ஓநாய்களிடம் ஆடுகளை விலைபேசும் மேய்ப்பர் - கலாநிதி சேரமான்

Tuesday October 17, 2017

‘தமிழ் மக்களின் ஒரு தொகுதியினரால் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களிடம் இந்த வேண்டுகையை நான் விடுக்கின்றேன். ஐயன்மீர், தமிழ் மக்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும், அவர்களுக்கு நீதி கிட்டுவதற்கும் துணிச்சலுடனும், முதுகெலும்புடனும் செயற்படுமாறு ஒரு சமயத் தலைவன் என்ற வகையில் நான் உங்களைப் பணிவுடன் வேண்டுகின்றேன். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு நீங்கள் முற்பட வேண்டும், அல்லது நீங்கள் அமைதி காப்பதால் தமிழ் மக்களின் அபிலாசைகள் பாதிப்படையும் என்பதைப் புரிந்து கொண்டு அரசியலில் இருந்து நீங்கள் ஒதுங்கிக் கொள்வதற்கான காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் தலைமைப் பொறுப்புக்களில் இருந்து நீங்கள் விலகினால் எவ்வாறான சனநாயக ஆட்சிமுறைக்கும், அடக்குமுறைக்கும் தமிழீழ மக்கள் உட்பட்டுப் போராடுகின்றார்கள் என்பதையாவது உலகம் உணர்ந்து கொள்ளும்.’

வாசகர்களே, மேற்கண்டவாறு எழுதியவர் யார் என்று உங்களுக்கு எண்ணத் தோன்றுகின்றதா? இது ஒரு கத்தோலிக்க மதகுருவால் 17.04.2000 அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் இறுதிப் பந்தி. இரா.சம்பந்தர் தொடக்கம் ஆனந்த சங்கரி வரையான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் சந்திரிகா அம்;மையாருக்குத் துதிபாடிக் கொண்டிருந்த பொழுது இம்மடல் குறித்த கத்தோலிக்க மதகுருவால் எழுதப்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றொரு கட்சி தோற்றம் பெற்றிருக்கவில்லை.

இம் மடலை எழுதிய கத்தோலிக்க மதகுரு, மூன்றரை ஆண்டுகள் கழித்து 01.11.2003 அன்று அமெரிக்காவின் நியூ ஜேர்சி நகரில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் உரையாற்றும் பொழுது தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒரு தற்காப்புப் போராட்டம் என்று குறிப்பிட்டதோடு, உலகின் வல்லாதிக்க சக்திகளின் அழுத்தங்களுக்குத் தமிழர்கள் வளைந்து கொடுக்கத் தேவையில்லை என்றும் முழக்கமிட்டார்:

‘அநீதியான முறையில் நான் அடக்கப்பட்டு, அடக்குமுறையாளனால் நிலத்தில் அடித்து வீழ்த்தப்பட்டால், எனது சகல பலத்தையும், எனது கையில் கிடைக்கக்கூடிய எந்த ஆயுதத்தையும் பிரயோகித்துச் சண்டையிடும் உரிமை எனக்கு உண்டு. இந்த உலகமும், அதன் அமைப்புக்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டங்களையும், போதனைகளையும் அடக்கப்படுவோர் மீது மட்டுமே பிரயோகிப்பதோடு, சரியான நேரத்தில் அடக்குமுறையாளன் மீது குற்றம் சுமத்துவதற்கோ, அன்றி அவனைக் கைது செய்வதற்கோ துணிவதில்லை. தமது சுயலாபங்களுக்காகக் கொடியவர்களின் பங்காளிகளாக உலகமும், அதன் அமைப்புக்களும் செயற்படுவதோடு, அது பயனைத்தராத சந்தர்ப்பத்தில் அப்பாவிகளுக்கு எதிராகவே தமது ஆயுதங்களைத் திருப்பிவிடுகின்றன.’

 

அந்த மதகுரு 1990ஆம் ஆண்டு பங்குனி மாதம் இந்தியப் படைகளின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்ததில் இருந்து சில காலத்திற்கு அங்கு ஆன்மீகப் பணி புரிந்தவர். அதனால் அவருக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது. அத்தோடு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை சந்திப்பதற்கும் அவருக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருந்தது.

பின்னர் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்த அவர், அங்கும், பிரித்தானியாவிலும் ஆன்மீகப் பணிபுரிந்து அருட்கலாநிதி பட்டம் பெற்றார். அத்தோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயம் பற்றிப் புலம்பெயர் தேசங்களில் நடைபெற்ற பல பேரணிகளில் உணர்வூர்வமாக உரையாற்றினார். ஆங்கில மொழியில் வெளிவந்த தமிழ்த் தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் விதம்விதமாகக் கட்டுரைகளை எழுதினார்.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று ‘தமிழர் விடுதலைப் போராட்டத்தின் வேதனைகளும், அபிலாசைகளும்’ என்ற மகுடத்தின் கீழ் 2004 ஆடி மாதம் ஆங்கிலத்தில் நூல் ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி சிங்கள மக்களை நோக்கி எழுதப்பட்ட பந்தியொன்றில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டார்:

‘இனப்பிரச்சினையையும், இனப்பதற்றத்தையும் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலோங்க வைக்கும் ஒற்றையாட்சி முறையை இறுகப் பற்றிப் பிடித்திருப்பதைத் தவிர்த்து, எல்லா இனங்களின் அபிலாசைகளும் புரிந்து கொள்ளப்பட்டும், மதிக்கப்பட்டும், உண்மையும், நீதியும் நிலைநாட்டப்படும் வகையில் ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப நாம் முன்வர வேண்டும். வரலாற்றினதும், இக்காலத்தினதும் உண்மைகளை நேர்மையுடனும், நீதியின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவும் துணிவுடன் நாம் எதிர்கொள்வதோடு, சமாதானத்துடனும், ஒத்துழைப்புடனும் ஒரே நாட்டிற்குள் நல்ல அயலவர்களாக, எவராலும் எவரும் ஆதிக்கத்திற்கு ஆளாக்கப்படும் அச்சமின்றி வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதிபூண வேண்டும்.’

 

அத்தோடு அந்த மதகுரு நின்று விடவில்லை. தான் எழுதிய நூலின் பிரதியொன்றையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைத்தார். தனது கையொப்பத்துடன் 31.07.2004 அன்று அவர் அனுப்பிய நூலில் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘உண்மை எங்கள் விடுதலைக்கு வழிவகுக்கும்’.

கிறித்துவ சமய நூலான பைபிளின் வார்த்தைகளில் கூறுவதானால், அன்று அந்த மதகுரு ஒரு நல்ல மேய்ப்பர் போன்றே நடந்து கொண்டார். ஓநாய்களின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக நாடெங்கிலும், உலகெங்கிலும் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஆடுகளுக்கு வழிகாட்டும் பல மேய்ப்பர்களில் ஒருவராகவே அந்த மதகுருவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பார்த்தார்கள்: அவரை மதித்தார்கள். 2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் நாளன்று தமிழீழத்தைக் கடற்கோள் தாக்கிய பொழுது, வன்னிக்கு ஓடோடிச் சென்று மக்களுக்கு உதவிகள் புரிந்தார். அது அவர் மீது தமிழீழத் தேசியத் தலைவர் கொண்டிருந்த மதிப்பை உயர்த்தியது.

இவ்வாறு ஒரு நல்ல மேய்ப்பராகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களாலும், ஈழத் தமிழர்களாலும் மதிக்கப்பட்ட இந்த மதகுரு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈழத்தீவிற்குப் பயணம் செய்திருந்தார். தனது பயணம் பற்றிக் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த சண்டே லீடர்’ பத்திரிகைக்கு அவர் செவ்வியளிக்கையில், தற்பொழுது ஆட்சியில் இருக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் போற்றிப் புகழ்ந்ததோடு, இனப்பிரச்சினைக்கான தீர்வாகக் கடந்த மாதம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கும் திட்ட வரைபையிட்டுப் பெருமிதம் வெளியிட்டார்:

‘தற்போதைய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட வரைபைப் பார்க்கும் பொழுது, கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பிற்கான வரைபுகள் ஒரு கட்சியின் சாதனையாக இருந்தது போன்று அல்லாது அவற்றில் இருந்து வேறுபட்டதாகவே இது உள்ளது எனலாம். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும், பொதுமக்களின் சகல தரப்பினரினதும் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்குப் புதிய அரசாங்கம் முற்படுகின்றது. சகல மக்களும் நல்லிணக்கத்துடன் சமாதானமாகச் சகவாழ்வு வாழ்வதற்கும், சகல தளங்களிலும் முன்னேற்றம் காண்பதற்குமான இலக்கின் முதற்படியாகவே இவ்வரைபு உள்ளது. இதில் சில நல்ல விடயங்கள் இருந்தாலும், தமிழ் மக்களினதும், சிங்கள மக்களினதும் எல்லா அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வரைபு இல்லைதான். எனவே இரு தரப்பினரும் சமமாக வெற்றிபெறுவதற்கு ஏதுவான வெளிப்படையான விவாதம் ஒன்று நடைபெறுவது அவசியமாகும். தமது சுயலாபத்திற்காக ஒரு பக்கத்தில் இருந்து விடயங்களை அணுகுவோர் இதனையிட்டு அதிருப்தியடைந்தாலும், இரு தரப்பிலும் இருக்கும் சிரமங்களைப் புரிந்து கொண்டு, இவ் வரைபின் நல்ல அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.’

 

இதை வாசிக்கும் பொழுது, மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் திட்ட வரைபைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் அண்மையில் புகழ்ந்துரைத்தமை வாசகர்களுக்கு நினைவில் வரலாம். ஒருவேளை சம்பந்தர் கூறிய கருத்தைத் தான் குறித்த மதகுரு வெளியிட்டார் என்றும் இப்பத்தியில் நாம் தவறாக எழுதுகின்றோம் என்றும் வாசகர்கள் நினைக்கக்கூடும். ஆனாலும் உண்மை அவ்வாறு இல்லை.

‘உண்மை எங்கள் விடுதலைக்கு வழிவகுக்கும்’ என்று பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது கைப்படத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மடல் எழுதிய அதே மதகுரு தான் இப்பொழுது இவ்வாறு கூறியிருக்கின்றார். அவர் வேறு யாருமல்ல: உலகத் தமிழர் பேரவையின் தலைவரான எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார்தான் இவ்வாறு கூறியுள்ளார்.

இத்தோடு இம்மானுவேல் அடிகளார் நின்றுவிடவில்லை. இறுதிப் போரில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக சிங்கள மக்களிடையே தகுந்த விழிப்பூட்டல்களை மைத்திரி-ரணில் அரசாங்கம் மேற்கொண்டால் குற்றவாளிகளைத் தண்டிப்பது கடினமாக இருக்காது என்றும், புதிய கண்டுபிடிப்பொன்றையும் இம்மானுவேல் அடிகளார் வெளியிட்டிருக்கின்றார்.

மேலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் விடுமுறையில் நாட்டுக்கு வருவதோடு மட்டும் நின்று விடாது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்குக் காத்திரமான முறையில் உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தனது செவ்வியில் இம்மானுவேல் அடிகளார் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியில் தமிழீழம் இருந்த பொழுது இம்மானுவேல் அடிகளார் வெளியிட்ட கருத்துக்களையும், இன்று அவர் வெளியிடும் கருத்துக்களையும் நாம் நுணுகி ஆராயும் பொழுது இரண்டு விடயங்கள் தெளிவாகின்றன. அன்று ஒரு நல்ல மேய்ப்பராகவும், தமிழர்களின் குரலாகவும் இம்மானுவேல் அடிகளார் திகழ்ந்ததார். இன்று சிங்கள அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாறி ஆடுகளை ஓநாய்களிடம் விலைபேசும் தீய மேய்ப்பராக இம்மானுவேல் அடிகளார் மாறிவிட்டார்.

இம்மானுவேல் அடிகளார் கற்றுத் தேறி அருட்கலாநிதி பட்டம் பெற்ற பைபிளில், தமது இனத்தின் நலனில் அக்கறை கொள்ளாது சுயநலத்துடன் நடப்பவர்கள் பற்றிப் பல கனதியான வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. அவர்களைத் தீய மேய்ப்பர்கள் என்றுதான் பைபிள் விழிக்கின்றது.

இன்று இம்மானுவேல் அடிகளார் நடந்து கொள்வது போன்று, இற்றைக்கு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலை விட்டு யூதர்கள் புலம்பெயர்ந்து அலைந்துழன்ற பொழுது, அவர்களின் நலனுக்காகப் பாடுபடாது சுயநலத்துடன் அவர்களின் தலைவர்கள் நடந்து கொண்டார்கள். அப்பொழுது பபிலோனில் தங்கியிருந்த எசேக்கியல் என்ற யூதர்களின் தீர்க்கதரிசியிடம் பின்வருமாறு இறைவன் அறிவித்தாராம்:

‘தங்களின் வயிற்றை மட்டும் நிரப்புவதில் கவனம் செலுத்தும் இஸ்ரேலின் மேய்ப்பர்களுக்குத் துன்பம் உண்டாகட்டும். இனி நானே எனது ஆடுகளைத் தேடிக் கொண்டு வருவேன். சிதறுண்டு கிடக்கும் தனது ஆட்டு மந்தைகளிடையே ஒரு நாளில் மேய்ப்பர் தேடுவது போன்று, இருளும் கருமேகமும் சூழ்ந்த இந்நாளில் எங்கெங்கு எனது ஆடுகள் சிதறுண்டு கிடக்கின்றனவோ, அவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்கு நான் விடுதலை அளிப்பேன். ஆட்களிடமிருந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அவை இருக்கும் நாடுகளில் இருந்து அவற்றை திரட்டி வந்து, அவற்றின் சொந்த நாட்டில் அவற்றை நான் குடியமர்த்துவேன்.’

 

பைபிளில் பொறிக்கப்பட்டுள்ள இவ் வாசகங்கள், தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை இரா.சம்பந்தரின் வழியில் சிங்களத்திடம் விலைபேசி விற்க முற்படும் இம்மானுவேல் அடிகளாருக்குச் சமர்ப்பணம்.

நன்றி: ஈழமுரசு (17.10.2017)