கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதம் - செய்ய வேண்டியது என்ன?: வைகோ அறிக்கை

ஞாயிறு நவம்பர் 15, 2015

பெருமழை பெருவெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து போயிருக்கின்ற கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நானும் மக்கள் நலக் கூட்டணியின் மார்க்சிÞட் கம்யூனிÞட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தாமரைச் செல்வன், செல்லப்பன், இந்திய கம்யூனிÞட கட்சியின் மா.செ. மணிவாசகம், மாநிலக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி ஆகியோரும் கடந்த இரண்டு நாட்களாகச் சுற்றிப் பார்த்தோம்.

பெரிய காட்டுப்பாளையம், நடுக்காட்டுப் பாளையம், மேலக்காட்டுப் பாளையம், விசூர், நெய்வேலி, மருவாய், கரைமேடு, பின்னலூர், சேத்தியாத் தோப்பு, கொள்ளுமேடு, லால்பேட்டை, சர்வராஜன்பேட்டை, வீரநத்தம், பரிவளாகம், கூட்டுவழிச் சாவடி, துணிச்சரமேடு, துணிச்சரமேடு மண்டபம், சிதம்பரம், அண்ணாமலை நகர், மண்ரோடு, கொடிப்பள்ளம், கொடிப்பள்ளம் காலனி, பின்னத்தூர், தில்லை, விட்டல்கரை, சிங்காரக் குப்பம், கிள்ளை, கரிக்குப்பம், கண்ணகி நகர், பரங்கிப்பேட்டை, பச்சையால் குப்பம், கடலூர் நிவாரண முகாம், புருசோத்தம் நகர் ஆகிய ஊர்களுக்குச் சென்றோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தெருக்களுக்கும், குடிசைகளுக்கும் நேரடியாகச் சென்று சென்று பார்த்தோம்.

இரண்டு ஓடைகளில் பாய்ந்து வந்த காட்டாற்று வெள்ளத்தில், பெரியகாட்டுப் பாளையம் கிராமத்தின் மேட்டுப்பகுதியில் குடியிருந்த அருந்ததிய மக்கள் பத்துப் பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எட்டுப் பேர்; அதில் நான்கு பேர் சின்னஞ்சிறுவர்கள். அதில் ஏழு பேர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்வி என்ற பெண்ணின் சடலம் இன்னமும் கிடைக்கவில்லை. தேடுகின்ற முயற்சிகளில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இதற்குப் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் இரண்டு பேர் உயிர் இழந்தனர்.

வெள்ளத்தில் பலியாக இருந்த பலரை தீரமிக்க இளைஞர்கள் அருகாமையில் இருந்த ஒரு வீட்டின் மாடி விளிம்பில் சேலை துணிகளையும் கயிறையும் கட்டி மீட்டு பால்கனியில் ஏற்றிக் காப்பாற்றி இருக்கின்றார்கள். எண்ணற்ற குடிசை வீடுகள் இருந்த சுவடு தெரியாமல் அடித்துச செல்லப்பட்டு விட்டன. காரை வீடுகளும் இடிந்து கிடக்கின்றன.

பல பட்டதாரிகளின் கல்விச் சான்றிதழ்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. வீடுகளுக்குள் ஐந்து அடி உயரத்திற்குத் தண்ணீரும் சேறும் தேங்கியதில் பொருட்கள் அனைத்தும் நாசமாகி விட்டன. எங்கு பார்த்தாலும் அழுகையும் கண்ணீருமாக இருக்கின்றது.

இந்தத் துயரமான சூழலிலும் மனதிற்கு இதம் தரும் செய்தி என்னவெனில், உயிருக்குப் போராடிய அருந்ததிய மக்களை, வன்னிய சமுதாயத்தினரும், ஆதி திராவிட மக்களும் சேர்ந்து காப்பாற்றி உள்ளனர்.

மேலக்காட்டுப்பாளையம் என்கிற அருந்ததியர்கள் மட்டுமே வாழும் சிறிய கிராமத்து வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அங்கே ஒருகிராமம் இருந்த அடையாளமே தெரியாமல் போய்விட்டது. இந்தப் பகுதிக்கு எவருமே செல்லவில்லை என்பதை அறிந்து, மூன்று கிலோ மீட்டர் தொலைவு நாங்கள் நடந்தே சென்றோம். பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மிகவும் பாதிக்கப்பட்ட விசூர் கிராமத்திற்கு நாங்கள் சென்று பார்த்தோம். இங்கு மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர். ஊரின் ஒரு பகுதியையே வெள்ளம் புரட்டிப் போட்டு விட்டது.  பொருட்கள் அனைத்தும் நாசமாகி விட்டன.

நெய்வேலியில் இருந்து சிதம்பரம் வரை பாதிக்கப்பட்ட ஊர்களுக்குச் சென்றபோது, அங்கு வாழும் விவசாயிகள் தங்கள் வாழ்வே பாழாகி விட்டதாகப் புலம்பினார்கள்.

மாவட்டம் முழுமையும் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பயிர்த்தொழிலுக்காக விவசாயிகள் போட்ட முதல் எல்லாம் வீணாகி விட்டது. நஞ்சை நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வள்ளிக்கிழங்குப் பயிர் அழுகிப் போய்விட்டது. வாழைத் தோப்புகள் சரிந்து கிடக்கின்றன. கரும்புத் தோட்டங்கள், முந்திரி சவுக்கு மரங்களும் சாய்ந்து விட்டன. ஏராளமான பசுக்கள், எருமைகள் காளைகள், ஆடுகள் இறந்துள்ளன. 150க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளிலும், வீடுகளிலும் வளர்க்கப்பட்ட இலட்சக்கணக்கான கோழிகள் வெள்ளத்தோடு போய்விட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகப் பார்த்ததில், நீர்வழிப் பாதைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தக் கால்வாய்களில் விழல் செடிகளும், அமலைச்செடிகள், காட்டு ஆமணக்கு, ஆகாயத் தாமரையும் படர்ந்து, வாய்க்கால்களைப் பெருமளவு மூடுகின்றன. எனவே, ஆண்டுதோறும் புயல் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் அழிவைச் சந்திக்கிறது.

இவற்றை எல்லாம் அகற்றித் தூர் வாருகின்ற வேலையைக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசு செய்யவே இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்கள் வெட்டிய வீராணம் எனும் விஜயநாராயணம் ஏரி 18 கிலோமீட்டர் நீளமும், ஐந்தரை கிலோ மீட்டர் அகலத்தில் கடல் போலப் பெருகிக் கிடக்கும் ஏரி ஆகும். 34 வாய்க்கால்கள், அதற்கான மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து வருகின்ற காவிரித் தண்ணீர் கடைசியாக வீராணத்திற்கு வந்து,  இந்தப் பகுதியைச் செழிப்பாக்கி வந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இங்கு தூர் வாரும் வேலையே நடைபெறாதததால், விழல், அமலை, காட்டு ஆமணக்கு, ஆகாயத் தாமரை, கருவேல மரங்கள் வளர்ந்து, நீர்பிடிப்புப் பகுதிகளுக்கு உள்ளேயே ஆக்கிரமிப்புகளும் செய்யப்பட்டு அவை திட்டுக்களாக உருமாறி உள்ளன. இதனால், ஒன்றரை டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் இப்போது ஒரு டி.எம்.சி. தண்ணீர் கூடத் தேக்க முடியாது.

இப்போதைய அண்ணா தி.மு.க. அரசு வீராணம் தூர் வாருவதற்கு 40 கோடி ரூபாயை ஒதுக்கி, ஒப்பந்தப் புள்ளி கோரியபோதிலும், பின்னர் இதற்குப் பணம் ஒதுக்க முடியாது என்று கூறி நிறுத்தி விட்டது.

வீராணம் ஏரியின் மதகுகளைத் திறந்து தண்ணீர் விடக் கோரி விவசாயிகள் அறப்போர் நடத்தியபோது அதனைச் செவிமடுக்காத அரசு, இப்போது பலத்த மழை காலத்தில் அனைத்து மதகுகளையும் திறந்து விட்டது. அதனால் பாய்ந்த வெள்ளத்தாலும் விவசாய நிலங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது.

நிவாரணப் பணிகளில் நற்பெயர் ஈட்டிய கடலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ககன்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் நிவாரணப் பணிகளைக் கவனித்து வருகின்றார்கள். மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மருத்துவர்கள் சென்று கவனித்து வருகிறார்கள். மக்கள்  இருட்டில் தவிக்கின்றார்கள். மின்சார விநியோகத்தைச் சீரமைக்க, மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருந்தபோதிலும், நாங்கள் சென்ற பல கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை. மாற்றுத் துணிகள் இல்லை.  மண் எண்ணெய் விளக்கு கூட இல்லை. அதனால், எங்களுக்கு அரிசி கொடுத்தாலும் நாங்கள் எப்படிச் சமைப்பது? என்று கேட்கிறார்கள். இருட்டில் தவிக்கும் வீடுகளுக்குப் பெரிய மெழுகுவர்த்திகள் கொடுக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்காலிகத் தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்வதோடு, தொற்று நோய்கள் பரவ விடாமல் மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும்.

பல ஊர்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் கணக்கெடுப்பின் போது முறையாகக் கணக்கு எடுக்கவில்லை. இந்த ஊருக்கு இவ்வளவுதான் எண்ணிக்கை என்றும் சில அதிகாரிகள் கூறுகிறார்களாம். இது மிகத் தவறானது.

அரசுத் தொகுப்பு வீடுகள் வெள்ளத்தால் சேதமாகி இருந்தால் அதற்கு இழப்பீடு கிடையாது என்றும் அதிகாரிகள் சொல்கிறார்களாம். இதுவும் மிகத் தவறானது.

இவற்றை அரசு உடனே சரி செய்ய வேண்டும்.

வெள்ளத்தால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட அரசு முயலக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 43 பேர் உயிர் இழந்துள்ளனர் எனத் தெரிகிறது. நேற்றைய தினம் இரவில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கரிக்குப்பம் கண்ணகி நகர் எனும் இருளர் பழங்குடி மக்கள் வாழ்கின்ற பகுதியில் கிருத்திகா என்ற இரண்டரை வயதுப் பெண் குழந்தை வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்தது. அந்தக் குழந்தையின் சடலத்தை நாங்கள் பார்த்தோம்.

ஆனால், குழந்தைகளையும் கணக்கில் சேர்க்க மாட்டோம் என்று அதிகாரிகள் கூறியதாக வந்த தகவல் உண்மையாக இருக்குமானால், அது மனிதாபிமானம் அற்ற செயல் ஆகும்.

சிதம்பரத்திற்கு அருகே இருக்கின்ற மண்டபம் கிராமத்தில் ஐந்து நாட்களுக்கும் மேலாக உணவும், தண்ணீரும் இன்றி மக்கள் தவித்த சூழலில், அந்தக் கிராமத்தின் வழியாகப் பலமுறை சென்ற அண்ணா தி.மு.க. அமைச்சர்கள், அந்தக் கிராமத்து மக்களின் வேதனையைக் கேட்க முனையாததால், பெண்கள் அறப்போர் நடத்தினர். அவர்கள் தாக்கப்பட்டனர். ரகு என்கின்ற ஆறு வயதுச் சிறுவனும் அடிபட்டுள்ளான். அதைவிடக் கொடுமை காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், அறப்போரில் ஈடுபட்ட ஒரு கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி பாக்கியராஜ் என்ற இளைஞரின் மற்றொரு காலில் பூட்Þ காலால் மிதித்து, லத்திக் கம்பால் பலமாக அடித்து இருக்கின்றார்.  சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாக்கியராஜை நாங்கள் பார்த்தோம். மிருகத்தனமாக நடந்து கொண்ட இந்தக் காவல்துறை அதிகாரி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

உயிர் இழப்புகளை முறையாகக் கணக்கிட வேண்டும்; தலா பத்து இலட்ச ரூபாய் உதவித்  தொகை வழங்க வேண்டும்.

விவசாய நிலங்களில் மணல் புகுந்து களிமண்ணாகி பாழாகி விட்டதால், தமிழக அரசின் வேளாண்மைத்துறையின் பொறியியல் பிரிவு அந்த நிலங்களைச் செப்பனிட்டுத் தர வேண்டும்.

நெற்பயிருக்கும், வள்ளிக் கிழங்குக்கும் ஏக்கருக்கு ரூ 25,000; கரும்பு வாழை முந்திரி சவுக்கு ஏக்கருக்கு ரூ 1,50,000; மாடுகளுக்கு 50,000; ஆடுகளுக்கு 10,000 கோழிகளுக்கு 500 ரூபாயும் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும்.  

கடலூர் மாவட்டத்தை இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இன்னும் நான்கு நாள்களுக்குப் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், நிலைமை மேலும் மோசமாகக் கூடும் என்பதைக் கருதி, அரசு நிவாரணப் பணிகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

தாயகம்,     வைகோ
சென்னை - 8    பொதுச்செயலாளர்,
15.11.2015    மறுமலர்ச்சி தி.மு.க.