்றுவட்டாரங்களில் சிவில் உடையில் படைப் புலனாய்வாளர்கள் நடமாடுவதும், அடிக்கடி வீட்டிற்குள் சென்று வருவதும் அங்கிருந்த மக்களிடையே அச்சம் கலந்த குழப்ப நிலையையே ஏற்படுத்தியிருந்தது.

சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 05.05.2005 அன்று மரண ஓலம் ஒலித்த வீடு அது. சிறீமூர்த்தி அகத்தின் குடும்பத் தலைவரான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓய்வுபெற்ற சாலைப் பரிசோதகரான கணபதிப்பிள்ளையின் மகள் அபிராமி (கலாமதி) அகால மரணமெய்தியிருந்தார். கணபதிப்பிள்ளையின் மகளைக் கடத்திச் சென்ற சிங்களப் படைப் புலனாய்வாளர்கள், அவரைப் படுகொலை செய்து அவரது உடலத்தைக் கிணறொன்றுக்குள் வீசியிருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதி நகுலனின் சகோதரி என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே அபிராமி கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். தங்கையின் மரண வீட்டில் பங்கேற்பதற்கு நீர்வேலிக்கு நகுலன் வருவது ஆபத்தானது என்பதால் உடலம் கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து 08.05.2005 இரத்தினபுரத்தில் உள்ள 58ஆம் இலக்கமுடைய வீட்டில் அவரது இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்னர் கிளிநொச்சியில் தகனம் செய்யப்பட்டது.

எந்தப் படைப் புலனாய்வாளர்களால் அபிராமி படுகொலை செய்யப்பட்டாரோ, அதே படைப் புலனாய்வாளர்கள் இப்பொழுது சர்வ சாதாரணமாக அபிராமியின் வீட்டிற்குள் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

‘மிலிற்ரறி இன்ரெலிஜென்ஸ்காரர் நிக்கிறதைப் பார்த்தால் ஏதோ கணபதிப்பிள்ளையற்றை வீட்டுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறதுக்கு நிற்கிற மாதிரி எல்லோ இருக்கு,’ கந்தசுவாமி கோவிலுக்கு வந்திருந்த ஒருவர் இவ்வாறு கூறினார். அவரது கணிப்பில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

‘இரண்டு மூன்று நாளைக்கு முதல் தான் இராணுவப் பாதுகாப்போடை கணபதிப்பிள்ளையற்றை குடும்பம் திருகோணமலைக்குப் போய் வந்ததாக கண்மணியம்மாவுக்கு நெருக்கமான பிள்ளை ஒன்று சொல்லிச்சு,’ இப்படி அங்கு நின்ற முதியவர் ஒருவர் கூறினார். கண்மணியம்மா என்பது கணபதிப்பிள்ளையின் மனைவியின் பெயர். மீண்டும் முதியவர் பேசினார்: ‘மகனைப் பார்க்கிறதுக்குப் போனவையள் என்று ஊருக்குள் கதைக்கீனம்.’

‘எந்த மகன்? புண்ணியமூர்த்தியா? கிருஸ்ணமூர்த்தியா?’

‘சிவமூர்த்தி.’

‘சிவமூர்த்தி இரண்டு வருசத்துக்கு முதல் மட்டக்களப்பில் ஆமியோடை நடந்த சண்டையில் வீரச்சாவு அடைந்தவர் என்றெல்லோ கதைச்சவையள்? தளபதி நகுலனை ஆமி போட்டுத் தள்ளிப் போட்டுது என்றெல்லோ இஞ்சையிருக்கிற ஈ.பி.டி.பி ஆட்கள் புழுகிக் கொண்டு திருஞ்சவங்கள்.’

‘இல்லை. ஆள் உயிரோடு இருக்குதாம். இலண்டனில் இருக்கிற கிருஸ்ணமூர்த்தியோடையும், நோர்வேயிலை இருக்கிற புண்ணியமூர்த்தியோடையும் ஆள் தொடர்பிலை இருந்ததாம். சண்டையள் நடந்து கொண்டிருக்கேக்குள்ளை ஆள் அம்பாறையில் நிண்டதாகக் கதைச்சவையள். ஆனால் இப்ப ஆமியின்ரை மிலிற்ரறி இன்ரலிஜென்ஸோட சேர்ந்து ஆள் திருகோணமலையில் நிக்கிறதாகக் கதை வருகுது.’

***

தமிழகத் தலைநகர் சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றை அவர் அடைந்த பொழுது, அதன் வாயிற் கதவுகள் வெளிப்புறத்தில் பூட்டுப் போட்டுப் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் உள்ளே ஆட்கள் இருப்பதற்கான சமிக்ஞையாக ஐந்து சோடிக் காலணிகள் நிரையாக வைக்கப்பட்டிருந்தன.

அப்பொழுதுதான் வந்தவருக்கு மூளையில் பொறி தட்டியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவரும், கருணாவின் பிளவிற்குப் பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருமலை மாவட்டங்களுக்கான தலைமைச் செயலக இணைப்பாளராக விளங்கியவருமான சுரேஸ் (அமுதன்) அவர்களைச் சந்திக்குமாறு அனுப்பி வைத்தவர் இப்படிக் கூறியிருந்தார்: ‘சுரேஸ் அண்ணை இந்தியாவில் வந்து நிற்கிறது றோவுக்கோ அல்லது கியூ பிராஞ்ச் பொலிசுக்கோ தெரிஞ்சால் சிக்கலாகி விடும். நீங்கள் அவரின்ரை வீட்டுக்குள் முன்பக்க வாசலால் போக வேண்டாம். முன் பக்கத்தால் போனால் ஆரார் வந்து போகீனம் என்று ஆரும் நோட்டம் விட்டுப் பொலிசுக்கு அறிவிச்சுப் போடுவாங்கள். பக்கத்தாலை போய் பின் கதவைத் தட்டினீங்கள் என்றால் சுரேஸ் அண்ணை வந்து கதவைத் திறப்பார்.’

ஆனால் வந்தவருக்கு ஒரு குழப்பம். இந்தியப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக முன்கதவை சுரேஸ் அவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது சரியான நடைமுறைதான். ஆனால் முன்கதவை மூடி விட்டு வெளியில் காலணிகளை நிரையாக அடுக்கி வைப்பதில் என்ன சூட்சுமம் இருக்க முடியும்? வெளியில் இருந்து கண்காணிப்பவர்கள், உள்ளே யாரோ சிலர் இருக்கின்றார்கள் என்றல்லவா ஐயமுறுவார்கள்?

சுற்றுமுற்றும் பார்த்தவாறு பக்கவாட்டில் காணப்பட்ட ஓடையூடாகப் பின்புறம் நோக்கி நடந்து சென்றவரின் கால்கள் திடீரென அசைய மறுத்தன. வீட்டின் பின்புறத்தில் இருந்து ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் யாரோ சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. ஒரு கணம் அங்கு நின்றவாறு என்ன பேசப்படுகின்றது என்பதை அவர் உற்று செவிமடுத்தார். உள்ளேயிருந்து சுரேஸ் அவர்களின் குரல் அலறிக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு அடி எடுத்து இடதுபுறமாகத் திரும்பிய பொழுது சாளரங்கள் வழியாக யாருடனோ தொலைபேசியில் சுரேஸ் உரையாடிக் கொண்டிருந்தார்.

‘தம்பி, நீர் யேர்மனியில் ஏ.சி ரூமுக்குள்ளை இருந்து கொக்கக் கோலா குடிச்சுக் கொண்டு கதைக்கிறீர். நாங்கள் இஞ்சை எப்ப கியூ பிராஞ்ச்காரங்கள் எங்களைத் தூக்குவாங்கள் என்று பயந்து கொண்டிருக்கிறம். அங்கை காட்டுக்குள் ராமும், நகுலனும் கஸ்ரப்பட்டுக் கொண்டு இருக்கீனம். நீர் ஏ.சி ரூமுக்குள் கொக்கக் கோலா குடிச்சுக் கொண்டு கே.பி அண்ணையைக் குறை சொல்லிக் கொண்டு இருக்கறீர்.’

உள்ளே தொலைபேசியில் சுரேஸ் அலறிக் கொண்டிருந்தது, நெருக்கமான குடியிருப்புக்களைக் கொண்ட அந்தப் பகுதியில் குறைந்தது நான்கு தெருக்கள் வரை ஒலித்திருக்கும் என்பது வந்திருந்தவருக்கு புரிந்தது. அதுவும் வீட்டை வெளிப்புறத்தில் பூட்டி, வெளியில் நிரையாக ஐந்து சோடி காலணிகளை அடுக்கி வைத்து விட்டு சத்தமாக சுரேஸ் உரையாடிக் கொண்டிருக்கின்றார் என்றால், இந்தியப் புலனாய்வுப் பிரிவினரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு சென்னையில் அவர் தங்கியிருக்கின்றார் என்று கூறப்படுவது ஏமாற்று வேலை என்பது வந்திருந்தவருக்குப் புரிந்தது.
 

***

நகுலனுடன் கதைக்குமாறு கே.பி கொடுத்த 0094719501597 என்ற எண்ணிற்கு அவர் அழைப்பை எடுத்த பொழுது மறுமுனையில் சிங்கள மொழியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சிறீலங்கா தொலைதொடர்பு நிறுவனத்தின் பணியாளரான பெண் ஒருவரின் குரல் ஒன்று ஒலித்ததே தவிர, தொலைபேசி மணியொலி எழும் சத்தம் எதுவும் கேட்கவில்லை. 

உடனே கே.பி கூறினார். ‘ஆள் நிற்கிற இடத்தில் நெற்வேர்க் இல்லை போல இருக்கு. அதுதான் மெசேஜ் வருகுது. நான் உங்களுக்கு கேணல் ராமின்ரை நம்பரைத் தாறன். அடியுங்கோ.’ இவ்வாறு கூறிவிட்டு 0094777140637 என்ற தொலைபேசி எண்ணை கே.பி வழங்கினார்.

அந்த எண்ணிற்கும் வந்திருந்தவர் அழைப்பை எடுத்த பொழுது, முன்னர் நகுலனின் எண்ணிற்கு அழைப்பை எடுத்த பொழுது ஒலித்த சிங்கள மொழியிலான ஒலிப்பதிவு செய்யப்பட்ட அதே பெண்ணின் குரல் ஒலித்தது.

உடனே இன்பம் அவர்களைப் பார்த்து சைகை மொழியில் கே.பி அவர்கள் ஏதோ கூற, தனது கைபேசியுடன் இன்பம் அவர்கள் உள்ளே சென்றார்.

ஆனால் வந்திருந்தவர் எல்லா விடயத்தையும் சந்தேகக் கண்ணுடன் அவதானித்துக் கொண்டிருந்தார். அவரது மனதில் அந்தக் கணம் எழுந்த கேள்வி இதுதான்: நகுலனும், ராமும் தமிழீழத்தின் காடுகளுக்குள் நிற்கின்றார்கள் என்றால் மறுமுனையில் சிறீலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பணியாளர் ஒருவரின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் ஏன் சிங்கள மொழியில் மட்டும் ஒலிக்கின்றது? யாழ்ப்பாணத்திற்கோ அல்லது மட்டக்களப்பிற்கோ தொலைபேசி எடுத்து, மறுமுனையில் அழைப்புக் கிடைக்கவில்லை என்றால் முதலில் சிங்கள மொழியிலும், பின்னர் தமிழ் மொழியிலும் பெண் ஒருவரின் குரல் ஒலிக்கும். அதேநேரத்தில் சிங்களப் பகுதியில் நிற்கும் ஒருவரது தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் மட்டுமே தனிச்சிங்களத்தில் மறுமுனையில் சிறீலங்கா தொலைத்தொடர்புப் பணியாளரின் குரல் ஒலிக்கும். அப்படி என்றால் நகுலனும், ராமும் சிங்களப் பகுதியொன்றுக்குள் நிற்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்?  

இந்தக் கேள்வியுடன் மீண்டும் நகுலனின் தொலைபேசி எண்ணிற்கு அவர் அழைப்பை ஏற்படுத்தினார். அப்பொழுது மறுமுனையில் மணியொலி எழுப்பப்படும் சத்தம் கேட்டது. ஆனால் உடனடியாக எவரும் அழைப்பை எடுக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பின்னர் மறுமுனையில் ‘ஹலோ’ என்று ஒரு குரல் ஒலிக்க, சமநேரத்தில் ‘இது சக்தி தொலைக்காட்சியின் பிரதான செய்திகள்’ என்ற சொல்லாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘ஒரு நிமிசம் பொறுங்கோ, வெரித்தாஸ் ரேடியோவை நிற்பாட்டி விட்டு வருகிறேன்,’ என்று மறுமுனையில் நகுலன் கூற, அவரது குரலோடு சமநேரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த எல்லா ஒலிகளும் நின்றன. அப்பொழுது மீண்டும் மறுமுனையில் நகுலன் பேசினார்: ‘சொல்லுங்கோ.’

உடனே வந்திருந்தவரின் தொலைபேசியை எட்டி வாங்கிய கே.பி: ‘நகுலன் நான் பத்மநாதன் அண்ணை கதைக்கிறன். இஞ்சை உங்களோடை கதைக்க வேண்டும் என்று ஒருத்தர் ஒற்றைக் காலில் நிற்கிறார். அவருக்கு என்னில் நம்பிக்கை இல்லையாம். ஒருக்கா நிலைமையைச் சொல்லுங்கோ.’

‘அப்பிடியே? சரி ஆளிட்டைக் குடுங்கோ.’ இவ்வாறு நகுலன் கூறியதும் வந்திருந்தவரிடம் மீண்டும் அவரது தொலைபேசியை கே.பி கொடுத்தார்.

‘நான் வெரித்தாஸ் ரேடியோ கேட்டுக் கொண்டு இருந்தனான். அதுதான் போன் அடிச்சது கேட்கவில்லை. நீங்கள் சொல்லுங்கோ,’ என்றார் நகுலன்

அப்பொழுது வந்திருந்தவர் கேட்டார்: ‘நீங்கள் எங்கை நிற்கிறீங்கள்?’

‘நாங்கள் இப்ப திருகோணமலையில் கடவாணைக்குளம் என்ற காட்டுக்குள் நிற்கிறோம். கெதியிலை வன்னிக்குப் போறதாக இருக்கிறம். அங்கை எங்கடை பேஸ் ஒன்று செற்ரப் பண்ணியிருக்கிறம்.’ என்றார் நகுலன்.
 
அந்தக் கணத்தில் வந்திருந்தவரின் மனதில் மீண்டும் பல கேள்விகள் எழுந்தன. காட்டுக்குள் நிற்பதாகக் கூறிக் கொண்டு நகுலன் தொலைபேசியில் உரையாடும் பொழுது சமநேரத்தில் சக்தி தொலைகாட்சியின் செய்தி ஒலிபரப்பாகின்றது. அதைப் பற்றித் தான் எதுவும் கேட்காத பொழுதும், வெரித்தாஸ் வானொலியைத் தான் செவிமடுத்துக் கொண்டிருந்ததாக நகுலன் கூறுகின்றார். சரி அதுதான் போகட்டும், காட்டுக்குள் இருந்தவாறு வானொலிப் பெட்டியை அலற விட்டால், ஒலி வரும் திசையைப் பின்தொடர்ந்து வந்து பதுங்கித் தாக்குதல் எதையும் சிங்களப் படையினர் செய்ய மாட்டார்களா?

அப்பொழுது நகுலனிடம் அவர் கேட்டார்: ‘நீங்கள் சத்தமாக ரேடியோவைப் போட்டால் காட்டுக்குள் வாற ஆமிக்காரன் அம்புஸ் அடிக்க மாட்டானோ?’

(மடையுடைப்புத் தொடரும்)

நன்றி: ஈழமுரசு (20.02.2018)