கடின உழைப்புடன் படித்தால் வெற்றி நிச்சயம்!

செவ்வாய் ஜூன் 05, 2018

 கடின உழைப்புடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்று நீட் தேர்வில் இந்தியாவிலேயே 12-வது இடத்தை பிடித்த தமிழக மாணவி கீர்த்தனா கூறியுள்ளார். 

‘நீட்’ தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா தமிழகத்தில் முதல் இடமும், அகில இந்திய அளவில் 12-வது இடமும் பிடித்து சாதனை படைத்தார். அவர் 720-க்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் சென்னை கே.கே.நகரில் உள்ள பி.எஸ்.பி.பி. பள்ளியில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்தேன். 11-ம் வகுப்பு முதல் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். உயிரியல் பாடத்தை நன்றாக படிக்கவேண்டும். அதை மறந்துவிடாமல் அடிக்கடி படித்தேன். இந்தநிலையில் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 12-ம் இடமும், தமிழகத்திலேயே முதலிடமும் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நீட் தேர்வு என்பது கஷ்டமும் அல்ல, எளிதும் அல்ல. பயிற்சி மையத்துக்கு போகாமலேயே மாணவர்கள் சாதிக்க முடியும். அதற்கு அவர்கள் கடினமாக உழைக்கவேண்டும். படிப்பதற்காக தனி கால அட்டவணை தயாரித்து கடின உழைப்புடன் படித்தால் வெற்றி நிச்சயம்.

எனது நண்பர்கள் பலர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்கள் அகில இந்திய அளவில் 100 மற்றும் 200 இடங்களை பெற்றுள்ளனர். நான் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் நடத்திய தேர்வுகளை எழுதியுள்ளேன். அந்த முடிவு வந்தபிறகு தான் எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்? என்று முடிவு செய்ய இருக்கிறேன். எனது தந்தை காசி, தாய் கவிதா லட்சுமி ஆகிய இருவருமே வைத்தியர்கள் தான்.  இவ்வாறு அவர் கூறினார்.