ஒரு மரணம்- அது பற்றிய அனுதாபசெய்திகள் பற்றிய பார்வை - ச ச முத்து

December 11, 2016

தமிழகமுதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமாகி அவரை புதைத்து புதைகுழிமீது அழுத்தமாக சீமேந்தும் பூசியாகி விட்டது. உடல் போயஸ்தோட்டத்திலும் ராஜாஜி மண்டபத்திலும் வைக்கப்பட்டிருந்த பொழுதில் மௌனமாக இருந்த அனைத்து ஊடகங்களும் இப்போது பிரேதபரிசோதனையை தொடங்கி விட்டுள்ளன. அது நமக்கு தேவையில்லை..

நமக்கு தேவையானது எதுவென்றால் ஜெயலலிதா இறந்தபோது நமது ஈழத்து உறவுகள் சமூகவலைத்தளங்களிலும் இணையங்களிலும் தெருவோரத்தில் தொங்கவிட்டிருந்த பதாகைகளிலும் தெரிவித்திருந்த ஜெயலலிதா பற்றிய வாசகங்கள் பற்றியதானது..

ஒரு மகத்தான விடுதலை அமைப்பு மௌனமாகியுள்ள இந்த பொழுதில் வழிகாட்டுதல் ஏதுமற்ற ஒரு மக்கள்கூட்டம் இப்படித்தான் நடந்துகொள்ளும் என்பது யதார்த்தம் என்ற போதிலும் அது பற்றிய சில கேள்விகள் சில உரையாடல்களை நடாத்திட வேண்டிய தேவையுள்ளது..

முதலில் ஜெயலலிதாவின் மரணம் என்பது 4ம்திகதிக்கு முன்னர் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டிராத திடீர் மரணசெய்திதான். அதிலும்கூட ஒரு சூப்பர்பவராக தன்னை வெளிக்காட்டியபடி தேர்தல் பிரச்சார மேடைகளுக்குகூட உலங்குவானுர்தியில் வந்து இறங்கி மந்திரி பிரதானிகள் ஆகாயத்தையும் தரையையும் சேர்த்தே வணங்கி நிற்க ஒரு சக்கரவர்த்தினிக்கு உரிய கம்பீரத்துடன் காட்சி தந்த ஒருவரின் மரணச்செய்தி ஒருவிதமான அதிர்வு அலைகளை எழுப்புவது சாத்தியமே.

அதிலும் ஈழத்து தினசரி செய்திகளுக்கு அடுத்ததாக தமிழக சேதிகளையும் தமிழக சீரியல்களையும் உள்வாங்கும் ஒரு மக்களாகிய ஈழத்து தமிழர்களுக்கும்' அவரது மரணம் அதிர்ச்சியானதுதான். சந்தேகமில்லை.. அதிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காலப்பகுதியிலும் பின் இன்றுவரையான காலம்வரையிலும் பேசும்மொழியால் இனத்தால் ஒன்றான எட்டுக்கோடி மக்கள்வாழும் ஒரு மாநிலத்தின் முதல்வரின் மரணம் என்பது எமக்கு முக்கியமான ஒரு நிகழ்வுதான். அதிலும் எமது இனத்தின் ஒரு பெரும்பகுதி மக்கள் சோகத்துடன் மௌனமாக பார்த்து நிற்கும் மரணம் எமக்கு முக்கியமானதுதான்.

ஆனால் அந்த மரணித்த மனிதர் எமது விடுதலை இலட்சியத்துக்கு அல்லது எமது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஒரு இனஅழிப்பு உச்ச பொழுதில் எப்படியான எதிர்வினைகளை ஆற்றினார் என்பது இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியம். ஜெயலலிதாவை பொறுத்தவரையில் எமது தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் அவரது கருத்துகள் இரண்டு காலப்பகுதிகளை கொண்டு பார்த்தே ஆக வேண்டிய ஒன்று.

2009 மே 18க்கு முற்பட்ட ஒரு காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்துக்கு உற்சாகம் தரும் அனைத்து கருத்துகளையும் செயல்களையும் பதிவியிலும் அது இல்லாத பொழுதிலும் ஜெயலலிதா செய்தார். தற்காலிக போர்நிறுத்தம் என்று பொய்சொல்லி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து பழரசம் அருந்த சில மணித்தியாலங்களில் எறிகணை வீச்சியில் பல பத்து எமது உறவுகள் குழந்தைகள் கருகி மாண்டபோது ' மழைவிட்டும் தூவானம் விடவில்லை ' என்று எள்ளலுடன் கடந்த கருணாநிதியின் கருத்துக்கு கொஞ்சமும் குறைந்திடாத அளவிலேயே ' போர் என்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்' என்ற ஜெயலலிதாவின் கண்டுபிடிப்பும் இருந்தது..

ஆனால் எல்லாம் முடிந்து எமது உன்னதமான விடுதலை அமைப்பு சிதைந்து பின்வாங்கி மௌனமாகி எமது மக்களும் மண்ணும் சிங்களத்தால் கைப்பற்றுவிட்டிருந்த 2009 மே 18க்கு பின்னர் அனைத்து தமிழர்களும் உளவியலால் திசையறியாத குழப்பத்தால் வீழ்ந்தே கிடந்த போது எமக்கு ஓரளவுக்கு தன்னும் உந்துதல் தந்த நிகழ்வுகள் என்று சிலவற்றை சொல்லலாம்.

மகிந்த லண்டனுக்கு வந்தது தொடங்கி இந்த செப்டம்பரில் யாழில் நடந்த எழுக தமிழ் வரை இந்த உந்துதல்தந்தவை இருக்கின்றன. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இவற்றில் தமிழ்நாட்டில் மூன்று நிகழ்வுகளை சொல்லலாம்.

1) தனது பேச்சால் தனக்கு பின்பாக கொஞ்சம்தன்னும் இளைஞர்களை திரட்டி தமிழ்விடுதலை பற்றி பேசிய பேச்சுகளாலும், தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வீழ்ச்சியை இலக்கு வைத்து செய்துமுடித்ததாலும் சீமானும்,

2) லயோலா கல்லூரியில் உண்ணாவிரதம் இருந்து ஆரம்பித்து முழு தமிழகத்தையும் ஓரிரு வாரங்கள் முழுதாக ஸ்தம்பிக்க வைத்த அந்த மாணவசக்தி (எதற்குமே எதுகை மோனை பேசி சமாளித்து தப்பும் கருணாநிதிகூட இந்த மாணவசக்தியின் பெரும் எழுச்சி கண்டு காங்கிரசுடனான தேன்நிலவை முறிக்க வைத்தது பெரும் சாதனை)

3)ஒரு மாநில சட்டசபையின் தீர்மானங்களின் அதிகார வீச்சு எல்லை எதுவரை என்று முழுதாக அறிந்தே இருந்தாலும்கூட சிங்களம் நடாத்தியது இனப்படுகொலை என்றும் சிங்களதேசத்தின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழீழவிடுதலைக்காக பொதுவாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவும் எமக்கு ஓரளவு உந்துதல் தந்தவர்கள் என்று குறிப்பிடலாம்.

அதில் இப்போது ஜெயலலிதா மரணமாகி விட்டார். அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும்போது தெரிவிக்கும் வாசகங்களில் மிக முக்கியமான கவனிப்புகள் இருந்தே ஆக வேண்டும். வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை வீசிடும் ஒரு இனமாக இருந்துவிடல் கூடாது. ஏனென்றால் தம்மை சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்து கொண்டு போங்கள் என்று உத்தரவிட்ட வரலாறுகளையும் இதோ நான் போகிறேன். இலக்கை அழிக்கிறேன் என்று சென்று காற்றில் கலந்த கரும்புலிகள் நினைவுகளையும் பல ஆயிரமாயிரம் அர்ப்பணவரலாறுகளின் சாட்சியங்களாக விழங்கிடும் ஒரு இன மக்கள் என்ற முறையில் யாரையும் அளவுக்கு மிஞ்சிய சோடணைகளால் ஆராதிக்க வேண்டியது இல்லை..

ஜெயலலிதாவுக்கு நான் எந்தவொரு அனுதாப வார்த்தையோ எதுவுமே எழுதவில்லை.. ஆனால் எழுதியவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். எழுதும்போது ஒரு வரியில் நாசுக்காக தன்னும் இனஅழிப்பின் போதான அவரது கருத்துகள் எம்மை நோகவைத்ததை எழுதியே ஆக வேண்டும்.

அதனை ஜெயலலிதா படிக்க போவதில்லை என்பது உண்மை என்றாலும்கூட இப்போது உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அது ஒரு சேதியை சொல்லும் இல்லையா.. மரணித்தாலும்கூட அனுதாபத்துடன் கூடவே தாங்கள் செய்த துரோகங்களையும் தமது வரலாறு மீது இவர்கள் எழுதி விடுவார்கள் என்ற சேதி அதுவாக இருக்கும். இரண்டாவது ஜெயலலிதாவின் அனுதாப செய்திகளில் அவர் ஏதோ ஆணாதிக்கத்தை உடைத்தெறிந்த பெண்விடுதலை தெய்வம் போல வர்ணிக்கப்பட்டுள்ளதை படிக்கும்போது சிரிப்பதா அழுவதா..

ஓ. பன்னீரும் மற்ற அமைச்சர் பிரதானிகள் முக்கியஸ்தர்களை முதுகு வளைய நிற்க வைத்துவிட்டால் ஆணாதிக்கத்தை வென்றதாக அர்த்தம் இல்லை. ஓ. பன்னீரும் மற்றவர்களும் ஜெ.க்கு மட்டும் இல்லை நாளைக்கு சசிகலா காட்டும் இன்னொரு தினகரனுக்கோ ஏன் நடராசனுக்கோ கூட இப்படித்தான் கும்பிடு போட்டு நிற்பார்கள். ஓ பன்னீர் வகையறாக்கள் எந்த பாலிலும் சேராத அடிமைகள். பெண்விடுதலையை ஜெயலலிதா ஆட்சியல் இருந்த இந்த ஆறுமுறைகளில் எந்தளவுக்கு செய்தார் என்பது பெரிய கேள்விதான்.

தனது கட்சியில்கூட முப்பதுசதவீத பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத வீராங்கனைதான் (?) இனிமேல் தன்னும் இப்படியான மரணங்கள் நிகழும்போது வெளியிடும் அறிக்கைகள் பதாகைகள் பதிவுகள் என்பனவற்றில் பாவிக்கப்படும் வாசகங்களில் கவனம் செலுத்துதல் நன்று.

இப்படியான மரணங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் அந்த மக்களில் எமக்கான நட்புறவு சக்திகளை உருவாக்க வேணும் என்ற நோக்கம் ஒன்றே முக்கியம். தவிர செத்து போனவரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பாடும் பாணபத்திர ஓணாண்டி கவிதைகள் அல்ல.

இந்த நேரத்தில் இதற்கு சம்பந்தம் இல்லாதுவிட்டாலும்கூட ஒரு கேள்விஎழுகின்றது ஜெயலலிதா கருத்துகளால் சொன்னார்.ஆனால் செயலில் இனஅழிப்பு உச்சத்தின் போது மகிந்தவின் ஆயுதப்படைகளுடன் வலம் வந்து கொலைகளை செய்த புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இப்போது தமிழ்மக்கள் பேரவையில் இருக்கிறார். அவர் நாளைக்கு செத்தாலும்கூட இப்பிடித்தான் அவரை விடுதலையின் முன்னோடி, எமது தேசதந்தையே என்றெல்லாம் எழுதுவீர்களா..

செய்திகள்
செவ்வாய் May 01, 2018

 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில்