ஓவியர் புகழேந்தியின் “சே குவேரா” ஓவியக் காட்சி சென்னையில் தொடங்கியது

புதன் செப்டம்பர் 09, 2015

சென்னையில், ஓவியர் புகழேந்தியின் புரட்சியாளர் சே குவேராவின் ஓவியங்களைக் கொண்ட “புரட்சியின் நிறம்” தலைப்பிலான ஓவியக்காட்சி, நேற்று (செப்டம்பர் 8 – 2015), முதல் தொடங்கி, செப்டம்பர் 13 வரையில் நடைபெறுகின்றது.

 

கண்காட்சியின் தொடக்க நிகழ்வு, சென்னை தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் மேனிலைப்பள்ளியில், நேற்று (08.09.2015) மாலை எளிமையாக நடைபெற்றது.

 

ஓவியக்காட்சியை, இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மூத்தத் தலைவர் தோழர் தா. பாண்டியன் தொடங்கி வைத்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், நடிகர் திரு. சத்தியராஜ், ஊடகவியலாளர் திரு. ஞாநி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓவியர் கு. புகழேந்தி வரவேற்றுப் பேசினார்.

 

நிகழ்வில், திரளான இன உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு ஓவியங்களைப் பார்வையிட்டனர். பார்வையாளர் கையேட்டில், ஓவியங்களைப் பாராட்டியும், வாழ்த்தியும் அவரவர் தமது கருத்துகளை எழுதினர்.

 

இன்று முதல், செப்டம்பர் 13 வரை, 6 நாட்கள் நடைபெறும் இவ் ஓவியக் காட்சியில், புரட்சியாளர் சே குவேராவின் பல்வேறு கோண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும், இவ் ஓவியங்களைக் காணும் வகையில், நாளை முதல், நாள்தோறும், காலை 10 மணி முதல், மாலை 8 மணி வரையிலும், ஓவியங்களைப் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.