கடத்தப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன் ஆப்கானிஸ்தானில் மீட்பு

செவ்வாய் மே 10, 2016

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் முல்தான் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட அலி ஹைதர், 9-5-2013 அன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் அவரை கடத்திச் சென்றனர். இதை தடுக்க முயன்ற அவரது ஆதரவாளர்கள் இருவரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நடந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அலி ஹைதர் கிலானி உயிருடன் உள்ளாரா?, அல்லது, கடத்தல்காரர்கள் அவரை கொன்று விட்டார்களா? என்ற இருவேறு கருத்துகள் பாகிஸ்தான் மக்களின் மனங்களில் உலவி வந்தன. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு கூட்டுப் படைகள் அவரை உயிருடன் மீட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள கான்சி மாகாணத்தில் கூட்டுப் படைகளின் ராணுவ நடவடிக்கையின்போது அவர் மீட்கப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி சர்தாஜ் அஜிஸ், மற்றும் அலி ஹைதரின் தந்தையும் முன்னாள் பிரதமருமான  யூசுப் ரஸா கிலானிக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தொலைபேசி மூலம் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை உடனடியாக பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை காபுலில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.