ஒரு துளி: பாரிஸ் தமிழ்ப் பெண்

April 09, 2017

“தமிழ்நாட்டில் நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கும் காட்டன் சட்டை இங்கே நூற்றம்பது ப்ராங்க் போட்டிருக்கிறான்”.

“எங்கே?”

“ஷான் டிலிஸியில்”

“அங்கே எல்லாமே விலை அதிகம்தான். அங்கே ஃப்ரெஞ்சுக்காரர்கள் வாங்க மாட்டார்கள்.”

“இருந்தாலும் எங்கள் ஊர் சில விஷயங்களில் ரொம்ப சீப்தான்” என்றாள் என் மனைவி.

“ஒப்புக்கொள்கிறேன்”

“நீங்கள் தமிழ்நாட்டில் என்ன வாங்கினீர்கள்?”

“காட்டுகிறேன்” என்று சென்றார்.

என்ன வாங்கியிருப்பார்? மகுடி, புல்லாங்குழல், பிரம்புக் கூடை... இதைவிட்டால் நம் ஊரில் வேறு என்ன இவர்களுக்கு?

அப்போது அடுத்த அறையில் அழுகைச் சத்தம் கேட்டது. ச்ச்ச் என்று சமாதானம் கேட்க அவர் வெளிப்பட்டபோது, கையில் குழந்தை வைத்திருந்தார். கறுப்பாக ஒரு பெண் குழந்தை. சுமார் மூன்று வயதிருக்கும். புதுசாக கவுன் போட்டுக்கொண்டு கண்களில் கண்ணீருடன் எங்களை, குறிப்பாக என் மனைவியை வினோதமாகப் பார்த்துக் கொண்டு.

அவர் அதைப் பொம்மை போலத்தான் கையில் வைத்திருந்தார். அதனுடன் ஃப்ரெஞ்சில் அதன் கன்னத்தை நிரடிக்கொண்டு பேசினார். அது திரும்பிக்கொண்டு அவர் தோளில் சாய்ந்துகொண்டது.

“நான் தமிழ்நாட்டில் இவளை வாங்கினேன். இருநூற்றைம்பது ரூபாய். சுமார் நூற்றிருபது ப்ராங்க். உங்கள் காட்டன் சட்டையைவிட விலை குறைவு” என்று சிரித்தார்.

உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட, சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி) எனும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாரிஸ் தமிழ்ப் பெண்’ எனும் சிறுகதையிலிருந்து...

செய்திகள்